சிறிய இரவாடிப் பாலூட்டிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள முனைவர் நந்தினியும், முனைவர் திவ்யா முத்தப்பாவும் 2010இல் அவர்களது ஆராய்ச்சிக் கட்டுரையில் மலபார் புனுகுப்பூனை எனும் ஓர் இனமே இல்லை என அதிரடியாகத் தெரிவித்தனர். இதுவரையில் சேகரிக்கப்பட்டுள்ள எல்லா பதனிடப்பட்ட தோல்களைப் பார்த்தும், மலபார் புனுகுப்பூனை குறித்த எல்லா ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தும், இது போன்ற ஓர் உயிரினத்தைப் பார்த்ததாகச் சொன்னவர்களிடம் விசாரித்துக் கேட்டும் இந்தக் கருத்தை முன்மொழிந்தனர். இவர்களின் கருத்தை நம்பாமலும் இருக்க முடியவில்லை.
மலபார் புனுகுப்பூனையின் பதனிடப்பட்ட தோல், அதன் மண்டை ஓடு ஆகியவற்றை வைத்தே முதன்முதலில் அறியப்பட்டது. அந்தத் தோலும் மோசமான நிலையிலேயே இருந்தது. அந்தத் தோலில் உள்ள குறிப்பில் தென் மலபார், கேரளம், இந்தியா என்று பொதுவாக மட்டுமே இருந்தது. எந்த ஊரில் இருந்து பெறப்பட்டது என்கிற விவரமும், அது வேட்டையாடப்பட்டதா, வேறு யாரிடமிருந்தாவது வாங்கப்பட்டதா, அது அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த ஒன்றா, அல்லது காட்டில் சுற்றித்திரிந்த ஒன்றா என்பது போன்ற விவரங்கள் எதுவும் இல்லை.
புகழ்பெற்ற இயற்கையியலாளரான டி.சி. ஜெர்டான் 1874இல் மலபார் புனுகுப்பூனையைப் பல முறை பார்த்ததாகவும், இவை வட கர்நாடகாவிலிருந்து கன்னியாகுமரி வரையிலும், இலங்கையிலும் இருக்கலாம் என்றும் அவரது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதையே வேதவாக்காகநம்பி அதற்குப் பின் வந்த பல அறிவியலாளர்களும் இந்த உயிரினத்தைப் பற்றி எழுதியபோது டி.சி. ஜெர்டான் சொன்ன விவரங்களையே அவர்களது படைப்புகளிலும் திரும்பத்திரும்ப சொல்லி வந்துள்ளனர். எனினும் 1933இல் ஆர்.ஐ.போகாக் இதைச் சந்தேகித்து ஜெர்டான் பார்த்தது பொதுவாகத் தென்படும் புனுகுப்பூனையாகவே (Small Indian Civet) இருக்கக்கூடும் என்கிறார். மேலும் பழைய ஆராய்ச்சிக் குறிப்புகளில் சொல்லப்பட்டதுபோல பல இடங்களில் பொதுவாக இவை தென்பட்டன என்றால் ஏன் அருங்காட்சியகங்களில் பத்துக்கும் குறைவான பதப்படுத்தப்பட்ட தோல்களே உள்ளன?
தமிழ்நாட்டில் மலபார் புனுகுப்பூனை? - ஜெர்டானுக்குப் பின் இப்புனுகுப்பூனையை நேரில் பார்த்ததாகப் பதிவுசெய்தது தேயிலைத் தோட்டக்காரரான ஏ.எப்.ஹட்டன். இவர் 1947இல் தமிழ்நாட்டில் உள்ள மேகமலையிலும், வருசநாடு பகுதிகளிலும் மலபார் புனுகுப்பூனையை பார்த்ததாகப் பதிவுசெய்துள்ளார். மேலும் ஒரு குட்டிப் புனுகுப்பூனையைப் புனுகு எடுப்பதற்காக வளர்த்து வந்ததாகவும் அவரது கட்டுரையில் தெரிவித்திருக்கிறார். இவரிடமிருந்த ஒளிப்படங்களை நந்தினியும் திவ்யாவும் ஆராய்ந்தபோது இவை பொதுவாகத் தென்படும் புனுகுப்பூனை போன்றே இருப்பது தெரியவந்தது. இது தவிர, திருநெல்வேலியில் உள்ள டோனாவூர் பகுதியில் மலபார் புனுகுப்பூனை இருப்பது சந்தேகமே என்றும் அவை மலையுச்சிப் பகுதிகளில் இருக்க வாய்ப்பு உண்டு என்றும் 1947இல் சி.ஜி.வெப்-பேப்லோ குறிப்பிட்டுள்ளார்.
» உள்கட்டமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க கதி சக்தி திட்டம்: இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு
» தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் தலைவராக பிரவீன் சக்ரவர்த்தி நியமனம்
புனுகு: புனுகுப்பூனையின் ஆசனவாய்க்கு அருகில் உள்ள சுரப்பியிலிருந்து சுரக்கும் பொருள்தான் புனுகு. வட கிழக்கு இந்தியாவில் தென்படும் பெரிய புனுகுப்பூனை (Large Indian Civet), இந்தியாவின் பல இடங்களிலும் பரவியுள்ள புனுகுப்பூனை (Small Indian Civet), ஆப்ரிக்க புனுகுப்பூனை ஆகியவற்றி லிருந்தே பெரும்பாலும் புனுகு தயாரிக்கப்படுகிறது. எனினும், விவரின்னே (Viverrine) உப குடும்பத்தில் உள்ள (Sub-family) புனுகுப்பூனைகள் அனைத்தும் புனுகுச் சுரப்பியைக் கொண்டுள்ளன. வட கிழக்கு இந்திய மாநிலங்களிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் தென்படும் பெரிய புள்ளிப் புனுகுப்பூனை உள்பட. வாசனை திரவியமான ஜவ்வாது தயாரிப்பதற்கான மூலப்பொருள் புனுகு (Civeton).
இது இறைவழிபாட்டுத் தலங்களிலும், ஆயுர்வேத மருந்துத் தயாரிப்பில் மூலப்பொருளாகவும் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக இவை கூண்டில் அடைக்கப்பட்டு பல இடங்களில் வளர்க்கப்படுகின்றன. கேரளத்தில் மட்டும் 43இடங்களில் தகுந்த அனுமதி பெற்று இவை வளர்க்கப்படுவதாக ஓர் ஆராய்ச்சிக் குறிப்பு சொல்கிறது. புனுகிற்காக இவை கள்ளத்தனமாகப் பல இடங்களுக்குக் கடத்தவும் படுகின்றன.
பெரிய புள்ளிப் புனுகுப்பூனைதான் மலபார் புனுகுப்பூனையா? - மலபார் புனுகுப்பூனையும் பெரிய புள்ளிப் புனுகுப்பூனையும் உருவத்தில் ஒத்திருப்பதால் 1980களுக்கு முன் சேகரிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட தோல்கள் யாவும் பெரிய புள்ளிப் புனுகுப்பூனையினுடையதாக இருக்க வாய்ப்பிருக்கலாம் அல்லவா? ஒரே இனத்தைச் சேர்ந்த புனுகுப்பூனையாக இருந்தாலும் அவற்றின் மேல்தோலில் உள்ள புள்ளிகள், வரிகள், திட்டுகள் யாவும் ஒன்றுபோல இருப்பதில்லை (வீட்டு நாய், பூனை போன்றவற்றின் உடலில் உள்ள திட்டுகள் வெவ்வேறு நிறத்திலும், வடிவத்திலும் இருப்பதுபோல).
மேலும் அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட காரணத்தால் ஒரு வேளை, இவற்றின் உடலின் மேற்போர்வையில் உள்ள திட்டுகள் சற்று வித்தியாசமாக இருந்ததால், இவற்றின் பதப்படுத்தப்பட்ட தோலை வைத்து இவை வேறு வகையான (மலபார் புனுகுப்பூனை) என முடிவு செய்திருக்கலாம் அல்லவா? ஆனால், பெரிய புள்ளிப் புனுகுப்பூனை தென்னிந்தியாவில் கிடையாதே?பழங்காலத்தில், எத்தியோப்பியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து, புனுகுப்பூனைவகைகள் புனுகு வணிகத்திற்காகப் பிடிக்கப் பட்டு, பல நாடுகளுக்கு எடுத்துத் செல்லப்பட்டன.
குறிப்பாக கோழிக்கோடுத் துறைமுகம்அக்காலத்திலிருந்தே ஒரு முக்கியமான கடல்வணிக மையமாக இருந்திருக்கிறது. இப்படிக் கொண்டுவரப்பட்டவற்றில் ஒன்றிரண்டு கூண்டை விட்டு தப்பித்து அருகில் உள்ள காடுகளில் தஞ்சமடைந்திருக்கலாம். பின்னாள்களில் இவை கொல்லப்பட்டு அவற்றின் பதப்படுத்தப்பட்ட தோலை வைத்து, இவை புதிய இனம் என்று நினைத்து அறிவியலாளர்கள் அதைப் பதிவுசெய்திருக்கலாம். இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும், இதுவரையில் நமக்குக் கிடைத்த மலபார் புனுகுப்பூனையில் ஆறு பதப்படுத்தப்பட்ட தோல்களும் கோழிக்கோடு அதனையடுத்தப் பகுதிகளில்தாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மர்மம் விலகுமா? - மலபார் புனுகுப்பூனை இருக்கிறதா? இல்லையா? காடுகள் அழிக்கப்பட்டதால், சிறு மாற்றத்தையும் தாங்க முடியாமல் அவை எண்ணிக்கையில் மிகவும் குறைந்து போய் முற்றிலும் அழிந்துவிட்டனவா? இந்தக் கேள்வியோடு இப்படிப்பட்ட ஓர் உயிரினமே இருக்கிறதா என்கிற கேள்வியும் இப்போது நம் முன்னே இருக்கிறது. இந்த மர்மம் எப்போதுதான் விலகும்? ஒரு வேளை நீங்கள் எப்போதாவது மேற்கு மலைத்தொடர் பகுதிகளில் பயணம் மேற்கொள்ளும்போது, மேல் கழுத்திலிருந்து வால் வரை அடர்ந்த கரிய பிடரி மயிர் கொண்ட, கழுத்தில் மூன்று கறுப்பு வரிகள் கொண்ட, வாலின் நுனி கறுப்பாகவும், கண்களுக்குக் கீழே கறுப்புத் திட்டு இல்லாத உருவில் பெரிய புனுகுப்பூனையைக் கண்டால், அவற்றைத் தொந்தரவு செய்யாமல் உடனே படமெடுத்துக்கொள்வது நல்லது. மலபார் புனுகுப்பூனையை நேரில் கண்டு படம்பிடித்து, அது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட பின்தான் அவை இருப்பதையும், இருந்ததையும் ஒப்புக்கொள்ள முடியும். அதுவரையில் இந்த மர்மம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்!
- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; jegan@ncf-india.org
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago