கோலிவுட் ஜங்ஷன்: சாக்‌ஷியின் புதிய தொடர்!

By செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்து வருபவர் ‘பிக்பாஸ்’ புகழ் சாக்ஷி அகர்வால். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில், எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான ‘நான் கடவுள் இல்லை’ படத்தில் ஆக்ஷன் கதாநாயகியாக அதிரடி காட்டியிருந்தார்.

பின்னர் பிரபுதேவா நடித்திருந்த ‘பஹீரா’ படத்தில் வில்லி கதாபாத்திரம் ஏற்றுத் திகைக்க வைத்தார். தற்போது ஹங்காமா (hungama) ஓடிடியில் வெளியாகியுள்ள ‘என் எதிரே ரெண்டு பாப்பா’ என்கிற தமிழ் சீரீஸில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இதுவொரு ‘அடல்ட் காமெடி’ தொடர். எதற்காக இப்படியொரு ஜானரைத் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டபோது: “எந்த ஜானராக இருந்தாலும் அது பார்வையாளர்களை நேர்மையான வழியில் ‘எண்டர்டெயின்’ செய்கிறதா என்பதை மட்டுமே பார்க்கிறேன். ‘அடல்ட் காமெடி’ என்பது வெறுக்கத்தக்க ஜானர் இல்லை. இன்று பாலியல் குற்றங்கள் மலிந்திருக்கும் நம் நாட்டுக்குப் பாலியல் கல்வியை மறைமுகமாக முன்வைக்கும் அடல்ட் காமெடி அவசியமானது என நினைக்கிறேன்.” என்றார்.

மில்லர் அல்ல; கில்லர்! - கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த ‘சாணிக் காயிதம்’ படத்தைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கிவரும் படம் வரலாற்றுப் புனைவுப் படம் 'கேப்டன் மில்லர்'. தனுஷ் டைட்டில் ரோலில் நடிக்க, கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்து வந்தார்.

ஊட்டியில் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது பிரியங்கா மோகன் நடிக்க வேண்டிய காட்சிகள் நிறைவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. தனுஷ் ஏற்றுள்ள கதாபாத்திரம் பற்றி “மில்லர் அல்ல அவர் கில்லர்” என்று பதிவிட்டுள்ள பிரியங்கா, தனது கடைசி நாள் படப்பிடிப்பில் இயக்குநரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டுவது போல் எடுத்துக்கொண்ட படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

தென்னிந்திய மொழிகளுடன் இந்தியிலும் வெளியிடும் விதமாக சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன், நிவேதிதா சதீஷ் என பல மொழி நடிகர்களைப் படத்துக்குள் கொண்டு வந்துள்ளார் இயக்குநர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கவனம் பெற்ற ‘கருவறை’ - சமீபத்தில் ஊடகங்களில் பேசுபொருளான நிகழ்வு, 69 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு. ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ விருதுக்குத் தேர்வானது சர்ச்சையானாலும் ‘கடைசி விவசாயி’, ‘ராக்கெட்ரி’, ‘கருவறை’ ஆகிய படங்களின் இயக்குநர்களுக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன. ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது பெற்றுக்கொடுத்துள்ள ‘கருவறை’ குறும்படத்தை எழுதி, இயக்கியிருப்பவர், நடிகரும் இயக்குநருமான இ.வி.கணேஷ்பாபு.

மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ரித்விகா, மிதுன், வடிவுக்கரசி, அஞ்சனா தமிழ்ச்செல்வி, ரோகிணி ஆகிய பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் இக்குறும்படம், குழந்தையின்மையால் பல லட்சம் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கும்போது, வறுமையினால் பல லட்சம் உயிர்கள் கருவிலேயே கலைக்கப்படும் சமூக அவலத்தைப் பற்றிப் பேசியிருக்கிறது. எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில் இ.வி.கணேஷ்பாபு இயக்கியிருக்கும் ‘கட்டில்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

‘போர்க்களம்' இயக்குநர் அடுத்து.. கடந்த 2018இல் வெளியான ‘கே.ஜி.எஃப்’புக்கு முன்பே, ஆடுகளம் கிஷோர் நடிப்பில், பண்டி சரோஜ்குமார் இயக்கத்தில் 2010இல் வெளியான ‘போர்க்களம்’ திரைப்படம் அதன் காட்சியமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றுக்காகப் பாராட்டப்பட்டது.

அதன் பின்னர் ஓடிடியில் வெளியான ‘மாங்கல்யம்’ என்கிற தெலுங்குப் படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துக் கவனிக்க வைத்திருந்தார் பண்டி சரோஜ்குமார். தமிழிலும் வெளியான அப்படத்தைத் தொடர்ந்து, ‘பராக்ரமம்’ என்கிற தலைப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய படத்தைத் தயாரித்து, இயக்கி அதில் நாயகனாகவும் நடிக்கிறார்.

இதற்காக பி.எஸ்.கே மெயின்ஸ்ட்ரீம் என்கிற பட நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். படம் குறித்து அவர் கூறும்போது, “மதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வாழும் துரைராஜா என்கிற இளைஞனின் வாழ்க்கையில் உள்ளூர் கிரிக்கெட், காதல், நாடக வாழ்க்கை, கட்சி அரசியல் ஆகியவை எப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்குகின்றன என்பதுதான் கதை. முழுமையான பொழுதுபோக்குப் படமாக உருவாகும் இப்படத்தின் இசையமைப்பு, படத்தொகுப்பு ஆகிய பணிகளையும் நானே ஏற்றுள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.

ஷாரூக் கானின் அடையாளம்: ‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் நடித்துள்ள ‘ஜவான்’ இந்திப் படத்தை இயக்கியிருக்கிறார் அட்லீ. இந்தி தவிர, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

அதில் ஷாருக் கான், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். காணொளி வடிவில் கமல்ஹாசன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை விழாவில் திரையிட்டனர். அதன்வழி பேசிய கமல்ஹாசன், “கடந்த 30 ஆண்டுகளாக ஷாருக் கான் அன்பின் அடையாளமாகத் திகழ்கிறார்.

கடினமான காலகட்டங்களிலும்கூட அவரது புன்னகை பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஒளியாக இருந்திருக்கிறது. இப்படமும் அவரும் மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும் என விரும்புகிறேன். ஷாருக் எல்லாவற்றையும் கண்ணியத்துடன் கையாளும் விதம் ஊக்கமளிக்கிறது” என்று பாராட்டி, வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE