புது வேலையில் பொறுமை காட்டுங்கள்

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

தேன் நிலவுக் காலம் வேலைகளிலும் உண்டு. இது அதிகம் பேசப்படாத ஒரு விஷயம். விபரீதக் கற்பனைகள் வேண்டாம். தேன் நிலவுக்காலம் எது என்றால் வேலைக்கு சேர்ந்த முதல் இரண்டு வாரங்கள்!

முதன் முறையாக வேலைக்குச் சேர்பவர்கள் இதைக் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். கேம்பஸிலிருந்து உங்களைத் தேர்வு செய்திருந்தால், நீங்கள் வேலைக்குச் சேர்வதை ஒரு நிறுவன விழா போல நிகழ்த்துவார்கள். அது உங்கள் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக உயர்த்தும்.

‘வெல்கம்’ பலகை தொங்கும். ஹெச்.ஆர். கூட்டம் சிரித்துச் சிரித்து வளைய வரும். பெரிய தலைகள் வந்து ஊக்க உரை ஆற்றுவார்கள். ‘எந்தப் பிரச்சினை என்றாலும் நேரே என்னிடம் வாருங்கள்’ என்பார்கள். மற்ற துறைத் தலைவர்கள் குழுமியிருப்பர். நீங்கள் எழுந்து பேசினால் ஆரவாரமாகக் கைத்தட்டல் கிடைக்கும். நிறுவனம் சம்பந்தப்பட்ட முக்கிய வருங்காலத் திட்டங்களை மேடையில் பேசுவர். பின்னர் ஸ்பெஷல் சாப்பாடு இருக்கும். அந்தச் சூழ்நிலையில் எல்லாமே ஸ்பெஷல்தான். அடையாள அட்டையில் உங்கள் முகம் பார்த்தால் பெருமையாக இருக்கும்.

நிறுவனத்தின் நீள, அகலத்தைச் சுற்றிக் காட்டுவார்கள். நிறுவனப் பெருமை பேசும் வீடியோக்களைக் காட்டுவார்கள். நிறுவனத்துக்காக ஓர் அந்நிய நாட்டின்மீது படையெடுக்கும் அளவுக்கு உத்வேகம் கொடுப்பார்கள். இண்டக்ஷன் பயிற்சி என்றால் நிறுவனத்தில் சிறந்த பேச்சாளர்கள் வந்து பேசுவார்கள். வீட்டிற்கு வந்து நீங்கள் பேசும் பெருமையில் உங்கள் பெற்றோர் உடனே மொபைலில் தங்கள் சொந்தங்களிடம், “1 பில்லியன் டாலர் வருமானம் கம்பனிக்கு. நல்ல சிஸ்டம்ஸ். எல்லா வசதிகளும் இருக்கு. கேண்டீன் சாப்பாடுகூட நல்லா இருக்காம். பெரிய பிராண்ட் இல்ல... அதான்!” என்று படம் காட்டுவார்கள்.

இரண்டு வாரங்களில் நிலைமை தலைகீழாக மாறலாம்.

உங்கள் துறைத் தலைவர் குணச்சித்திர வேடம் கலைந்து வில்லனாகச் சிரிப்பது போலத் தோன்றுவார். மற்ற பெரிய தலைகளைக் கண்ணில்கூடப் பார்க்க முடியாது. பெரிய தலைகள் பற்றியெல்லாம் பெரிய வதந்திகள் காதில் விழும்.

கம்பனி சாப்பாடு வர வர படு சுமார் என்பீர்கள். ஆபீஸின் தவறுகளைப் பழைய பெருச்சாளிகள் வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள். ‘இதெல்லாம் நம்பித்தான் நாங்களும் சேர்ந்தோம்!’ என்று பெருமூச்சு விடுவார்கள் சீனியர்கள். ‘பேசாம வெளியே பாரு சீக்கிரமா... இங்கிருந்தா வேஸ்ட்!’ என்றுகூடச் சில நல்ல எண்ணம் கொண்ட நண்பர்கள் அறிவுரை சொல்வார்கள்.

திடீரென்று நீங்கள் மட்டும் ஒரு சிக்கலான முடிச்சை அவிழ்ப்பது போன்று உணர்வீர்கள். வேலைக்குச் செல்வதைப் பெரிய காரணம் இல்லாமல் வெறுக்க ஆரம்பிப்பீர்கள். ஆக, உங்கள் தேன் நிலவுக் காலம் முடிந்தது என்று பொருள்.

பல திருமணங்கள் முதல் மாத்தி லேயே பஞ்சாயத்திற்கு வருவது இன்று சகஜமாகிவருகிறது. காரணம் எதிர்பார்ப்புகள் பொருந்திப் போகாததுதான்.

மிகையான எதிர்பார்ப்புகளை வளர்த்து அவற்றைப் பூர்த்திசெய்யாத போது ஏமாற்றங்கள் நிகழ்வது இயற்கையே. பணியிடத்திற்கும் இது பொருந்தும். முதல் மாதத்திலேயே வேலை பிடிக்காமல் விலகுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. காரணம் மித மிஞ்சிய எதிர்பார்ப்புகள்தான்.

வேலைகள் அரிதாக இருந்த காலத்தில் வேலை கிடைப்பதே வரம் கிடைப்பது போல. சேர்ப்போரைக் கவரும் திட்டமெல்லாம் கிடையாது. எந்த அவசரமும் இல்லாமல் வேலைக்கு அறிமுகம் ஆகலாம். முதலாளிகள் மாதக்கணக்கில்கூடக் கண்ணில் படாமல் இருக்கலாம். பெரிய வாக்குறுதிகள் இரண்டு பக்கங்களிலும் கிடையாது. அதனால் இரண்டு பக்கங்களிலும் எதிர்பார்ப்புகளும் அதிகம் கிடையாது. பயிற்சிக் காலமும் அதிகம். அதனால் வேலையும் பணியிடமும் பழகுவதற்குப் போதுமான நேரம் இருந்தது.

இன்று நல்ல ஆட்கள் கிடைக்கணும். அவர்களைத் தக்கவைக்க வேண்டும். அதற்கு நல்ல தோற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இதற்காகத்தான் இந்த மிகை நாடகங்கள். அதே சமயம், சேர்ந்த சில காலத்திலேயே வேலைக்கு முழுவதும் தயாராக வேண்டும். புகை போட்டுப் பழுக்க வைத்த பழங்களாகச் சீக்கிரம் விற்க வேண்டும். இந்தத் துரித மாற்றமும் அவசரமும் புதியவர்களை அதிர்ச்சிகொள்ள வைக்கிறது.

தவிர, அலுவலக அரசியல் அறியாத புது ஆட்கள் பல சமயம் பழையவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகி வேலை இழக்கும் பரிதாபமும் நடக்கும். ‘இங்கு மனுஷன் வேலை பார்ப்பானா? வேறு வேலை பார்...’ என்பார் அங்கு பத்து வருடங்களாக வேலை செய்யும் மனுஷன்!

யார் சொல்வதை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாத வயதில் பலர் அவசர முடிவுகள் எடுப்பார்கள். ‘பாஸ் சரியில்லை. ஹெச். ஆர். வேஸ்ட். ஸ்கோப் இல்லை. ஒரே பாலிடிக்ஸ்’ என ஆயிரம் காரணம் சொல்வதற்கு முன் இந்த வேலையைத் துறக்கும் அளவிற்குப் பெரிய காரணங்கள் உண்டா என்று யோசியுங்கள்.

ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் செல்லும் எந்த இடத்திலும் தேன் நிலவுக் காலம் உண்டு. அதற்குப் பின் உங்களை அதிகம் சீந்த மாட்டார்கள். பெஃபார்மென்ஸ் மட்டும் எதிர்பார்ப்பார்கள். இதுதான் நிதர்சனம். தலை தீபாவளி கவனிப்பை ஒவ்வொரு தீபாவளியிலும் எதிர்பார்க்க முடியுமா என்ன?

அதனால் கொண்டாட்டங்கள், சிறப்புக் கவனிப்பு, பெரியவர்கள் உபசரிப்பு என எல்லாப் ‘புதுசு’களும் தற்காலிகம்தான். பின் வேலை தரும் கற்றலும் அனுபமும் தான் நிரந்தரம். அதனால் பொருளியல் சுகங்களில் கவனிப்புகளில் மயங்காமல், பணி சார்ந்த வலிகளுக்கும் தியாகங்களுக்கும் தயாராகுங்கள்.

ஒரு மொக்கை கேள்வி பதிலை முகநூலில் படித்தேன்.

“விவாகரத்திற்கு எது காரணம்?”

“திருமணம்!”

சிரித்துவிட்டு யோசியுங்கள். ராஜினாமாவுக்குக் காரணம்? வேலைதான்!

வேலையைப் பெறுவதற்கும் துறப்பதற்கும் என்றும் நியாயமான காரணங்கள் வேண்டும்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்