தொழில் தொடங்கலாம் வாங்க 41: சிந்தனையைவிட செயல் முக்கியம்!

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

“ஒ

ரு தொழில் அதிபர் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்று நிறைய சொல்கிறீர்கள். இத்தனை அறிவு இருந்தும் பலர் ஜெயிக்காதது ஏன்?” என்று கேள்வியோடு என்னிடம் பேசத் தொடங்கினார் வாசகர் ஒருவர். அவர் தன்னைப் பற்றி நிறைய சொன்னார். தொழில் பற்றி நிறைய தெரிந்தவர். படித்தவர். ஏராளமான புதிய தொழில் எண்ணங்கள் வைத்திருக்கிறார். ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒரு புது ஐடியா இருந்தது என்று சொல்லலாம். “இருந்தும் ஏன் நான் சோபிக்கவில்லை?” என்று கேட்டார். பதில் சொல்லாமல் பொறுமையாகத் தொடர்ந்து காதுகொடுத்து அவர் பேசுவதை மட்டும் கேட்டேன். ஒரு சில தொழில் முயற்சிகளுக்குப் பிறகு சொந்த வியாபாரமே வேண்டாம் என்று ஒரு சாதாரண வேலையில் கிட்டத்தட்ட செட்டிலாகிவிட்டார். அவர் கேட்ட கேள்வி அவர் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதனால் மென்மையாகப் பதில் சொல்ல ஆரம்பித்தேன்.

பகல் கனவு பலிக்குமா?

“உங்களின் பெரிய பலம் எது?” என்று கேட்டேன். “நிறைய தொழில் ஐடியாக்கள் உண்டு” என்றார்.

“அதுதான் உங்கள் பலவீனம்.” என்றேன். “நிறைய யோசிக்கிறீர்கள். ஆனால், தொழிலில் வெற்றி பெறச் சிந்தனையை விடச் செயல் வேண்டும்.”

“அப்ப புதுசா யோசனை பண்ணக்கூடாதா?”

“பண்ணனும். அந்த ஐடியா இது தான்னு முடிவு பண்ணிட்டா, அதுக்கப்புறம் அதை ஜெயிக்க வெக்கற வேலைகளைத்தான் செய்யணும். அடுத்த புது ஐடியாவை நோக்கி மனசை அலைய விடக் கூடாது.” இதைச் சொன்னவுடன் அவரிடம் பதில் இல்லை.

தொடர்ந்து சொன்னேன்: “ஒரு புது எண்ணத்தைக் கற்பனை பண்ணிப் பார்க்கறது சுகம். ஆனால், அதை நடைமுறைபடுத்தறது பெரிய வலி. அந்த வலியும் உங்களுக்குச் சுகமா தெரிஞ்சாதான் நீங்கள் தொழில் செய்யத் தகுதியானவர். வெறும் யோசனைகளை மட்டும் செய்வது பகல் கனவு காணற மாதிரிதான்.”

தள்ளிப்போடுவது ஆபத்து

“உண்மை தான்!” என்று மெலிதாக ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு முறையும் சில சிரமங்கள் கண்டவுடனேயே அடுத்த தொழில் பற்றி யோசிக்கும் தன் மனோநிலையை விளக்கினார்.

எனக்குப் பிரியமான சினிமாவையே உதாரணமாகச் சொன்னேன்: “ஒரு கதையை முடிவு பண்ண எவ்வளவு வேண்டுமானாலும் யோசிக்கலாம். ஆனால், அந்தக் கதையை ஒரு கட்டத்தில் உறுதிசெய்து திரைக்கதை எழுதிவிட்டால் பிறகு அந்தத் திரைக்கதையைப் படமாக்குவது மட்டும்தானே முக்கியப் பணி. பாதி வேலையில் அடுத்த கதை தோன்றலாம். ஆனால், இதை வெற்றிகரமாக முடித்துவிட்டுத்தானே அடுத்த எண்ணத்தைச் செயல்படுத்த வேண்டும்?”

“எவ்வளவு அறிவு இருந்தும் பிரயோஜனம் இல்லை. நினைத்ததை முடிக்கும் துணிவு வேண்டும் சார். அதுதான் தொழில் செய்யத் தேவை. இப்போ புரியுது!” என்று கனத்த இதயத்துடன் எழுந்து சென்றார்.

90 சதவீதம் தொழில் திட்டங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் அழியக் காரணம் இதுதான் என்று தோன்றுகிறது. உறுதி மாறாமல் செயல்படுத்தும் தன்மைதான் தொழில் முனைவோர் வெற்றியை நிர்ணயிக்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் இது மட்டும் போதாது. நினைத்ததை உடனே வெற்றிகரமாகச் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகிறது. உடனே என்பது முக்கியம்.

பிறகு செய்யலாம் என்று நீங்கள் நினைக்கும் வியாபார எண்ணத்தை உங்களுக்கு முன் ஒருவர் முந்திக்கொண்டு செய்யலாம். இன்றைய காலகட்டத்தின் முக்கியத் தேவை அதிவேகம். ஒரு எண்ணத்தைச் செயலாக்காமல் தள்ளிப்போடுவது போன்ற ஆபத்து எதுவுமில்லை.

வேகம் என்பது அவசரம் அல்ல

உங்கள் உழைப்பு நேரத்தையும் செல்வத்தையும் கேட்கும். அதனால் அதை விரைவாகவும் செம்மையாகவும் செய்வது உத்தமம். தாமதம் வியாபாரத்தை நஷ்டப்படுத்தும். தாமதத்துக்குப் பல காரணங்கள் இருக்கலாம். எதையும் நேரம் எடுத்து மிகச் சரியாகத்தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம். இன்னமும் யோசித்து ஆரம்பிக்கலாம் என்று நினைக்கலாம். பிறரின் ஆலோசனைகளுக்காகக் காத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதிகம் தாமதிக்காதீர்கள். “காலம் விலை மதிப்பற்றது” என்பது தொழிலில் ஒரு அற்புதமான முது மொழி.

நீங்களே நினைத்துப் பாருங்கள். எத்தனை முறை இப்படிக் கேட்டிருக்கிறோம்: “நாம பண்ணலாம்னு பேசிட்டே இருந்தோம். அவங்க முந்திகிட்டாங்க!”, “பணம் கிடைக்கறது கஷ்டம்னு யோசிச்சு யோசிச்சே கடைசியில எதையும் பண்ணாம இருக்கிற தொழிலையும் நஷ்டம் பண்ணிட்டோம்”, “நிறைய மாத்தணும்னு தெரியும். சரியான நேரத்துல பண்ணலாம்னு காத்திட்டிருந்தோம். அதுக்குள்ள எல்லாம் கையை மீறிப் போயிடுச்சு!”

ஒரு காலத்தில் ஒளிப்படம் என்றால் கோடாக் என்று இருந்தது. அந்த கம்பெனியின் வீழ்ச்சியின்போது அதன் எம்.டி.யை பேட்டி எடுத்தவர் கேட்டார். “மாறி வரும் தொழில்நுட்பம் உங்கள் கம்பெனியை இல்லாமல் ஆக்கிவிடும் என்று எப்போதாவது உணர்ந்தீர்களா?”

“ஆம்.”

“எப்போது?”

“வீழ்ச்சிக்கு 10 வருடங்கள் முன்னரே!”

பத்து ஆண்டுகளாக என்ன செய்தார்கள் என்று கேட்கிறீர்களா? “வரும். அவ்வளவு சீக்கிரம் வராது!” என்று நம்பிக் கொண்டிருந்தார்கள்.

நேரம் கடத்தாமல் முடிவுகள் எடுப்பதும், செயல்திறனிலேயே கண்ணாய் இருப்பதும்தான் உங்கள் தொழிலைக் காப்பாற்றும்.

வேகம் என்பது அவசரப்படுவது அல்ல. செய்வதற்கான தருணம் வந்துவிட்டது என்று உணர்ந்து சிறப்பாகச் செயல்படுவது.

நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்யப்பாருங்கள். நாளை என்பது நிச்சயமில்லாதது!

தொடர்புக்கு:

gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்