வடகிழக்கு இந்தியா, இமயமலைப் பகுதிகள் நீங்கலாகக் கிட்டத்தட்ட இந்தியச் சமவெளிகளின் பல இடங்களில் உள்ள பரந்த வெட்டவெளி, புல்வெளி, புதர்க்காடுகளில் சிவிங்கிப்புலிகள் பரவியிருந்தன. இயற்கையியலாளரான திவ்யபானுசிங், சிவிங்கிப்புலிகள் குறித்து 1995 இல் எழுதிய ‘End of the Trail: The Cheetah in India’ என்கிற நூலை விரிவுபடுத்தி, தற்போது ‘The Story of India’s Cheetahs’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் சிவிங்கிப்புலிகள் ஆதிகாலத்தி லிருந்தே இருந்து வருபவை என்பதை பாறை ஓவியங்கள், முகலாய ஓவியங்கள், பழைய இலங்கியங்கள், வேட்டைக் குறிப்புகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், நேர்காணல்கள் எனப் பல வகையான சான்றுகளுடன் இந்த நூலில் விரிவாக விளக்கியுள்ளார். இந்தியாவில் சிவிங்கிப்புலிகள் எந்தெந்த இடங்களில் இருந்தன என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஒரு நிலவரைபடத்தையும் இந்நூலில் தந்துள்ளார். அவற்றில் தமிழ்நாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றுகளின் விவரங்களைத் தேடிப் படித்தபோது பல சுவையான தகவல்களை அறியமுடிந்தது.
தஞ்சை சரபோஜி ராஜாவின் சிவிங்கிப்புலி: தமிழ்நாட்டில் சிவிங்கிப்புலிகள் இருந்ததற்கான முதல் சான்று 1802 வாக்கில் வரையப்பட்ட ஓர் ஓவியம். கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த அதிகாரியான பெஞ்சமின் டோரினுக்கு (Benjamin Torin), தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மாமன்னர் (இரண்டாம் சரபோஜி ராஜா) தனது ஓவியர்களை வைத்து வரைந்த பல உயிரினங்களின் 117 ஓவியங்களைப் பரிசாக அளித்துள்ளார்.
அதில் ஒன்றுதான் சிவிங்கிப்புலியின் ஓவியம்! இவை அனைத்தும் பிரிட்டிஷ் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் ஓவிய பாணியில் அமைந்த இந்த நீர்வண்ண ஓவியத்தில் ஒரு சிவிங்கிப்புலியின் கழுத்துப் பட்டையில் உள்ள கயிறு முளைக்குச்சியில் கட்டிவைக்கப்பட்டிருக்கிறது.
அதன் இடுப்புப் பகுதியிலும் ஒரு பட்டை கட்டப்பட்டிருக்கிறது. இவற்றை மான் வேட்டைக்குக் கொண்டு செல்லும்போது, அவற்றின் கண்களை மறைக்கும்படி முகத்தில் அணிவிக்கும் தலைச்சூட்டும் இந்த ஓவியத்தில் சிவிங்கிப்புலிக்கு மேலே வரையப்பட்டுள்ளது; இந்த ஓவியத்தின் தலைப்பு: ‘Chitta Tyger’.
சரபோஜி ராஜா பல காட்டுயிர்களைப் பிடித்து கூண்டில் அடைத்து வளர்த்துவந்துள்ளார். வல்லூறு, ராஜாளி போன்ற இரைக்கொல்லிப் பறவைகளைப் பழக்கி (Falconry), மற்ற உயிரினங்களை வேட்டையாடுதல், சிவிங்கிப் புலிகளை மான் வேட்டைக்குப் பழக்குதல் (Coursing) போன்றவை அந்தக் காலத்தில் மன்னர்களிடம் இருந்த ஒரு பொழுதுபோக்கு.
ஆனால், சரபோஜி ராஜா அதை மட்டும் செய்யாமல் வல்லூறு, சிவிங்கிப்புலி ஆகியவற்றின் பாராமரிப்பு, பழக்கும் முறை, அவற்றை நோய் தாக்கினால் அதற்கான மருத்துவ வழிமுறைகளையும் பஜனாமா (Bajanama) (பறவைகளுக்கு), யுஜனாமா (Yajanama) (சிவிங்கிப்புலிகளுக்கு) போன்ற நூல்களில் ஆவணப்படுத்தியிருந்தார்.
அவரது சேகரிப்பில் இருந்த பறவைகளையும் மற்ற உயிரினங்களையும் பார்க்கும்போது அவை இந்தியாவின் பல இடங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்டவை என்பதை அறியமுடிகிறது. சிவிங்கிப்புலிகூட அப்படி கொண்டுவரப்பட்டவையாக இருந்திருக்கலாம். எனினும் அப்போது இருந்த தஞ்சாவூர் பகுதி சமவெளியாகவும், புல்வெளிகள் நிறைந்தும் சிவிங்கிப்புலிகள் வாழ ஏதுவான இடமாக இருந்திருக்கும். ஆகவே, அந்த ஓவியத்தில் தெளிவாக வரையப்பட்டிருந்த சிவிங்கிப்புலி அப்பகுதியில் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
சரபோஜி ராஜாவிடம் இருந்த சிவிங்கிப்புலியின் ஓவியத்தை என் தந்தையிடம் காட்டியபோது தஞ்சையில் உள்ள சிவகங்கைப் பூங்காவை சிவிங்கிப் பூங்கா என்றும் சொல்வார்கள் என்றார். ஆச்சரியம் மேலோங்க, நண்பர் தஞ்சாவூர்க் கவிராயரைக் கைபேசியில் அழைத்து, “சிவகங்கைப் பூங்கா இருக்கிறதல்லாவா...” என்றேன்.
உடனே அவர், “ஆமாம் சிவிங்கித் தோட்டம்” என்றார்! சிவிங்கிப்புலிக்கும் இந்தப் பூங்காவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? இல்லை, சிவகங்கைதான் மருவி சிவிங்கி ஆனதா? இது குறித்து மேலும் ஆராய வேண்டும்.
மதுரை, கோவை பகுதிகளில் சிவிங்கிப்புலிகள்: 1868இல் ஜே.எச்.நெல்சன் தொகுத்த மதுரை மாவட்டக் கையேட்டில் (The Madura Country: A Manual) சிவிங்கிப்புலிகளை அப்பகுதிகளில் அவ்வப்போது பார்க்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கே மதுரை என்பது அக்காலத்தில் இப்போதுள்ள பல மாவட்டங்களை உள்ளடக்கியது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
1887இல் எஃப்.ஏ.நிகல்சன் தொகுத்த கோயம்புத்தூர் மாவட்டக் கையேட்டில் (Manual Of The Coimbatore District) உள்ள குறிப்புகளில் சிவிங்கிப்புலிகள் அப்பகுதிகளில் இருந்ததை அறியமுடிகிறது. இந்தக் கையேட்டில் எஃப்.டபுள்யூ.ஜாக்சன் 1875இல் எழுதிய கோயம்புத்தூர் பாலூட்டிகள் (Rev. F.W.Jackson. Mammals of the Coimbatore District) எனும் நூலில் பட்டியலிடப்பட்ட விவரங்களைத் தந்துள்ளார். அதில் சிவிங்கிப்புலி இம்மாவட்டத்தின் சில பகுதிகளில், பவானி ஆற்றுப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே பரவிக் காணப்பட்டிருக்கிறது.
விளாமுண்டி, (அந்நூலில் Vellamundi எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பகுதி தற்போது விளாமுண்டி காப்புக்காடாக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது), கொத்தமங்கலம் (சத்தியமங்கலத்தின் அருகே உள்ள ஓர் ஊர்) முதலிய பகுதிகளில் உள்ள வெளிமான்களை வேட்டையாடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கர்னல் டேவிஸ் நான்கு ஆண்டுகளுக்கு முன் (1871இல்) கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பியிருந்த சுட்டுக் கொன்ற உயிரினங்களின் பதனிடப்பட்ட தோல்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சிறுத்தைத் (Leopard) தோல்களுக்கு மத்தியில் ஐந்து சிவிங்கிப் புலிகளின் தோல்களைக் கண்டதாகவும், அவை அடிவாரக் காடுகளில் இருந்து வந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்.
இது மட்டுமல்லாமல் கோயம்புத்தூர் கலெக்டராக இருந்த வெத்தர்பன் (A.Wedderburn) அவரது அலுவலகத்தில் சிவிங்கிப்புலியின் பதப்படுத்தப்பட்ட தோலைப் பார்த்ததாகவும், அவரிடம் இருக்கும் ஒரு சிவிங்கிப்புலியின் தோல் போலம்பட்டியின் (தற்போது போளுவாம்பட்டி என அறியப்படுகிறது) அருகிலிருந்து பெறப்பட்டதாகவும் சொல்கிறார்.
கோயம்புத்தூர் பகுதியில் சிவிங்கிப்புலி இருந்ததற்கான மேலும் ஒரு குறிப்பைச் சார்லஸ் இ.க்ளே (Charles E Clay) என்பவர், வேட்டை, பயணம், புறவுலகு குறிப்புகள் கொண்ட 1901இல் வெளியான அமெரிக்க இதழான அவுட்டிங்கில் (Outing) தந்துள்ளார். மெட்ராஸ் ரயில்வே கம்பெனியில் டிவிஷனல் எஞ்சினியராக வேலை பார்த்த ஏ.சி.ஹில் என்பவர், சிவிங்கிப்புலி ஒன்றைக் குட்டியிலிருந்தே கோயம்புத்தூரில் வளர்த்து வந்திருக்கிறார்.
இவர் ரயில் தண்டவாளத்தைப் பார்வையிடப் போகும்போதெல்லாம் இதையும் கூடவே அழைத்துச் செல்வாராம். இதை வெளிமான் வேட்டைக்கும் பழக்கப்படுத்தியுள்ளார். இந்தத் தகவல்களை திவ்யபானுசிங், ’End of the Trail’ நூலிலேயே தந்திருக்கிறார். இது குறித்து மேலும் பல தகவல்களை இணையத்தில் படித்து அறிந்துகொள்ளலாம்.
அரசு ஆவணங்களில் சிவிங்கிப்புலிகள்: ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தொந்தரவு தரும் உயிரினங்கள் எனக் கருதப்பட்ட காட்டுயிர்களைச் சுட்டுக் கொல்ல அனுமதியும் வெகுமானமும் அளிக்கப்பட்டன. இந்தியாவின் சுற்றுச்சூழல் வரலாறு குறித்த ஆராய்ச்சிகளில் முக்கியமான பங்களிப்பு செய்த மகேஷ் ரங்கராஜன் தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம்-நூலகத்தில் பணியாற்றியபோது, அரசு ஆவணக்காப்பகங்களில் உள்ள கோப்புகளில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தக் காட்டுயிர்களின் விவரங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். குறிப்பாக, அதிலுள்ள சிவிங்கிப்புலியின் பதிவுகளைத் தொகுத்து 1998இல் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதினார்.
இந்தத் தகவல்களின்படி தமிழ்நாட்டில் 1874 முதல் 1903 வரை சுமார் 93 சிவிங்கிப்புலிகள் கொல்லப்பட்டுள்ளதை அல்லது பிடிக்கப் பட்டுள்ளதை அறியமுடிகிறது. இவற்றில் 43 திருநெல்வேலி பகுதியிலும், 21 வட ஆற்காடு பகுதியிலும் (தற்போதைய வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரத்தில் உள்ள சித்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி), 21 கோயம்புத்தூர் பகுதிகளிலும், 8 மதுரை சுற்றுப் பகுதிகளிலும் கொல்லப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன.
இதற்கான சன்மானம், ஒரு சிவிங்கிப்புலிக்கு ரூ.18. இப்படி மான் வேட்டைக்காகப் பிடித்தல், வேட்டை முதலிய காரணங்களால் சிவிங்கிப்புலிகள் படிப்படியாகக் குறைந்து 1960வாக்கில் இந்தியாவிலிருந்து முற்றிலும் அற்றுப்போயின.
- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; jegan@ncf-india.org
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago