சிவாஜியின் உயர ரகசியம் கேட்ட திலிப் குமார்!

By திரை பாரதி

நடிகர் திலகத்தின் நடிப்பாளுமை குறித்து எவ்வளவோ அறிந்திருப்போம். இது கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் மறைந்த மற்றொரு மகா கலைஞன் திலிப் குமார் வியந்து பின்வாங்கிய நிகழ்வு பற்றியது.

‘வியட்நாம் வீடு’ சுந்தரம் முதலில் நாடகமாக எழுதி மேடையேற்றிப் புகழ்பெற்று, பின்னர் அவரே திரைக்கதை எழுதி இயக்கி 1973இல் வெளியான படம் ‘கௌரவம்’. அந்தப் படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்தும் அட்வகேட் கண்ணனும் ஒரே வழக்கில் மோதுவதுதான் கதை. இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்றிருந்த நடிகர் திலகம் இரண்டும் வெவ்வேறு என்பதை தன்னுடைய நடிப்பாளுமை கொண்டு துல்லியமாக நிறுவியிருப்பார்.

இந்தப் படத்தின் இந்தி மறுஆக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு தமிழ் படத்தைப் பார்த்தார் திலீப்குமார். படம் பார்த்து முடித்ததும் தமிழில் ஒளிப்பதிவு செய்தவரே இந்தியிலும் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அந்த ஒளிப்பதிவாளர் விண்செண்ட் மாஸ்டர்.(மாஸ்டர் என்கிற அடைமொழியைத் திரையுலகம் அவருக்குக் கொடுத்தது பின்னால்தான்). திலிப் குமாரே ட்ரங்கால் போட்டு விண்செண்டிடம் பேசியவர், “உங்களை சந்திக்க விரும்புகிறேன்.. நீங்கள் மும்பை வந்தாலும் சரி.. அல்லது நான் சென்னை வரவேண்டும் என்றாலும் சரி.. வருகிறேன்.. அதுவும் என்னுடைய ஊர்தானே?” என்றார். திலிப் குமார் கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசனுக்கு நெருங்கிய நண்பர். ‘நானே சென்னைக்கு வருகிறேன்’ என்று திலிப் குமார் கூறியதைக் கேட்டுப் பதறிய விண்செண்ட் மாஸ்டர், திலிப் குமாரை மும்பைக்குப் போய் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பில், திலிப் மிகவும் ஆர்வமாக, “பாரிஸ்டர் சிவாஜி, இளவயது சிவாஜியை விட சற்று உயரமாக தெரிகிறார், இதை உங்களுடைய ஒளிப்பதிவில் எப்படி சாத்தியமாக்கினீர்கள்?” என்று கேட்டார். அதற்கு விண்செண்ட், “இதில் கேமரா டெக்னிக் எதுவும் இல்லை சாப்! வயதான கேரக்டருக்கான மேக்கப்பை போடும்போதே அந்த ரோலுக்குண்டான கம்பீரம், அரோகன்ஸ், பாடி லாங்குவேஜ் எல்லாமே அவரிடம் வந்துவிடும், மேக்கப் அறையிலேயே அவரது குரலின் தொனி மாறி தானாகவே நெஞ்சுப்பகுதி நிமிர்ந்து கொள்ளும். பேக்கப் சொல்லும்வரை அவரை அப்படித்தான் பார்க்க முடியும். அதனால் தான் அவர் உயரமாக தெரிகிறார்.

அதேபோல், கண்ணன் ரோலுக்கான மேக்கப்பை போட்டுக்கொள்ளும்போதே அந்த கேரக்டருக்குத் தேவையானபடி அந்த பணிவு, கூச்சம் எல்லாமே அவரிடம் ஒட்டிக்கொள்ளும். பிரேக்கில் கூட நம்மிடம் கண்ணன் மாதிரியே பேசிக்கொண்டிருப்பார். இது அவர் பின்பற்றிவரும் ஆக்டிங் டெக்னிக்” என்று அலட்டிக்கொள்ளாமல் கூற..

அதைக் கேட்டு பிரமித்துப் போனார் திலீப் குமார். அடுத்த ஒரு நிமிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தவர், “மிஸ்டர் விண்செண்ட்.. அந்த உயர வித்தியாசத்துக்கு நிச்சயமாக நீங்கள் கேமரா டெக்னிக்கைத்தான் பயன்படுத்தியிருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன். நடிப்பிலேயே அந்த வித்தியாசத்தை கொண்டவர சிவாஜி ஒருவரால்தான் முடியும். இந்த ரீமேக் குறித்து ஒருமுறை நான் யோசிக்க வேண்டும்” என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டார். விண்செண்ட் எதிர்பார்த்தது போலவே.. திலிப் குமார் ‘கௌரவம்,’ படத்தின் ரீமேக்கை கைவிட்டுவிட்டார். விண்செண்ட் மாஸ்டர் பழம்பெரும் சினிமா இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தச் சுவாரஸ்யமான தகவல் சாட்சியாக இருக்கிறது. இன்று நடிகர் திலகத்தின் நினைவு நாள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE