வர்த்தகத்தில் கோடிகள் அள்ளும் மருத்துவ மாணவர்!

By மிது கார்த்தி

மருத்துவம் படித்த ஓர் இளைஞரின் கனவு என்னவாக இருக்கும்? அத்துறையில் அடுத்தடுத்த நிலைகளில் கோலோச்ச வேண்டும் என்பதாகத்தானே இருக்கும்? ஆனால், திண்டுக்கல்லைச் சேர்ந்த 22 வயதான குணா சண்முகா வேறு ரகம். மருத்துவத்தைப் படித்து முடித்துவிட்டு, நாணயச் சந்தை (Forex), இந்தியாவில் பங்கு வர்த்தகம் உள்பட பல வெளிநாடுகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டு, இன்று ‘எலைட் டிரேடர்ஸ்’ உள்பட நிதி சார்ந்து 4 நிறுவனங்களைத் தலைமையேற்று நடத்திவருகிறார். குறைந்த வயதிலேயே கோடிகளை அள்ளிக் குவித்தவராகவும் மாறியிருக்கிறார் குணா சண்முகா.

லட்சியமான வணிகம்: பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு 2018இல் மருத்துவம் படிப்பதற்காக குணா ரஷ்யாவுக்குச் சென்றார். அரசு ஊழியரான அம்மாவும் வர்த்தகரான அப்பாவும் விரும்பியதால் மருத்துவம் படிக்கச் சென்றவர், அங்குத் தன்னுடைய நண்பர்கள் சிலர் நாணயச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவதைக் கண்டு, அதில் என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அவரும் குதித்தார். அது பிடித்துப் போகவே, அதன் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு அதைச் செய்யத் தொடங்கிவிட்டார். லட்சங்களில் தொடங்கி மிகப் பெரிய அளவில் வருவாய் ஈட்டத் தொடங்கினார்.

“மருத்துவம் இரண்டாமாண்டு படிக்கும்போதுதான் இதில் இறங்கினேன். விளையாட்டாகத் தொடங்கிய பிறகு நாணயச் சந்தை தொடர்பாக நிறைய பேரிடம் பேசத் தொடங்கினேன். மருத்துவம் படித்துக்கொண்டே வர்த்தகம் தொடர்பான வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன்.

லண்டன், மியாமி, கிரீஸ், கனடா என வெளிநாடுகளுக்கும் சென்று அதைக் கற்று வர்த்தகம் செய்யத் தொடங்கினேன். முதன் முதலில் நான் ரூ.7.38 லட்சம் (9 ஆயிரம் டாலர்) முதலீடு செய்து இத்தொழிலைச் செய்தேன். அப்படித் தொடங்கி இன்று பெரிய நிலைக்கு வந்திருக்கிறேன்” என்று பெருமையாகக் கூறுகிறார் குணா.

இலவச வகுப்பு: நிதி சார்ந்த விஷயங்களில் மூழ்கிக் கிடக்கும் குணாவிடம் மருத்துவம் படித்தது அவ்வளவுதானா என்று கேட்டதும் சிரிக்கிறார். “சமூக அந்தஸ்துக்காகவும், நிலையான வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காகவும் மருத்துவம் படித்தேன். அதை இந்த வர்த்தகம் கொடுக்கும் நிலையில், அதில் இறங்கிவிட்டேன். அம்மா, அப்பா ஆசைக்காக மருத்துவத்தையும் விடவில்லை. மருத்துவர் பணிக்குச் சில உள்கட்டமைப்பு வசதிகள் தேவை.

ஆனால், இந்தத் தொழிலுக்கு ஒரு மொபைல் போன், இணைய இணைப்பு இருந்தால் போதும். இரண்டாவது, நான் நினைக்கும்போது வர்த்தகம் செய்வேன். யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. இப்போது கம்ப்யூட்டர் புரோகிராம் (Algo Trading) மூலமே டிரேடிங் செய்து லாபம் எடுக்கிறேன். அதனால், தற்போது நிதி சார்ந்த மற்ற பணிகளில் என்னுடைய கவனத்தைத் திருப்பியுள்ளேன்” என்கிறார் குணா.

நாணயச் சந்தை, கமாடிட்டி, பங்கு வர்த்தகம் பற்றி காசு வாங்கிப் பலரும் வகுப்பு எடுக்கிறார்கள். குணாவும் தொடக்கத்தில் இலவசமாகஇத்தொழில்கள் பற்றி வகுப்பெடுத் திருக்கிறார். இப்போது அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இந்த வர்த்தகம் பற்றி இலவசமாக வகுப்பெடுத்து, அதில் அவர்களை ஈடுபடுத்தும் திட்டத்திலும் இருக்கிறார். “நாணயச் சந்தை, பங்குச் சந்தை போன்றவற்றை வசதிப் படைத்தவர்கள்தான் செய்ய வேண்டும் என்பதில்லை.

ஒருவரால் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்ய முடியும் என்றாலே போதுமானது. என்னுடைய யூடியூப் பக்கத்தில் டிரேடிங் பற்றி இலவசமாகப் பல காணொளிகளைப் பதிவிட்டுள்ளேன். ஆனால், இலவசத்துக்கு மதிப்பில்லை என்பதையும் உணர முடிந்தது. எனவே, தற்போது சிறிய அளவில் பணம் பெற்று வகுப்பெடுக்கிறேன். மற்றப்படி அரசுப் பள்ளி, கல்லூரியில் படிப்போருக்கு இதை இலவசமாகக் கற்றுத் தரும் நோக்கில், அதற்கான திட்டத்தில் இறங்கியிருக்கிறேன்” என்கிறார் குணா.

அழிவே கிடையாது: கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏராளமானோர் சில்லறை முதலீட்டாளர்களாகப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடத் தொடங்கினர். இருந்தாலும் பங்கு, நாணய வர்த்தகங்கள் போன்றவை சூதாட்டம் போன்றது என்ற கருத்தும் இருக்கவே செய்கிறது. இந்தச் சூழலில் புதிதாக இதுபோன்ற வர்த்தகத்தில் ஈடுபடுவோர் சாதிக்க முடியுமா? “வேலை கிடைக்கும் என்று நினைத்துதான் படிக்கிறோம்.

ஆனால், நினைத்தப்படி வேலை கிடைத்துவிடுகிறதா? இத்தொழிலில் ஈடுபடும் பலரும் ஒருசிலரைப் பின்பற்றுவார்கள். அப்படிப் பின்பற்றினால், கடைசி வரை அதையே பின்தொடர வேண்டும். இன்னும் சிலர் ஒவ்வொருவர் சொல்லும் அறிவுரைகளையும் செயல்படுத்தி பணத்தை இழந்துவிடுவார்கள். இதில் உங்களுக்கென ஒரு முறையை வகுத்துக்கொண்டு அதன்படி செயல்பட வேண்டும். பலரும் சரியான வழிகாட்டல் இல்லாமல்தான் தோற்கிறார்கள். பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு ‘டெமோ டிரேடிங்’ செய்துவிட்டும் இதில் ஈடுபடலாம்.

இதில் வெற்றியடைய ஆர்வம் மட்டுமல்ல, அதிலுள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். பல தொழில்களில் புதிய நுட்பங்களின் வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு வருகை எனச் சவால்கள் அதிகம் உருவாகி வருகின்றன. ஆனால், இந்த வர்த்தகத்தில் இந்தப் பிரச்சினை இல்லை. இதற்கு அழிவே கிடையாது எனலாம். கரன்சி, காயினுக்கு அழிவு வராத வரைக்கும் இத்தொழிலுக்கும் வராது” என்கிறார் குணா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE