இயக்குநரின் குரல்: நிகழ்காலத்தின் தேவை ‘விவேசினி’

By ரசிகா

“தூய்மைவாதம் மிகுந்த ஒரு குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவன் நான். இப்படம் என்னுடைய ஃபர்செனல் ஜர்னி என்று கூடச் சொல்லலாம். நான் பட்ட கஷ்டத்தை பிறர் படக்கூடாது என்பதற்காகத்தான் இப்படம்” என்று கூறி அதிசயிக்க வைக்கிறார் ‘விவேசினி’ படத்தை எழுதி இயக்கியிருக்கும் புவன் ராஜகோபலன். நாசர், புகழ்பெற்ற லண்டன் அரங்க நடிகர் வனேஸா ஸ்டீவன்சன், அமெரிக்க ஆப்ரிக்க நடிகர் ஒருவர் என நடிகர்கள் தேர்விலேயே கவனிக்க வைக்கும் இப்படம், விரைவில் வெளி யாகவிருக்கும் நிலையில் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது பகுத்தறிவு - மூடநம்பிக்கை இரண்டையும் மோத விட்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது… ஒரு சினிமா படைப்பாளி சமூகப் பொறுப்பு மிக்கவராகவும் இருந்தால், சமூகத்தில் களைந்து நீக்கப்பட வேண்டிய அவலம், அல்லது அவர் காலத்தில் மலிந்து கிடக்கும் எந்தத் தீமைக்கு எதிராகவும் தனது கதைக் களத்தை அமைத்துகொள்வார். குறிப்பாக மதம், கடவுள் சார்ந்தும் பேய், அமானுஷ்யம் குறித்தும் மூட நம்பிக்கைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் பகுத்தறிவின் தேவை அதிகமாகிறது. அதன் தேவையையும் அவசியத்தையும் பறைசாற்ற வேண்டும் என்று நினைத்தே இப்படியொரு படத்தை இயக்கினேன்.

மூட நம்பிக்கைகள் எல்லாக் காலத்திலும் இருக்கவே செய்கின்றன. ஆனால் இப்படியொருப் படத்துக்கான தேவை எதிலிருந்து பிறந்தது? - உண்மைதான். மூட நம்பிக்கைகள் நமது வாழ்க்கையின் அங்கமாக நமக்குத் தெரியாமலே மாறி, நம்மை அவற்றின் பிடிக்குள் பிடித்து வைத்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பதவியேற்பில் தொடங்கி, ஃபைல்களை நகர்த்துவது, ஒரு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவது வரை, நல்ல நேரம், கெட்ட நேரம் என்று பார்த்து, அரசாங்கங்களே மூட நம்பிக்கையை குடிமக்களுக்கு ஊட்டுகின்றன.

பெரு மதங்களைச் சேர்ந்த அனைவரும் டைம் பார்த்துதான் ‘சிசேரியன்’ செய்யச் சொல்கிறோம். இப்படி ஒரு பக்கம் மூட நம்பிக்கைகள் நிறுவனமயப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏன்.. திரைப்படங்களேகூட கடந்த சில ஆண்டுகளாக புராணங்களை வரலாறுபோல் திரித்துபேசும் இடத்தில் வந்து நிற்கின்றன. கடவுள், மதம் சார்ந்து, மூட நம்பிக்கைகள் சார்ந்து பெண்களும் விளிம்பு நிலை வாழ்வில் இருக்கக்கூடிய சாமானிய மக்களும்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதை இப்போது பேசுவதுதான் பொருத்தமான தருணம். அதனால்தான் ‘விவேசினி’ பிறந்தாள்.

இது பெண் மையப் படமென்றால் ‘விவேசினி’யின் பயணம் பற்றிக் கூறுங்கள். ஜெயராமன் ஒரு பகுத்தறிவாளர். அவருக்கு சக்தி என்கிற மகள். அவளைப் பகுத்தறிவு ஊட்டிதான் வளர்த்தார். சமூக அநீதிகளுக்கு எதிரான களப் போராட்டம் எந்தவொரு சாதகமான விளைவையும் கொண்டுவந்துவிடாது என விவேசினி உணர்ந்திருக்கிறாள். அப்படிப்பட்டவள், ஒரு மூடநம்பிக்கையை ‘அது திரிக்கப்பட்ட பொய்’ என்பதை நிரூபிப்பதற்காக ஒரு அடர் காட்டுக்குள் ஒரு நாள் தங்கிவிட்டுவரச் செல்கிறாள். அந்தப் பயணத்தின் இறுதியில் இச்சமூகத்தால் அவள் என்னவாக மாற்றப்படுகிறாள் என்பதுதான் படம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE