விஜயகாந்த் மறைந்துவிட்டார் என்கிற செய்தி வெளியான கணத்தில், ‘சத்ரியன்’ திரைப்படத்தில் அவர் நடித்த ஒரு காட்சிதான் நினைவுக்கு வந்தது. தலையில் காயத்துடன் மருத்துவ மனைப் படுக்கையில் படுத்திருக்கும் அவரது மகன், “முடியும்… உன்னால முடியும்” என்று சொன்னவுடன், விஜயகாந்த் உத்வேகமும் உணர்வுப் பெருக்குமாக சிலிர்த்தெழுந்து உடற் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கும் காட்சித் தொகுப்பு அது.
சிறார் குற்றவாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, காவல் துறை அதிகாரியாக உயர்ந்து, இழப்புகளைச் சந்தித்து, இறுதியில் வெல்லும் ஏசிபி பன்னீர்செல்வமாக மிளிர்ந்திருப்பார் விஜயகாந்த். திரைத் துறையில் கோலோச்சி, அரசியலிலும் கால் பதித்த விஜயகாந்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அவரது உடல்நிலையே முடிவுரை எழுதிவிட்டது. ‘பன்னீர்செல்வம்’ மீண்டுவருவார் என்கிற எதிர்பார்ப்பு விஜயகாந்தின் மரணத்தின் மூலம் பொய்த்துவிட்டது.
கண்ணியமான கதாபாத்திரங்கள்: சமரசமற்ற நேர்மையும் உள்ளார்ந்த ஆற்றலும் சக மனிதர் மீதான பரிவும் கண்ணியமும் கொண்ட கதாபாத்திரம் என்றால் - விஜயகாந்த் எனக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். இவை அனைத்தையும் தனது தொடக்கக் காலப் படங்களில் ஒன்றான, ‘தூரத்து இடிமுழக்க’த்திலேயே அவர் வெளிப்படுத்தியிருப்பார்.
அப்படத்தில் மீனவர் பொன்னனாக வரும் விஜயகாந்த், கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது காணாமல் போய்விடுவார். பொன்னன் இறந்துவிட்டதாகக் கருதி, அவரது காதலி செல்லி இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்வாள். நீண்ட காலத்துக்குப் பின் மீண்டு வரும் பொன்னன், தன் நேசத்துக்குரிய செல்லியின் குழந்தையை ஆபத்தி லிருந்து காப்பாற்றி உயிரை விடுவார்.
திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட அப்படத்தில் விஜயகாந்தின் நடிப்பு அத்தனை இயல்பாக இருக்கும். “நான் உயிரோட இருக்கிறது செல்லிக்குத் தெரியவே கூடாது மூப்பா” என்று ஊர்த் தலைவரிடம் கண்ணீருடன் கெஞ்சும் காட்சியைப் பார்த்தவர்கள், விஜயகாந்தை இரண்டாம் வரிசை நடிகர்களில் ஒருவராக வைக்கத் தயங்குவார்கள்.
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பிறருக்கு உதவுகின்ற, அன்புக்குரியவர்களைக் காப்பாற்ற பெரும் பழியைத் தன்மீதே சுமத்திக்கொள்ளும் பண்பு கொண்டவராகப் பின்னாள்களில் பல படங்களில் நடித்த விஜயகாந்துக்கு, ‘தூரத்து இடிமுழக்கம்’ ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
நியாயத்துக்காகப் போராடும் ‘கோபக்கார இளைஞன்’ கதாபாத்திரங் களுக்கு ரஜினிகாந்துக்குப் பிறகு விஜயகாந்த் எனும் பெயரை ‘சட்டம் ஒரு இருட்டறை’ பெற்றுத் தந்தது. அதன் இந்தி மறுஆக்கமான ‘அந்தா கானூன்’ திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தது சுவாரஸ்யமான பொருத்தம். தொழிற்சங்கப் பின்னணியில் உருவான ‘சிவப்பு மல்லி’ படத்தில் தீவிர கம்யூனிஸ்ட்டாக நடித்தார். அறச்சீற்றமும் ஆவேசமும் கொண்ட அந்தக் கதாபாத்திரத்தைத் தனது இயல்பான நடிப்பால் துலங்கச் செய்தார் விஜயகாந்த்.
காதலர்களின் காவலர்: சாதி, மதப் பிரிவினைகளுக்கு எதிரானவராக, காதல் திருமணங் களுக்கு ஆதரவானவராக விஜயகாந்த் நடித்த பல கதாபாத்திரங்கள் ஒடுக்கப் பட்டவர்களிடமும் பெண்களிடமும் அவர் மீதான பரிவை, மதிப்பை உருவாக்கின. ‘வைதேகி காத்திருந்தாள்’ அதற்கான தொடக்கம் எனலாம்.
அப்படத்தில், இழப்பதற்கு உயிரைத் தவிர வேறேதும் இல்லாத வெள்ளைச்சாமியாகக் காதலர்களைச் சேர்த்துவைக்கும் கதாபாத்திரத்தில் நடித்த விஜயகாந்த், பின்னாள்களில் ஆதரவாளர்களும் செல்வாக்கும் கொண்ட ஆளுமையாக - காதலர்களுக்கான காவலராக, ‘பூந்தோட்டக் காவல்காரன்’, ‘செந்தூரப் பூவே’, ‘செந்தூரப் பாண்டி’, ‘பெரியண்ணா’ போன்ற படங்களில் கம்பீரம் காட்டினார்.
குறிப்பாக, திருமணத்துக்கு முன்பே, நரைத்த முடியுடன் ‘பூந்தோட்டக் காவல்காரன்’ ஆண்டனியாக, ‘செந்தூரப் பூவே’ கேப்டன் செளந்தர பாண்டியனாக விஜயகாந்த் நடித்த கதாபாத்திரங்கள் அவரது கம்பீர பிம்பத்துக்கு வலு சேர்த்தன. திரைத்துறையில் வளர்ந்துவந்த நடிகர்களின் படங்களில் கெளரவ வேடத்தில் விஜயகாந்த் நடித்த கதாபாத்திரங்களின் பட்டியல் மிக நீளமானது.
தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகராக விஜயகாந்த் உயரவும் இந்தக் கதாபாத்திரங்கள் துணை நின்றன. அதிகார வர்க்கத்துக்கு அடிபணியாத காவல் துறை அதிகாரியாக, ‘ஊமை விழிகள்’ படத்தில் விஜயகாந்த் நடித்த டிஎஸ்பி தீனதயாளன் கதாபாத்திரம் அவரது ஆபத்பாந்தவன் பிம்பக் கட்டமைப்புக்குப் பெரிதும் உதவியது.
திரைப்படக் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட அப்படத்தில் முன்னணி நடிகரான விஜயகாந்தின் பங்களிப்பு, புதிய திறமைகளுக்கும் ஊக்கமளித்தது. பின்னாள்களில், ‘புலன் விசாரணை’, ‘மாநகரக் காவல்’ ‘சேதுபதி ஐபிஎஸ்’, ‘ஹானஸ்ட் ராஜ்’ போன்ற படங்களில் துணிச்சலான காவல் துறை அதிகாரியாக நடித்தார். பாகிஸ்தான் பயங்கரவாதிகளைக் களையெடுக்கும் தேசப்பற்று மிக்க ராணுவ அதிகாரியாகவும் நடித்துப் புகழ்பெற்றார்.
அரசியல் அஸ்திவாரம்: பண பலமும் செல்வாக்கும் இருந்தாலும் மூத்தவர்களின் சொல்லுக்கும் பொது நியாயத்துக்கும் கட்டுப்பட்டு தனது ஆற்றலை வெளிப்படுத்தாமல் அமைதி காக்கும் கதாபாத்திரங்கள், பின்னாள்களில் விஜயகாந்தின் அரசியல் பிம்பத்துக்கு அஸ்திவாரமாக அமைந்தன. ‘பாட்டுக்கு ஒரு தலைவன்’, ‘பொன்மனச் செல்வன்’ போன்ற படங்களில் செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த பாந்தமான இளைஞராக நடித்த விஜயகாந்த், ‘சின்ன கவுண்டர்’ படத்தில் மிகப் பெரிய உயரத்தை அடைந்தார்.
ஊழல்வாதிகளைக் களையெடுக்கும் பேராசிரியராக ‘ரமணா’ படத்தில் விஜயகாந்த் நடித்த கதாபாத்திரம் மிகவும் சக்திவாய்ந்தது. முழுநேர அரசியல்வாதியாக அவர் உருவெடுக்க அப்படம் அஸ்திவாரமாக அமைந்தது. நாடகத்தன்மை நிறைந்த காட்சி என்றாலும் இறுதியில் பொதுவெளியில் அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்னர் உரையாற்றும் காட்சி ஓர் உதாரணம்.
அதிரடி நாயகன் என்கிற பிம்பம் இருந்தாலும் இசையை மையமாகக் கொண்ட படங்களிலும் விஜயகாந்த் பரிமளித்தார். ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘வசந்த ராகம்’, ‘பாட்டுக்கு ஒரு தலைவன்’ போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
தமிழைத் தவிர பிற மொழிப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாத விஜயகாந்த், ‘தி மே டே’ என்கிற ஆங்கிலப் படத்தில் நடிக்கத் திட்டமிட்டார். ஆனால், அது கைவிடப்பட்டது. விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜயகாந்த் நடிப்பதாகச் செய்திகள் வெளியானபோது, வேறொரு பரிமாணத்தில் விஜயகாந்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா எனும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், ‘விருதகிரி’, ‘சகாப்தம்’ ஆகிய படங்களுடன் அவரது திரைவாழ்க்கை முற்றுப்பெற்றுவிட்டது.
- chandramohan.v@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 mins ago
சிறப்புப் பக்கம்
58 mins ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago