ஆர்வம் + திறமை + வாய்ப்பு = வெற்றி

By மித்ரா

ஒருவர் தனக்குப் பொருத்தமான தொழிலைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. மருத்துவம், இயந்திரப் பணிகள், கல்வி, படைப்புத் திறன், உடல் திறன், கைவினைத் திறன், நிர்வாகத் திறன், சமூக சேவை முதலான சில துறைகளில் சிலருக்கு இயல்பாகவே ஆர்வம் இருக்கும்.

அது சிறு வயதிலிருந்தே வெளிப்படையாகத் தெரியவும் செய்யும். அப்படி இருக்க, அது தொடர்பான பாடத்தை எடுத்துப் படித்து அந்தத் துறையிலேயே தன் தொழில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் என்ன பிரச்சினை? அந்தத் துறைக்கான சவால்களை எதிர்கொள்ள திறமையும் உழைப்பும் இருந்தால் போதும் அல்லவா? தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் பிறகு ஏன் இவ்வளவு சிக்கல்?

தொழில் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படைகளை ஆர்வம், திறமை, வாய்ப்பு என வகைப்படுத்தலாம்.

ஆசைதானா ஆர்வம் ?

எதில் ஆர்வம் என்பதை நாம் அடையாளம் காண வேண்டும். ஆசைப்படுவதெல்லாம் ஆர்வங்களாகிவிடாது. உதாரணமாக எல்லோருக்கும் சினிமா பார்ப்பது பிடிக்கும். அப்படியானால் எல்லோருமே சினிமா தொழிலைத் தேர்ந்தெடுத்துவிட முடியுமா?

உணவுப் பொருள்களின் மீது இருக்கும் ஆர்வமும் இப்படித்தான். ஒருவர் தோசையை விரும்பிச் சாப்பிடுகிறார் என்பதை வைத்துத் தொழில் வாழ்க்கைக்கான அவரது ஆர்வத்தை நாம் முடிவுகட்ட முடியாது.

ஆனால் சினிமா பார்க்கும்போது காமிரா, இசை, திரைக்கதை, நடிப்பு, காட்சித் தொகுப்பு ஆகியவை பற்றி நுட்பமாகக் கவனிக்கும் தன்மை ஒருவருக்கு இருந்தால் அதை ஆர்வம் என்று சொல்லலாம்.

அதுபோலவே தோசை பிடிக்கும் என்பது மட்டும் அல்லாமல் வித விதமான தோசைகள் பற்றிய ஆர்வமும் அதையெல்லாம் எப்படிச் செய்வது என்பதை அறியும் ஆவலும் இருந்தால் அதை வெறும் சாப்பாட்டு ருசி என்று எடுத்துக்கொள்ள முடியாது.

இதுபோலவே ஒவ்வொரு ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் அது தொழில் வாழ்க்கையைத் தீர்மானிக்கக்கூடிய ஆர்வமா அல்லது வெறும் ஆசையா என்று தெரிந்துவிடும். பிறருக்கு உதவிசெய்வது என்னும் அக்கறை எல்லோருக்குமே இருக்கும். ஆனால் சிலர் மட்டும் அதில் தனிக் கவனம் செலுத்துவார்கள்.

உதவி செய்வதற்காக மிகவும் மெனக்கெடுவார்கள். உதவி செய்வதற்குத் தேவையான பல அம்சங்களைத் திரட்டிக்கொள்வார்கள். இவர்கள் மக்களுக்கு உதவி செய்யக்கூடிய துறைகளில் தங்கள் தொழில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். இப்படிச் சற்றே ஆழமாகப் பார்ப்பதன் மூலம் ஒருவரது ஆர்வத்தைத் தொழில்ரீதியாகப் புரிந்துகொள்ளலாம்.

திறமையைப் புரிந்துகொள்ளுதல்

திறமையை அடையாளம் காண்பதற்கும் இதே அணுகுமுறை பொருந்தும். விளையாட்டு, ஓவியம், பாட்டு, பேச்சு ஆகியவற்றில் பலருக்கும் அடிப்படையான திறமைகள் இருக்கும். இவற்றில் எதில் ஒருவருக்குச் சிறப்பான திறமை இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

சிறப்பான திறமையை அடையாளம் கண்டால் மட்டும் போதாது. அந்தத் திறமை வெளிப்படும் துறையில் அவருக்கு ஆர்வம் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். உதாரணமாகச் சிலர் கிரிக்கெட்டில் இயல்பாகவே நன்றாக ஆடுவார்கள்.

ஆனால் அதில் பெரிதாக ஆர்வம் இருக்காது. இயல்பாகவே நன்றாகப் படம் வரைவார்கள். ஆனால் அதில் ஆர்வம் அதிகம் இருக்காது. நல்ல குரல் இருக்கும். இசைத் துறையில் ஆர்வம் இருக்காது. எனவே திறமையுடன் ஆர்வமும் சேர்ந்திருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

அதுபோலவே ஆர்வமுள்ள விஷயத்தில் திறமை இல்லாவிட்டால் பயனில்லை. வெறும் ஆர்வத்தை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது.

வாய்ப்பு

நமக்கு ஆர்வமும் திறமையும் உள்ள துறையில் அதிக வாய்ப்புகள் இல்லாவிட்டால் அதில் நுழைவது கடினம். மிக அரிதாகவே வாய்ப்பு உருவாகக்கூடிய துறையை ஒருவர் தேர்ந்தெடுத்தால் அதில் மிகச் சிறப்பான திறமை இருந்தால்தான் வெற்றிபெற முடியும்.

சில துறைகளில் வாய்ப்பு அதிகம் இருக்கும். ஆனால் அதற்கேற்ற திறமையை வளர்த்துக்கொள்வது எளிதல்ல. உதாரணமாக விண்வெளித் துறை. இதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தனக்கான துறையை ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த அளவுக்குத் திறமையை வளர்த்துக்கொள்ளும் முனைப்பு இருந்தால்தான் சில துறைகளைப் பற்றி யோசிக்கவே முடியும்.

வாய்ப்பு என்பது துறைக்குத் துறை காலத்துக்குக் காலம் மாறக்கூடியது. அது நம் கையில் இல்லை. ஆனால் ஆர்வம், திறமை ஆகியவை நம் கையில் இருப்பவை. இந்த இரண்டின் மீதுதான் நாம் கவனம் செலுத்த வேண்டும். இவற்றைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும்.

ஆர்வமும் திறமையும் ஒத்துப் போகாதபோது என்ன செய்வது?

தொடர்ந்து அலசுவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்