பத்தொன்பது வயதான கல்லூரி மாணவி அனுஷ்கா, தான் நிர்வாணமாக இருப்பது போல் ‘மார்ஃப்’ செய்யப்பட்ட ஒளிப்படத்தை இணையத்தில் கண்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்தார். அனுஷ்காவின் முன்னாள் காதலர் அப்பெண்ணின் முகத்தை வேறொரு பெண்ணின் நிர்வாண உடலின் ஒளிப்படத்துடன் இணைத்து, அதை இணையத்தில் உலவவிட்டார்.
பார்ப்பதற்கு அனுஷ்காவைப் போலவே இருந்த அந்த ஒளிப்படம் இணையத்தில் பதிவேற்றப்பட்டதோடு, அனுஷ்கா படித்துவந்த கல்லூரி வாட்ஸ்ஆப் குழுவிலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அதே நாள் அவருடைய பெற்றோரின் பார்வைக்கும் சென்றுவிட்டது.
தொழில்நுட்ப உதவியுடன் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை (technology-facilitated sexual violence – TFSV) என்று வரையறுக்கத்தக்க எண்ணற்ற நிகழ்வுகளுக்கு இது ஒரு சோறு பதம் மட்டுமே. இந்தியா முழுவதும் கல்லூரி மாணவர்களைப் பாதித்துவரும் பிரச்சினையாக இது வளர்ந்துவருகிறது. இது குறித்து நான் நடத்திய ஆய்வில், இணையவழி பாலியல் அத்துமீறல்கள் இளம் பெண்களையே அதிகமாகப் பாதிப்பதாகத் தெரியவந்தது.
எனது ஆய்வில் பங்குபெற்ற 111 இந்தியக் கல்வி நிலையங்களைச் சேர்ந்த 400 மாணவர்களில், தொழில்நுட்ப உதவியுடன் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையை ஏதேனும் ஒரு வகையில் எதிர்கொண்டதாகச் சொன்ன பெண்கள் 60%; ஆண்கள் 8%. மார்ஃப் செய்யப்பட்ட நிர்வாண ஒளிப்படங்கள், பாலியல்ரீதியான மிரட்டல், துன்புறுத்தல், பாலியல் உறுப்புகளைக் காண்பித்தல் (digital flashing), பாலியல்ரீதியான வெளிப்படையாகக் கருத்துகள், செய்திகளை அனுப்புதல் என இந்த வன்முறை பல்வேறு வடிவங்களில் நிகழ்கிறது. அனைத்து சமூக ஊடகங்கள், இணையவழி உரையாடல் தளங்களிலும் இது நிறைந்திருக்கிறது என்றாலும் இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் குற்றம்சாட்ட முடியும்.
» தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு
சட்டங்களின் நிலை: இணையவழிப் பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பலர் மனச்சோர்வு, மன அழுத்தம், பதற்றம், தற்கொலை எண்ணங்கள் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு முன்னேற்றங்களை இழத்தல், சமூகரீதியாகத் தனிமைப்படுத்தப்படுதல், குடும்ப உறுப்பினர்களின் வன்முறைக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகுதல் போன்ற விளைவுகளும் இணையவழிப் பாலியல் அத்துமீறல்களால் நிகழ்கின்றன. அதே நேரம், தமது அடையாளங்களை மறைத்துக்கொண்டு, இந்த அத்துமீறலை நிகழ்த்துகிறவர்கள் அந்த அடையாளமின்மைக்குள் பாதுகாப்பாக ஒளிந்துகொள்வார்கள்.
இணையவழிப் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படு கிறவர்கள் உதவிக்கு யாரை நாட வேண்டும்? இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, தொழில்நுட்ப உதவியுடன் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையின் சில வடிவங்களைக் குற்றமாக வரையறுக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்டோர் இந்தச் சட்டத்தை நாடுவதைத் தடுக்கும் அளவுக்கு அதில் குழப்பங்கள் நிலவுகின்றன. இந்தச் சட்டம் சில பாதுகாப்பு மேம்பாடுகளுக்கு வழிவகுத்திருக்கிறது.
ஆனால், ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள மிகக் குறைந்தபட்ச அளவினைத் தாண்டி, தமது பாதுகாப்பு ஏற்பாடுகளை முற்றிலும் மாற்றியமைக்க மெட்டா (Meta) போன்ற தொழில்நுட்பப் பெருநிறுவனங்கள் நிர்ப்பந்திக்கப்படவில்லை. உலகில் அதிக எண்ணிக்கையிலான ஃபேஸ்புக் பயனர்களைக் கொண்டிருக்கும் நாடு இந்தியா. ஆனால், மெட்டா தனது சமூக வலைதளங்களை இந்தியச் சூழலுக்கு உகந்ததாகத் தகவமைக்கவில்லை.
எடுத்துக்காட்டாக, மெட்டாவின் பாதுகாப்பு மேற்பார்வைக்கான அல்காரிதங்கள் பெரும்பாலும் அமெரிக்க ஆங்கிலத்தில் பயிற்சிபெற்றவையாக இருக்கின்றன. எனவே, இந்திய மொழிகளில் வெளிப்படும் ஆபாச/வசை உள்ளடக்கங்களை அவற்றால் கண்டறிய முடிவதில்லை. வரவிருக்கும் டிஜிட்டல் இந்தியச் சட்டத்தின் மூலம் தொழில்நுட்ப இணையதளங்களுக்கான ஒழுங்குமுறைகளை வலுப்படுத்தவும் சமூக ஊடக நிறுவனங்கள் பொறுப்பேற்பதைக் கட்டாயமாக்குவதற்குமான வாய்ப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது.
முக்கியமான இடையீட்டுப் புள்ளி: மாணவர்கள் மீதான இணையவழித் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான முக்கியமான இடையீட்டுப் புள்ளியாக உயர் கல்வி நிறுவனங்கள் செயல்பட முடியும். சட்டப்படி உயர் கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு உள்ளகப் புகார் குழுக்கள் (Internal Complaints Committee) அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இந்தக் குழுக்களை அமைத்து, உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளித்து, குழுவை நிர்வகிப்பதற்குக் கல்வி நிறுவனங்கள் திண்டாட வேண்டியுள்ளது. ஏதேனும் ஒரு மாணவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருப்பதை உள்ளகப் புகார் குழு கண்டறிந்துவிட்டால்கூட, குற்றமிழைத்தவர் மீது உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
எனது ஆய்வில் பங்கேற்ற மாணவர்களிடையே கல்வி நிலையங்களில் உள்ளகப் புகார் குழுக்கள் குறித்த விழிப்புணர்வும் அந்தக் குழுவை அவர்கள் பயன்படுத்தியதும் மிகக் குறைவாக இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. 44% மாணவர்களுக்கு, இணையவழிப் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டால் அதைத் தமது கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவிக்க வழி இருக்கிறது என்பது குறித்தே தெரியவில்லை; ஒருவர்கூட இந்தப் புகார் குழுவை நாடியிருக்கவில்லை.
கல்வி நிறுவனங்களில் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் புகார் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்கள் உள்ளிட்ட வசதிகள், பயிற்சிபெற்ற நிபுணர்களின் உளவியல் ஆலோசனை, பயிற்சி வகுப்புகள், விவாதங்கள் ஆகியவற்றுக்கான வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சமூகத் தாக்கம்: தொழில்நுட்ப உதவியுடன் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை, சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தீவிரப்படுத்தக்கூடும் என்பதால், அவை நமது உடனடி கவனத்தைக் கோருகின்றன. எனது ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 22% மட்டுமே இணையத்தில் பாதுகாப்பாக உணர்வதாகத் தெரிவித்தனர்; பாதுகாப்பாக உணரும் ஆண்கள் 73%. இணையத்தைப் பயன்படுத்துவது மனிதரின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறிவரும் நிலையில், இணையவழிப் பாலியல் வன்முறை அதைத் தடுக்கும் சுவராகத் திகழ்கிறது.
இது பெண்களை அதிகாரமற்றவர்களாக ஆக்கும் தந்தைவழிச் சமூக அமைப்பின் மறுஉருவாக்கமே. இணையவழியிலான வன்முறை அதிகமாகப் பரவுவது சமூகத்துக்கான பெண்களுடைய பங்களிப்பின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது. இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடிவது பெண்களின் சுயசார்பு, முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு அவசியமானதாகும்.
தொழில்நுட்ப உதவியுடன் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையைத் தடுக்க, அதனால் பாதிக்கப்பட்டவர்களுடைய தேவைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும். பாலினம் மட்டுமல்லாமல் சாதி, மதம், பாலியல் ஈர்ப்பு, வர்க்கம், பிராந்தியம் ஆகியவை சார்ந்தும் இணையவழியில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, இத்தகைய வன்முறை பிற விளிம்புநிலை அடையாளங்களில் எந்த அளவுக்குத் தாக்கம் செலுத்துகிறது என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
தொழில்நுட்ப உதவியுடன் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தாமல், அவர்களை அவமதிக்காமல், இந்த வன்முறை குறித்து வெளிப்படையாக அனைவரும் பேசத் தொடங்குவது ஓர் அத்தியாவசியமான நடவடிக்கை. தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை வைத்து பிறர் தங்களைக் களங்கப்படுத்துவதும், அவற்றை ஒன்றுமில்லாததுபோல் கடந்து செல்லச் சொல்வதுமே இந்தப் பிரச்சினை தொடர்வதில் குறிப்பிடத்தக்க பங்குவகிப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
நம் உலகம் டிஜிட்டல்மயமாகிக்கொண்டே போகும் சூழலில், தொழில்நுட்ப உதவியுடன் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு பரவலாக்கப்படுவதும் அதைக் களைவதற்கான தீர்வுகள் அமல்படுத்தப்படுவதும் மிகவும் அவசியம். தொழில்நுட்பத்தால் சாத்தியப்படுத்தப்படும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் டெக்சகியை (TechSakhi) நாடலாம். டெக்சகி உதவி தொலைபேசி எண்: 080 4568 5001; மின்னஞ்சல்: help@SocialMediaMatters.in; இணையதளம்: www.bloom.chayn.co
நன்றி: ‘தி இந்து’ (ஆங்கிலம்)
சுருக்கமாகத் தமிழில்: ச.கோபாலகிருஷ்ணன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago