கோலிவுட் ஜங்ஷன்: சமுத்திரக்கனியின் இருமொழிப் படம்

By செய்திப்பிரிவு

சத்யராஜ் தெலுங்கில் பிரபலமான நடிகராக இருக்கிறார். விஜய்சேதுபதி இந்தியில் தற்போது மிகப் பிரபலமான நடிகராகியிருக்கிறார். சமுத்திரக்கனியோ சத்தமேயில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழி ரசிகர்களுக்கும் பரிச்சயமான நடிகராக மாறியிருக்கிறார். இவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படம் தெலுங்கு, தமிழ் ஆகிய இருமொழிகளில் தயாராகிறது. இன்னும் தலைப்பு சூட்டப்படாத இப்படத்தை பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்குகிறார். ஆந்திராவில் வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்தின் தந்தை - மகன் பற்றிய தற்காலத்தின் கதை.

சமுத்திரக்கனி, தன்ராஜ் ஆகியோர் அப்பா, மகனாக நடிக்க, மோக்ஷா, ஹரிஷ் உத்தமன், பிரித்வி, அஜய் கோஷ், லாவண்யா ரெட்டி, சிலம் ஸ்ரீனு, பிரமோதினி, ராக்கெட் ராகவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் ஹைதராரபாத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத், சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் சார்பில் பிரபாகர் ஆரிபாக வழங்க , ப்ருத்வி போலவரபு தயாரிக்கிறார்.

தெலுங்கில் திருச்சிப் பெண்! - ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவி மகன் ராம் சரண் இணைந்த ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்கே சவால்விடும் ஆக்ஷன் காட்சிகளோடு கடந்த 20ஆம் தேதி வெளியானது ரவி தேஜா நாயகனாக நடித்துள்ள ‘டைகர் நாகேஸ்வர ராவ்’. இந்தப் படத்தில் ஜெயவாணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தவர் அனுக்ரீத்தி வாஸ்.

அவரது கதாபாத்திரத்துக்கும் நடிப்புக்கும் இணையவாசிகள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இவர், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தின் மூலமாகத் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர்.

‘டைகர் நாகேஸ்வர ராவ்’ வெற்றிக் களிப்பில் இருக்கும் அனுக்ரீத்தி வாஸ், மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். சென்னையில் படித்து வளர்ந்த திருச்சியைச் சேர்ந்த பெண்ணான இவர், மாடலிங் மூலம் சினிமாவுக்கு வந்தவர். 2018 மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றவர். ‘இன்னும் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் புகழ்பெற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE