இந்த ஆண்டு கல்வி தொடர்பாக உலக நாடுகள் முதல் தமிழ்நாடுவரை நிகழ்ந்த முக்கியச் சம்பவங்களின் தொகுப்பு:
உலுக்கியெடுத்த நீட் தேர்வு
மாநிலப் பாடத்திட்டத்துக்கும் இந்திய மருத்துவக் கழகம் நீட் தேர்வுக்காகப் பரிந்துரைத்திருக்கும் பாடத்திட்டத்துக்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது, நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகுதான் பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம், பிளஸ் டூ தேர்வை முடித்த மாணவர்களை மீண்டும் நெருக்கடிக்கு ஆளாக்கக்கூடாது - இப்படிப் பல தரப்பு கண்டனங்கள் நீட் தேர்வுக்கு எதிராக இரண்டாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுப்பப்பட்டன. இதனால், 2016-ல் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து உச்ச நீதிமன்றம் விலக்களித்தது.
ஆனால், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேர 2017-ல் கட்டாயம் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவக் கழகம் நீட் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், மே 7-ம் தேதி தேர்வு விதிமுறைகளைப் பின்பற்றுகிறேன் என்கிற பெயரில் மாணவர்களை அச்சத்தில் ஆழ்த்தி நீட் தேர்வு நடத்தப்பட்டது.
எப்படியாவது நீட் தேர்விலிருந்து ஓராண்டு தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என்ற நம்பிக்கைக்யில் தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. ஆனால், ஆகஸ்ட் 22-ம் தேதி நீட் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அரசு, மக்கள், எல்லோரையும்விட தமிழ்நாடு மாணவர்களின் எதிர்பார்ப்பு சுக்குநூறாகிப்போனது.
நீட் எழுதிய தமிழ்நாட்டு மாணவர்களில் 38.84 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சிபெற்றனர். இந்நிலையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து நீட்-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, பிளஸ் டூ பொதுத் தேர்விலும் 1200-க்கு 1176 மதிப்பெண்களைக் குவித்து முன்னுதாரணமாய் ஒளிர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் தமிழக மாணவர்களை உலுக்கியெடுத்தது நீட் தேர்வு.
புதிய பார்வையில் பாடத்திட்டம்!
தமிழ்நாடு அரசுப் பள்ளிப் பாடத்திட்டம் ஏழாண்டுகளுக்கு முன்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்புவரைக்கும் திருத்தியமைக்கப்பட்டது, 12 ஆண்டுகளுக்கு முன்பாக உயர்கல்விப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. 2017-ல் பாடத்திட்ட மாற்றம் என்பது புதிய திறப்பாக அமைந்தது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவுப்படி, துறை செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில் புதிய பாடத்திட்டத்துக்கான நடவடிக்கைகள் ஜூன் மாதம் தொடங்கப்பட்டன. ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மட்டுமின்றி வரலாற்றாசிரியர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் திட்டக் குழு உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டனர். சி.பி.எஸ்.சி. உட்பட 15 கல்வி வாரியங்களின் சிறப்பம்சங்களை ஒருங்கிணைத்து, சிங்கப்பூர், அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளின் பாடத்திட்டத்தோடு ஒப்பிட்டு அவற்றுக்கு நிகரான பாடத்திட்டத்தை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
முதல் கட்டமாக, பிளஸ் 1 பொதுத் தேர்வாக நடத்தப்படும், தரவரிசை முறை நீக்கம், அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் போன்ற புத்துணர்ச்சி ஊட்டும் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. பத்தாம் வகுப்பு முடித்ததும் வேலை பெறவும், போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறவும் வழிவகுக்கும் விதத்தில் பாடங்கள் வடிவமைக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. அதேநேரத்தில் மனப்பாடக் கல்வி முறைக்கு மாற்றாகச் செயல்வழிக் கல்விக்கும், மாணவர்களின் படைப்பாற்றலுக்கும், கலை, விளையாட்டு உள்ளிட்ட அம்சங்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இதற்கு இடையில் ஆகஸ்ட் 24-ம் தேதி உதயசந்திரனுக்கு பாடத்திட்டத் தயாரிப்பு பணியை மட்டும் ஒதுக்கிவிட்டு அவருக்கு மேல் முதன்மைச் செயலராகப் பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டார். இதைக் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் பலர் கண்டித்தனர். இந்நிலையில் நவம்பர் 20-ம் தேதி பொதுமக்கள் கருத்துக்கேட்புக்காக பாடத்திட்ட வரைவு வெளியிடப்பட்டது. வரைவின் உள்ளடக்கத்தில் வரவேற்கத்தக்க அம்சங்கள் காணப்பட்டாலும் நீட் தேர்வைத் தமிழ்நாட்டு மாணவர்கள் ஏற்றுக்கொள்ளச்செய்கிறது இந்தப் புதிய பாடத்திட்டம் என்கிற எதிர்ப்பு குரலும் வலுவாக ஒலித்தது!
24CH_YE2தடையை எதிர்த்த மாணவர்கள்!
ஜல்லிக்கட்டுத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை மெரினா கடற்கரை, மதுரை தமுக்கம் மைதானம், கோவை வ.உ.சி. மைதானம் என தமிழகம் முழுவதும் மாணவர் எழுச்சி, நீட் தேர்வின் விளைவாக உயிர்நீத்த மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு நீட் தேர்வை எதிர்த்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களில் மாணவ- மாணவிகள் (பள்ளி, கல்லூரி) போராட்டத்தில் குதித்தனர். இதேபோல மாட்டிறைச்சி தடையை எதிர்த்துத் தேசிய அளவில் பல கூட்டங்களும் நிகழ்ச்சிகளும் இந்தியா முழுவதும் மே மாதம் நடைபெற்றன.
அவற்றில் ஒன்று, சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மேம் 28-ம் தேதி நடைபெற்ற மாட்டிறைச்சித் திருவிழா. இதில் 50-க்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி. மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் சென்னை ஐ.ஐ.டி.யின் விண்வெளி பொறியியல் முனைவர் பட்ட மாணவரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தில் உறுப்பினருமான ஆர். சூரஜ் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பினரால் மே 30-ம் தேதி தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலால் சூரஜ்ஜின் வலது கண்ணில் காயம் ஏற்பட்டது.
அமெரிக்கா இல்லையேல் கனடா!
டிரம்பின் விசா கெடுபிடி கொள்கையானது அமெரிக்கா தவிர மற்ற நாடுகளுக்குச் சென்று படிக்க இந்திய மாணவர்களைத் தூண்டியுள்ளது. ‘டிரம்ப் விளைவு’ என்று சொல்லப்படும் இந்நிலையால் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு வரலாறு காணாத எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் 2017-ல் படிக்கச் சென்றுள்ளனர். அதிலும் சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில் கனடாவில் கல்விக் கட்டணம் மிகக் குறைவு என்கிறது ஹெச்.எஸ்.லி.சி.யின் ஆய்வறிக்கை. ஆங்கில மொழி பேசும் உலக நாடுகளில் மிகக் குறைவான கட்டணத்தில் கல்வி அளிக்கும் நாடும் கனடா மட்டுமே.
இங்கு 50-க்கும் மேற்பட்ட சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளன. இது மட்டுமல்லாமல், 2017-ல் மாணவர் விசாவை இரண்டு மடங்காக அதிகரித்தது கனடா. இதன் காரணமாக, கனடா குடியேற்றத்துக்கான பத்திரிகை தரும் தகவலின்படி 2010-ல் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் மட்டுமே கனடாவுக்குச் சென்ற நிலையிலிருந்து 2017-ல் 75 ஆயிரம் இந்திய மாணவர்கள் கனடாவில் படிக்கும் சூழல் கனிந்துள்ளது.
அறிவியல், பொறியியல் பாடங்களில் முதுநிலைப் பட்டம், எம்.பி.ஏ. உள்ளிட்ட படிப்புகளுக்கு மட்டுமே கனடாவுக்குச் செல்லும் போக்கிலிருந்து இளநிலைப் படிப்புகளுக்கும் கனடாவைத் தேர்ந்தெடுக்கும் சூழல் தற்போது உருவாகி இருக்கிறது. வெளிநாட்டினர் கனடாவில் குடியேறுவதை வரவேற்கும் கொள்கை கொண்டவராக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது.
# கல்வியில் பிற்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த தலித் சிறுமிகளுக்கு விடுதியுடன்கூடிய பள்ளிகளைத் திறப்பதற்கான திட்டத்தைச் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஜூலை 7-ம் தேதி அறிவித்தது.
# ராகிங் மூலம் உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ மாணவர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க, ‘Anti-Ragging’ மொபைல் ஆப்-ஐ பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகப்படுத்தியது. www.antiragging.in மூலம் இதில் பதிவுசெய்துவிட்டு, ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் மாணவர்கள் புகார் அளிக்கலாம்.
# வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான லோக்தக் மணிப்பூர் உள்ளது. அங்குள்ள சம்பு காங்போக் மிதக்கும் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளின் படிப்பு இடைநிற்றலைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்தியாவின் முதல் மிதக்கும் ஆரம்பப் பள்ளி பிப்ரவரி 13-ம் தேதி லோக்தக் ஏரியில் தொடங்கப்பட்டது.
# பி.எட்., டி.எல்.எட். உள்ளிட்ட ஆசிரியர் பயிற்சிப் படிப்புகளை வழங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் தேசிய ஆசிரியர் பயிற்சி கழகத்தின் அங்கீகாரத்தை கட்டாயம் பெற வேண்டும் என்று மத்திய அமைச்சகம் முடிவெடுத்தது. இதன்படி நவம்பர் 1-ம் தேதி தேசியக் கவுன்சில் கல்விச் சட்டம் 1993-ல் சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
# பணி இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் 2013-ன் கீழ் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் ‘SHEbox’ என்னும் ஆன்லைன் புகார் தளத்தை நவம்பர் 7-ம் தேதி மத்திய அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அறிமுகப்படுத்தியது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago