தொழில் தொடங்கலாம் வாங்க 40: உங்கள் தொழிலுக்காகக் கவலைப்படுங்கள்!

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

ல்வி கற்பதற்கு வயதில்லை என்றாலும் இளம் வயதில்தான் கல்வி என்பது எங்கோ நம் மனதில் ஊறிப்போய்இருக்கிறது. வேலை, கல்யாணம், குடும்பம், தொழில் என்று வந்துவிட்டால் கல்வி கற்பது கடினம் என்றுதான் நினைக்கிறோம்.

எதுவரை படிக்கலாம்?

எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால் படிக்கலாம் என்று நினைப்போர் உண்டு. அல்லது வாழ்க்கையில் செட்டில் ஆகும்வரை படிக்கலாம் என்ற எண்ணமும் உண்டு. வேலையில் உயர அதற்கான படிப்பு படிக்கலாம் என்ற பழக்கமும் இங்கு உண்டு. அல்லது விருப்பத்தின் பேரில் சிலர் கற்கலாம்; அதனால் வேலையில் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும்கூட.

தொழில்முனைவோர் காலம் காலமாகவே கல்வியைப் பிறகு தொடர்வதில்லை. நேரமின்மைதான் காரணமா? இல்லை. கவனம் சிதற வேண்டாம் என்பதால்தான். தொழில் தவிர மற்றதை நினைக்க முடிவதில்லை. அப்படிச் சந்தர்ப்பம் கிடைத்தால் குடும்பத்துக்கோ அல்லது கேளிக்கைக்கோதான் நேரம் கற்பதற்கு அல்ல என்பதுதான் பெரும்பான்மையினரின் எண்ணம். குழு நடவடிக்கைகளில் தொடர்புகள் பெருகுவதால் கிளப், சங்கம் என்று கிளம்பிவிடுகிறார்கள். ஆனால், ஒரு சீரியஸான படிப்பு என்பதற்கான மனநிலையில் பலர் இல்லை.

கூகுள் மட்டும் போதாது

கல்வித்துறையும் அதற்கேற்ற மாதிரி தொழிலதிபர்களின் தேவையை நேரடியாகப் பூர்த்தி செய்வதில்லை. எம்.பி.ஏ. படிப்பு கிட்டத்தட்ட காலாவதியாகிவிட்டது. அதைப் படிப்பவர்களுக்கே பெரும்பாலும் வேலை இல்லை. ஒரு சில நல்ல நிர்வாகப் பள்ளிகளில் நடத்தும் பயிற்சி வகுப்புகளும் குறுகிய காலச் சிறப்பு பட்டயங்களும் தேவலாம். ஆனால், பகுதி நேரமாகப் படிக்கும் அளவுக்குக்கூடத் தொழிலதிபர்களுக்கான படிப்புகள் குறைவு. தவிர, தொழில்முனைவோர் எதிர்பார்க்கும் பல விஷயங்கள் வேறு. நம் கல்வி அமைப்பில் உள்ள விஷயங்கள் வேறு. இதனால்தான் பலர் புத்தகங்கள் படிப்பதிலும், சில நேரம் பயிற்சி வகுப்புகளுடனும் நிறுத்திக்கொள்கிறார்கள். கூகுளேபோதும் என்று நினைப்போரும் உண்டு.

ஆனால், என்னைப் பொறுத்தவரை, நீங்கள் எந்த விதமான தொழில் செய்தாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஏதாவது ஒரு கோர்ஸ் படிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் 5 ஆண்டுகள் என்பது மிக மிக அதிகம். காரணம் 5 ஆண்டுகளில் எல்லாத் தொழில்நுட்பமும் நம்ப முடியாத அளவுக்கு முன்னேறிவிடுகிறது. ஆனால், ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு கோர்ஸ் என்பது உத்தமம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இன்று ஆன்லைன் கோர்ஸ்கள் பல வந்துவிட்டன. சிறந்த பல்கலைக்கழகத்திலிருந்து வழங்கப்படும் சிறந்த வகுப்புகள் இலவசமாய்க் கிடைக்கின்றன. குழந்தைக்குப் புகட்டுவது போலச் சின்னச் சின்னதாகத் தருகிறார்கள். சிரமப்படுத்தாத வீடியோக்கள் ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டுச் சேரலாம். எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம். உடன் படிப்பவருடன் உரையாடலாம். ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்கலாம். கிடைக்கின்ற நேரத்தில், நீங்கள் கற்கும் வேகத்தில் படிக்க முடியும்.

அதனால் கண்டிப்பாகப் படியுங்கள். நீங்கள் ஒரு நாள் இல்லாவிட்டாலும் உங்களுடையத் தொழிலே இடிந்து விழுந்து விடும் என்றால், முதலில் உங்கள் தொழிலுக்காகக் கவலைப்படுங்கள். இந்த நிலை நீடித்தால் அது உங்களுக்கும் நல்லதல்ல. உங்கள் தொழிலுக்கும் நல்லதல்ல. இது பெருமைப் பட வேண்டிய விஷயம் அல்ல. “நான் இல்லை என்றால் எதுவும் நடக்காது என் தொழிலில்!” என்று நீங்கள் நினைத்தால் உங்கள் தொழிலைச் சீர் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என்று பொருள்.

ஓய்வோடு படிப்பு

உங்கள் தொழில் எங்குச் செல்கிறது, மாறி வரும் முக்கியப் போக்குகள் என்ன, உங்கள் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள், இதே சவாலை வெளிநாடுகளில் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்று தெரியச் செய்தி ஊடகங்கள் மட்டும்போதாது. தவிரக் கல்வி கற்கும் சூழல் மிக முக்கியம். அதில் பயணம் இருந்தால் இன்னமும் சிறப்பு. வெளிநாடுகள் சென்று தவறாமல் ஒரு புதிய கோர்ஸ் படித்து வரும் நண்பர்கள் எனக்கு நிறைய தெரியும். அவர்கள் சொல்லும் அனுபவங்கள் குறிப்பிடத்தக்கவை. என் நண்பர் சொல்வதைக் கேளுங்கள்.

“நான் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஒரு வளர்ந்த நாட்டில் ஏதாவது ஒரு புரோகிராமில் கண்டிப்பாகக் கலந்துகொள்வேன். பல தேசத்து மனிதர்களின் நட்பு, புதிய தொழில்நுட்பம், மிரட்டாமல் சொல்லிக் கொடுக்கப்படும் கல்விமுறை, கிடைக்கும் சான்றிதழால் உள்ளூரில் மதிப்பு, சுற்றுலா போனது போன்ற சூழலும் அனுபவமும் ரம்மியமாக இருக்கும். ஒவ்வொரு முறை திரும்புகையிலும் ஒரு புதுச் சிந்தனையைச் செயல்படுத்த முடிவெடுப்பேன்!”

வெளிநாடு செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. அதிக நேரமும் பணமும் செலவு செய்ய வேண்டும் என்றும் கட்டாயமில்லை. உங்கள் தொழிலை யோசிக்காதபோது தான் அதற்கான சிறந்த யோசனைகள் வருகிறது. சாவியைத் தேடி ஓய்ந்து டி.வி பார்க்கும்போது எங்கு வைத்தோம் என்று நினைவுக்குவருவது போலத்தான் இதுவும்.

“இதுநாள்வரை என் தொழிலைத் தவிர வேறு எதையும் சிந்தித்ததில்லை” என்று நீங்கள் சொன்னால் உங்களுக்கு ஒரு கட்டாயச் சிறு ஓய்வு அவசியம். வேறு சூழலில் வேறு மனிதர்களுடன். கல்வி அனுபவத்தை விட வேறு எது அதைத் தர முடியும்?

என்ன படிக்கப் போகிறீர்கள்? முடிவு செய்யுங்கள்!

தொடர்புக்கு:  gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்