மறையாத நினைவுகள்... மக்களின் மனம் கவர்ந்த கருப்பு எம்.ஜி.ஆர்!

By ஸ்ரீதர் சுவாமிநாதன்

அது 1973-ம் ஆண்டு மே 11-ம் தேதி. அப்போதைய அரசியல் சூழலில் ‘வெளிவரவே வராது’ என்று பேசப்பட்ட எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் தமிழகமெங்கும் பல்வேறு தடைகளை மீறி ரிலீசானது. மதுரையில் மீனாட்சி திரையரங்கில் படம் வெளியானது. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி இருந்ததால் படத்தைப் பார்க்க கூட்டம் முண்டியடித்தது. அந்தக் கூட்டத்தில் அடித்துப் பிடித்து சட்டை கிழிய டிக்கெட் வாங்கி நண்பர்கள் புடைசூழ முதல் நாள் முதல் காட்சியில் பார்த்த தீவிர எம்.ஜி.ஆர். ரசிகனான 21 வயது கருப்பு நிற துருதுரு இளைஞனுக்கு பின்னாளில் தான் ‘கருப்பு எம்.ஜி.ஆர்.’ என்று புகழப்படுவோம் எனத் தெரியாது. 1952 -ம் ஆண்டு மதுரை திருமங்கலத்தில் பிறந்த விஜயகாந்த் சிறுவயது முதலே தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர்.

மதுரை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத்தில் உறுப்பினர். அவர் படங்கள் வெளியான அன்றே பார்த்துவிடுவார். அதுவும் தனியாகப் போகமாட்டார். குறைந்தது 10 நண்பர்களோடு செல்வது வழக்கம். படத்தைப் பார்த்துவிட்டு வந்து எம்.ஜி.ஆரின் நடிப்பு, நடனக் காட்சிகளில் சுறுசுறுப்பு, சண்டைக் காட்சிகளில் அவரது வேகம், லாவகம் இவற்றைப் பற்றி எல்லாம் நண்பர்களிடம் அக்குவேறு ஆணிவேறாக அலசுவார்.

விஜயகாந்தின் தந்தை அரிசி ஆலை நடத்தி வந்தார். வசதியான குடும்பம். படம் பார்க்கப் போகும்போது நண்பர்களுக்கும் டிக்கெட் எடுப்பார். படம் முடிந்து ஹோட்டல் சாப்பாடும் விஜயகாந்த் செலவுதான். இதற்காக, எம்.ஜி.ஆர். படம் வெளியாகும் போதெல்லாம், அரிசி ஆலையில் இருந்து அரிசி மூட்டைகள் காணாமல் போகும். அப்படித்தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தையும் நண்பர்களோடு பார்த்திருக்கிறார்.

எம்.ஜி.ஆருடன் விஜயகாந்த்.

அப்போது அதிமுகவை எம்.ஜி.ஆர். ஆரம்பித்திருந்த நேரம். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியாகி 10-வது நாளில் மே 20-ம் தேதியன்று திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல். பிரச்சாரத்துக்குச் சென்ற எம்.ஜி.ஆரோடு ரசிகர்களும் அவர் பின்னாலேயே கூட்டமாகச் செல்ல, அந்தக் கூட்டத்தில் விஜயகாந்த்தும் ஒருவர்!

அப்போது, எம்.ஜி.ஆர். தன் கூடவே வரும் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் வேளை தவறாமல் உணவு கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அந்த உணவின் ருசியை பல ஆண்டுகளுக்குப் பின்னும் சொல்லிக் கொண்டிருந்தார் விஜயகாந்த்! எம்.ஜி.ஆர். மீதான ஆர்வம் சினிமா மீதான ஆர்வமாக
மாறி தானும் நடிகனாக வேண்டும் என்ற ஆசையோடு சென்னை வந்த விஜயகாந்த் பட வாய்ப்புகளுக்காக சிரமப்பட்டார். தனது திறமையாலும் கடுமையான உழைப்பாலும் முன்னேறி திரையுலகில் புரட்சிக் கலைஞராக உயர்ந்தார்.

2014-ல் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது டெல்லி
சென்று வாழ்த்திய தருணம்.

1979-ம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ படத்தில் விஜயகாந்த் அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர். ரசிகராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். விஜயகாந்த் மதுரையைச் சேர்ந்தவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ படத்தின் தலைப்பு விஜயகாந்த்துக்கு பிடித்துப் போக அதே பாணியில் ‘மதுரை சூரன்’ என்ற விஜயகாந்த் நடித்த படம் 1984-ம் ஆண்டு வெளியானது.

எம்.ஜி.ஆரை வாத்தியார் என்று ரசிகர்கள் அழைப்பார்கள். அதே ஆண்டில் ‘மெட்ராஸ் வாத்தியார்’ என்ற படத்திலும் எம்.ஜி.ஆர் படம் போட்ட பனியன் அணிந்து நடித்தார் விஜயகாந்த்! 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் ‘ராமன் தேடிய சீதை’ படம் வெளியான சமயம். ரசிகர்களோடு மதுரையில் இருந்து லாரியில் சென்னை சென்று சத்யா ஸ்டூடியோவில் கூட்டத்தோடு கூட்டமாக எம்.ஜி.ஆரைப் பார்த்திருக்கிறார் விஜயகாந்த்.

2015-ல் சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டுக்குச் சென்றபோது
சுவாரசிய உரையாடல்.

திரையுலகில் முன்னணி நடிகரான பிறகு எம்.ஜி.ஆரை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. நடிகர் ராஜேஷ் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது. நடிகர் ராஜேஷின் இல்லத் திருமணத்துக்கு அவரது அழைப்பின் பேரில் எம்.ஜி.ஆர். சென்றார். திருமண விழாவுக்கு விஜயகாந்தும் வந்திருந்தார். அவரை எம்.ஜி.ஆரிடம் ராஜேஷ் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபின் எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரம். அவரால் சரியாகப் பேசமுடியவில்லை. அந்த சமயத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் துப்பாக்கியால் சுடும் காட்சியில் விஜயகாந்த் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருந்தார். எம்.ஜி.ஆருக்கு பேச முடியாததால், துப்பாக்கியால் சுடுவது போல ஜாடை காட்டி உடல்நிலை எப்படி இருக்கிறது? என்று சைகையாலேயே விசாரித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட இல்லத்தில்
ஜானகி அம்மையாருடன் விஜயகாந்த், பிரேமலதா.

அவரது அன்பில் நெகிழ்ந்து போனார் விஜயகாந்த். புறப்படும்போது, விஜயகாந்தின் கைகளைப் பற்றிக் கொண்டு, ‘வீட்டுக்கு வாருங்கள்’ என்று எம்.ஜி.ஆர். அழைப்பு விடுத்திருக்கிறார். அதற்கான சந்தர்ப்பம் அமைவதற்குள் எம்.ஜி.ஆர். காலமாகிவிட்டார். அந்த வருத்தம் கடைசிவரை விஜயகாந்துக்கு இருந்தது.

எம்.ஜி.ஆர். தனது உயிலில் கூறியபடி, அவரது மறைவுக்குப் பிறகு ராமாவரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டவாய்பேச இயலாத, காது கேளாத சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி இன்றும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25-ம் தேதி தனது பிறந்த நாளன்று அந்தப் பள்ளிக்கு நன்கொடை வழங்கி அங்கு படிக்கும் குழந்தைகளுடன் சாப்பிடுவதை விஜயகாந்த் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

2011-ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பிறகு நடந்த விருந்து
நிகழ்ச்சியின்போது வாழ்த்து.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அவரது துணைவியார் ஜானகி அம்மையாரிடமும் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தார். அவரை ‘அம்மா’ என்றுதான் அழைப்பார். ராமாவரம் தோட்டத்துக்கு அவ்வப்போது குடும்பத்துடன் செல்லும் விஜயகாந்த், ஜானகி அம்மையாரிடம் உரையாடி, அங்கு சாப்பிட்டு விட்டு வருவார்.

எம்.ஜி.ஆர். தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்திய TN W 2005 என்ற வெளிர் நீல நிறம் கொண்ட பிரச்சார வேனை 1996-ம் ஆண்டு தனக்கு பரிசாகக் கொடுக்குமாறு ஜானகி அம்மையாரை விஜயகாந்த் கேட்டுக் கொண்டார். அதை ஏற்று அந்த வேனை விஜயகாந்துக்கு ஜானகி அம்மையார் அன்பளிப்பாகக் கொடுத்தார். எம்.ஜி.ஆர். வழியைப் பின்பற்றி அவரைப் போலவே விஜயகாந்தும் 2005-ம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கினார்.

விஜயகாந்த் பயன்படுத்திய எம்.ஜி.ஆரின் பிரச்சார வேன்.

மதுரையில் நடைபெற்ற தேமுதிக தொடக்க விழாவுக்கு ‘சென்டிமென்டாக’ எம்.ஜி.ஆரின் பிரச்சார வாகனத்திலேயே விஜயகாந்த் வந்தார். பின்னர், தேர்தல் பிரச்சாரத்துக்கும் அந்த வேனைப் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆரைப் போலவே திரையுலகில் விஜயகாந்த் கஷ்டப்பட்டு முன்னேறியவர். அவரைப் போலவே சண்டைக் காட்சிகளில் ‘ரிஸ்க்’ எடுத்து நடித்து பெயர் பெற்றவர்.

எம்.ஜி.ஆர். மாதிரியே பலருக்கும் உதவியிருக்கிறார். எத்தனையோ பேரை கைதூக்கி விட்டிருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு தேடிவந்த புதியவர்கள் பலருக்கு வாய்ப்பளித்திருக்கிறார். அரசியலில் அவரது செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கலாம். ஆனால், கருப்பு எம்.ஜி.ஆர். என்று புகழப்பட்ட விஜயகாந்தின் மனித நேயம் விமர்சிக்கப்பட முடியாதது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்