வியூகம் 08: ‘சி-டெட்’ இன்னொரு வாய்ப்பு!

By செல்வ புவியரசன்

ரு கதவு மூடப்படும்போது, இன்னொரு கதவு திறக்கும். ஆனால், அப்படியொரு வாய்ப்பு இருக்கிறது என்பதை நம்மில் பலரும் அறிந்துவைத்திருப்பதில்லை.

தயாரிப்பின் அடிப்படை

ஆசிரியர் தேர்வு வாரியம் ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்தியது. பி.எட். பட்டம் பெற்றவர்களும் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பை முடித்தவர்களும் லட்சக்கணக்கில் அத்தேர்வுகளில் கலந்துகொண்டார்கள். அவர்களில் சில ஆயிரம் பேர்களே வேலைவாய்ப்பைப் பெற்றார்கள். மிகச் சில மதிப்பெண்களில் வேலைவாய்ப்பை இழந்தவர்களும் உண்டு. அவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த தேர்வு எப்போது வரும் என்று தெரியாத காரணத்தால் தேர்வுக்கான தயாரிப்புகளை ஒத்திவைத்துவிட்டார்கள். அடுத்த ஆண்டிலோ (?), அல்லது சில ஆண்டுகள் கழித்தோ மீண்டும் தகுதித் தேர்வு அறிவிக்கப்படும்போதுதான் அவர்கள் பாடநூல்களைப் புரட்டத் தொடங்குவார்கள். தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தேர்வுக்குப் படிக்க விரும்பினாலும் பணிச்சுமைகள் அதற்கு அனுமதிப்பதில்லை.

போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பின் அடிப்படை விதிகளில் ஒன்று, பாடத்திட்டத்தைத் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது. அதைப் போல, ஒரே பாடத்திட்டத்தில் அமைந்த வெவ்வேறு தேர்வுகளையும் எழுதிப் பார்ப்பது. தமிழ்நாட்டில் நடந்த டெட் தேர்வில் வாய்ப்பைத் தவறவிட்டவர்களுக்கு இன்னொரு பொன்னான வாய்ப்பும் உண்டு. அது, தேசிய அளவில் நடத்தப்படும் சி-டெட் தேர்வு. டெட் தேர்வுக்காகப் படித்த அதே பாடத்திட்டத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாகவும் விரிவாகவும் படித்தால் தேசிய அளவில் நடத்தப்படும் இந்தத் தேர்வில் வெற்றிபெறலாம். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைப் பின்பற்றும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிக்கூடங்களில் ஆசிரியராவதற்கு இந்தத் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். தேர்வில் வெற்றி பெறுவதற்கான மதிப்பெண்கள் அறிவிப்பிலேயே வெளியிடப்படுகின்றன. தேர்வில் 60 % மதிப்பெண் பெறுபவர்கள் ஆசிரியர் தகுதியைப் பெறுவார்கள். அடுத்துவரும் 7 ஆண்டுகளில், அவர்கள் இந்தத் தகுதியின் அடிப்படையில் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இரண்டு தேர்வுகள்

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆரம்ப நிலை (பிரைமரி ஸ்டேஜ்) என்ற தேர்வு நடத்தப்படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு அல்லது பட்டப் படிப்புக்குப் பிறகு இரண்டாண்டு கால ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்குத் தொடக்க நிலை (எலிமென்டரி ஸ்டேஜ்) என்ற தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப்படிப்போடு ஓராண்டு கால பி.எட். பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு விண்ணப்பிக்கத் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களில் சலுகைகளும் உண்டு.

என்னென்ன பாடங்கள்?

ஆரம்ப நிலைத் தேர்வு, தொடக்க நிலைத் தேர்வு இரண்டுமே பெரும்பாலும் ஒரே நாளிலேயே காலை, மாலை வேளைகளில் நடத்தப்படுகின்றன. இரண்டு தாள்களுமே அப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும். மொத்தம் 150 கேள்விகள்.

ஆரம்ப நிலைத் தேர்வில், குழந்தைகள் வளர்ச்சி மற்றும் கற்பிக்கும் முறைகள் (30 கேள்விகள்), மொழிப்பாடம் - 1 (30 கேள்விகள்), மொழிப்பாடம் - 2 (30 கேள்விகள்), கணக்கு (30 கேள்விகள்), சுற்றுச்சூழல் அறிவியல்(30 கேள்விகள்) என்பதாக அமைந்திருக்கும்.

தொடக்க நிலைத் தேர்வில் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் கற்பிக்கும் முறைகள் (30 கேள்விகள்), மொழிப்பாடம் - 1 (30 கேள்விகள்), மொழிப்பாடம் - 2 (30 கேள்விகள்), கணக்கு மற்றும் அறிவியல் (60 கேள்விகள்) அல்லது சமூக அறிவியல் (60 கேள்விகள்). 60 கேள்விகளுக்கான பகுதியில் கணக்கு மற்றும் அறிவியலையோ அல்லது சமூக அறிவியலையோ தேர்ந்தெடுக்கலாம். மொழிப்பாடங்களில் தமிழைத் தேர்வு செய்துகொள்ளலாம். மொழிப்பாடங்களுக்கான பதில்களைக் குறிக்கும்போது, விண்ணப்பத்தில் உள்ளவாறு மொழிப்பாடம் 1 மற்றும் 2 ஆகியவற்றைக் கவனமாகக் குறிக்க வேண்டும். பதில் எழுதுகிற வேகத்தில் மொழிப்பாட வரிசையை மாற்றிக் குறித்து மதிப்பெண் இழப்பவர்களும் உண்டு. எச்சரிக்கை.

நடத்துவது யார்?

இதுவரையில் சி.பி.எஸ்.இ. இந்தத் தேர்வை நடத்திவந்தது. தற்போது இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நேஷனல் டெஸ்ட்டிங் ஏஜென்ஸியிடம் அளிக்கப்பட்டுள்ளது. சி-டெட் தேர்வுகளைப் பற்றிய முழுமையான விவரங்களுக்கு www.ctet.nic.in என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும். பாடத்திட்டங்கள், முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் வினாத்தாள்களும் இத்தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்