பெண்கள் 360: ஆசிரியர்கள் சுடிதார் அணியலாம்

By ப்ரதிமா

தமிழக அரசுப் பணியாளர்களுக்கான சீருடை குறித்து 2019 ஜூன் 1 அன்று அரசு வெளியிட்ட அரசாணை 67இன்படி அரசுப் பணியில் இருக்கும் பெண்கள் புடவை, சல்வார் - கமீஸ், சுடிதார் - துப்பட்டா எனத் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தின் கண்ணியத்துக்கு ஏற்ற வகையில் உடையணிந்து வரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசுப் பள்ளியில் பணிபுரியும் பெண்களும் அரசு ஊழியர் என்கிற வகைமைக்குள் அடங்குவர் என்பதால் ஆசிரியைகளும் சுடிதார் அணிவதில் தடையில்லை. இருந்தபோதும் ஆசிரியைகள் சுடிதார் அணிந்துவருவதற்குச் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களும் சக ஆசிரியர்களும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இது குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரவலாக எழுந்தது. புடவை அணிந்தால்தான் ஆசிரியைகளுக்கும் மாணவர்களுக்கும் வித்தியாசம் தெரியும் எனச் சிலர் வாதிட்டனர். புடவை அணிந்துவருவது தங்களுக்கு அசௌகரியமாக இருக்கிறது என ஆசிரியைகள் தரப்பில் சொல்லப்பட்டது. ஆசிரியைகளின் ஆடை சர்ச்சை குறித்து ‘பெண் இன்று’விலும் கவனப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கும் அரசாணைப்படி ஆசிரியைகள் பணிக்கு சுடிதார் அணிந்துவரலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பையடுத்து ஆசிரியைகள் சிலர் பள்ளிக்கு சுடிதார் அணிந்துவர, ஆடை சர்ச்சை முடிவுக்கு வந்தது.

மல்யுத்தத்தை விட்டு விலகுகிறார் சாக்‌ஷி மாலிக்

பாலியல் குற்றச்சாட்டில் தொடர்புடைய இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண்சிங்கின் தொழில் பங்குதாரரும் அவரது நெருங்கிய நண்பருமான சஞ்சய் சிங் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மல்யுத்தத்தைத் தான் கைவிடுவதாக சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சிங், மல்யுத்த வீராங்கனைகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் அவர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டினர். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய நாடாளு மன்ற கட்டிடத்தின் முன்பு மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களைக் காவல்துறையினர் கையாண்ட விதத்தை சர்வதேச ஒலிம்பிக் கழகம் கண்டித்தது. அதன் பிறகு பிரிஜ் பூஷண் சிங் மீது புகார் பதிவு செய்யப்பட்டாலும் அவர் தண்டனைக்குட்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அவருடைய நெருங்கிய நண்பர் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, வளரும் மல்யுத்த வீராங்கனைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் என்று சொன்னதோடு, மல்யுத்தத்தில் இருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் தங்கம் வென்ற ஒரே பெண் இவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE