தொழில் நடத்துவது பற்றி இருவகையான சிந்தனைகள் உள்ளன. தொழிலில் நியாயம் இருக்க வேண்டும். யாரையும் ஏமாற்றாமல், சுரண்டாமல் நேர்மையாக வியாபாரம் செய்ய வேண்டும். என்ன தொழில் செய்தாலும் அதில் உண்மை இருக்க வேண்டும். எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதைவிட எப்படிச் சம்பாதிக்கிறோம் என்பது முக்கியம். இதைத் தான் பெரியவர்கள் சொல்லிவந்தார்கள்.
இன்னொரு விதமான சிந்தனையும் உண்டு. பணம் பண்ணுவதுதான் முக்கியம். நியாயம், அநியாயம், எல்லாம் பார்க்க முடியாது. வாய்ப்பைத் தவறவிட்டால் திரும்ப வராது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு எதிராளியை வீழ்த்தி முன்னேறுவதுதான் சாமர்த்தியம். நேர்கோட்டில்தான் போவேன் என்றால் இங்கு எந்தத் தொழிலும் பண்ண முடியாது. இதுதான் இன்று அதிகமாக வளர்ந்துவரும் சிந்தனை.
நிச்சயம் உதவும் விவாதம்
இது நல்லது,கெட்டது என்று கறுப்பு வெள்ளையாகப் பிரித்துப் பார்ப்பது மிகக் கடினம். எது நியாயம் எது அநியாயம் என்று பேசினால் இரு பக்கங்களிலும் வலுவான காரணங்கள் சொல்ல முடியும். அதேநேரம் இது கடினம் என்பதற்காக இதைத் தவிர்த்துவிட்டுப் போவது சரியல்ல. நிர்வாகத்தில் நம்பிக்கை பற்றிய பாடங்களும் பகுதிகளும் மளமளவெனக் குறைந்துவருகின்றன. இந்நிலையில் புதிதாகத் தொழில் தொடங்கும் பலருக்கும் தொடர்ந்து தொழில் செய்பவர்களுக்கும் இந்த விவாதம் நிச்சயம் உதவும்.
ஒரு பொருளுக்கு எவ்வளவு விலை வைக்கலாம், எது லாபம், எது கொள்ளை லாபம், போட்டியைச் சமாளிக்க என்ன வழிகளைக் கையாளலாம், எது நேர்மையான வழி, சட்டப்படி நடந்தால் எல்லாம் சரியா, அல்லது மனிதாபிமானத்துடன் நடப்பதுதான் நியாயமா என்பது போன்ற கேள்விகளைக் கேட்பது உதவும்.
பல திரை அரங்குகளிலும் விமான நிலையங்களிலும் குடிக்கத் தண்ணீர் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால், அங்கு அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பல உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி விலையைவிட 50 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. பல பொருட்களில் கலப்படம் இருக்கிறது. வாடிக்கையாளர்களிடம் சரியான தகவல்கள் சொல்லாத பல பொருட்களும் சேவைகளும் இங்கு உள்ளன.
எத்தனை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தெரிய வேண்டிய உண்மைகளை முழுமையாக அளிக்கின்றனர்? ஒரு அயல் நாட்டு கார் நிறுவனம் தான் செய்யாத தர சோதனையைச் செய்ததாகப் பொய் சொல்லிச் சமீபத்தில் பிடிபட்டது. நிதி நிறுவனங்கள், வங்கிகளிடம் கடன் கேட்டுப் போனால் அவர்கள் நீட்டும் நூற்றுக்கணக்கான தாள்களில் கையெழுத்துப் போடுகிறோம். அந்தப் பொடி எழுத்துக்களைப் படிக்க ஒரு வாரம் ஆகும். அரைகுறையாகச் சொல்லி ஒரு சேவையை விற்பது திருட்டு இல்லையா?
மாட்டிக்கொண்டால் பார்த்துக்கொள்ளலாமா?
கல்வியைப் போதிக்கும் பள்ளிகளில் மாணவச் சேர்க்கையின்போது கரன்ஸிகளைக் கட்டுகளாக வாங்கிப் போட்டுக்கொண்டு ரசீதுகள்கூடக் கொடுப்பதில்லை. இப்படி ஒவ்வொரு துறையிலும் நிறைய சொல்லலாம்.
இதுவரை முறைகேடுகள் நடந்ததாகச் சொல்லப்படும் பெரும் நிறுவனங்களில் எத்தனைக்குப் போதிய தண்டனை கிடைத்திருக்கிறது? “மாட்டிக்கொண்டால் பார்த்துக்கொள்ளலாம்” என்ற மனநிலையில்தான் இங்கே பல தொழில்கள் விதி மீறி நடந்து கொண்டிருக்கின்றன.
இன்னொரு சிக்கலும் உள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு அரசாங்கம், வங்கிகள், ஊடகங்கள் என எல்லாம் துணை நிற்கின்றன. சிறுதொழில்கள் கூட்ட நெரிசலில் மூச்சுவிடச் சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பிழைப்புக்குச் சில விதி மீறல்களையும் வேறு வழி தெரியாமல் சில தவறான வழிமுறைகளையும் கையாண்டுவருகின்றனர்.
எனக்குத் தெரிந்த ஒருவர் தன் தொழில்களுக்காக எல்லாப் பக்கங்களிலும் கடன் வாங்கினார், சீட்டு பிடித்தார், சொந்த நிலங்களை அடமானம்வைத்தார். இன்று ஒரு புறம் தொழில் உறுதிப்பட்டாலும் ஒரு வங்கியின் கடனை அடைக்க முடியாமல் அவரின் கடை மூடப்பட்டு ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
அவர் செயலை நியாயமற்றது என்பதைவிட, அறிவு குறைவானது என்றுதான் சொல்லுவேன். இதே சூழ்நிலையில் ஒரு பெரிய நிறுவனம் இருந்தால் வங்கியுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு மற்ற கடன்களையும் அடைத்து, தொழிலையும் விரிவுபடுத்தி நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்கும். அதனால், சிறு தொழிலாளர்களின் தவறுகளை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், பசிக்குத் திருடியவரை அணுகுவதுபோன்ற புரிதலுடன்கூடிய அணுகுமுறை அவசியம்.
நாணயம் முக்கியம்
நெறிமுறைகள் பொதுவானவை. நாம் செய்வது நமக்குத் திரும்ப வரும் என்பது நம் நம்பிக்கை. நல்லவர்களாக இருப்பதுதான் புத்திசாலித்தனம். பணியாளர்களிடமும் வாடிக்கையளர்களிடமும் நியாயமாக நடக்காவிட்டால் எந்தத் தொழிலும் நாளடைவில் வளர முடியாது. ஏமாற்றுதல் என்றுமே குறுகிய கால நடவடிக்கைதான். நாணயம் மட்டுமே வெல்லும்.
ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் அறிவைத் தொழிலுக்குப் பயன்படுத்தலாம். நேர்மையான, வெளிப்படையான அணுகுமுறை ஒரு தொழிலுக்குச் சிறந்த நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். இன்றைய தகவல்தொழில்நுட்ப உலகில் யாரையும் வெகுநாட்கள் ஏமாற்றுவது சாத்தியமில்லை.
தவறான விதிமுறைகளை மட்டுமே கொண்டு சரியான இடத்துக்குச் செல்ல முடியாது. நம் நம்பிக்கைகள்தாம் நம்மைச் சரியான ‘முன் மாதிரி’களை கண்டுகொள்ளவைக்கும். நாளைய தொழில் உலகின் நம்பிக்கை, இன்றைக்கு நம்மிடம் உள்ள நாணயம்தான் தொழில் அதிபர்களே!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago