அஞ்சலி: காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ஜெயராம் | சிற்றுயிர்களைத் தேடிச் சென்றவர்

By நிஷா

கே.ஜெயராம், இந்தியாவின் மூத்த ஒளிப்படக் கலைஞர். சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் பல விருதுகளைப் பெற்றவர். சிற்றுயிர்களை ஒளிப்படம் எடுக்கும் கலையில் (Macrophotography) இந்தியாவுக்கு அவரே முன்னோடி எனலாம்.

கடந்த மார்ச்சில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காகச் சிகிச்சையும் பெற்று வந்தார். புற்றுநோயின் பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வந்துகொண்டிருந்த சூழலில், கடந்த வாரம் அவருக்கு நுரையீரலில் ஒரு தொற்று ஏற்பட்டது.

மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்ட அவருக்குத் திடீரென்று உடல்நலம் மோசமடைந்தது. கோயம்புத்தூரில் கடந்த ஞாயிறு அன்று காலமானார் (74). இயற்கைக்கும் ஒளிப்படக்கலைக்கும் தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கும் நோக்கில் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்தவர் அவர்.

கே. ஜெயராம்

ஒளிப்படப் பயணம்: ஜெயராமின் ஒளிப்படப் பயணம் 1962ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அப்போது அவருக்கு வயது 14 மட்டுமே. தனது முதல் கேமராவையும் அப்போது வாங்கியிருந்தார். ஆரம்பக் காலத்தில் திருவிழாக்களையும் கோயில்களையும் ஒளிப்படம் எடுத்தார். விரைவில் அவரது ஆர்வம் இயற்கையின் மீது திரும்பிவிட்டது. 1963இல் ஒளிப்படம் எடுக்கும் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றார்.

இயற்கை, அறிவியல், ஒளிப்படம் எடுத்தல் தொடர்பான அரிய புத்தகங்களைத் தேடிச் சென்று வாசித்தார். அந்த வாசிப்பு இயற்கையின் மீதான அவரது காதலைப் பன்மடங்கு அதிகரித்தது; ஒளிப்படம் எடுக்கும் திறனையும் பெருக்கியது; புதிய நுட்பங்களையும் அவருக்குக் கற்றுக்கொடுத்தது. ஒளிப்படச் சுருள்களை ஒளிப்படமாக மாற்றும் செயல்முறையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் அளவுக்கு அவர் தேர்ச்சியும் பெற்றார்.

விருதுகள்: புலி, யானை போன்ற உயிரினங்களைப் படமெடுப்பதே பெருமையாகக் கருதப்பட்ட அன்றைய காலகட்டத்தில், சிற்றுயிர்களை, குறிப்பாகப் பூச்சிகளைத் தேடித் தேடி படமெடுத்தார். அன்றைய காலகட்டத்தின் தொழில்நுட்பப் போதாமைகளால், அது அவருக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. அதற்காக, 1969இல் ஓர் ஒளியியல் நிபுணரின் உதவியுடன் டையாப்டர் (diopter) லென்ஸ் ஒன்றை சுயமாக உருவாக்கினார். அதை அவர் தனது கேமராவில் பொருத்தி சிற்றுயிர்களையும் பூச்சிகளையும் ஒளிப்படமாக எடுத்துக் குவித்தார்.

அவர் எடுத்த ஒளிப்படங்கள் 1970இல் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச ஒளிப்படப் போட்டிக்குத் தேர்வாகின. அதில் அவருக்குத் தங்கப் பதக்கமும் வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன. அதன் பின்னர் அவருக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. 1983இல் ஐரோப்பாவின் சர்வதேச ஒளிப்படக் கலை கூட்டமைப்பின் (EFIAP) சிறப்பு விருதைப் பெற்றார். அந்தக் கூட்டமைப்பு 1986இல் அவருக்கு மாஸ்டர் ஹானர் அங்கீகாரத்தையும் அளித்து பெருமைப் படுத்தியது.

பங்களிப்பு: சிற்றுயிர்களையும் பூச்சிகளையும் ஆய்வுசெய் பவர்களுக்கு ஜெயராமின் ஒளிப்படங்கள் பெரிதும் பயனளிப்பவை. அறிவியல் ஆய்வில் ஈடுபட்ட பலர், இவரது உதவியை நாடியது வரலாறு. கோயம்புத்தூர் வேளாண் கல்லூரியில் நிறுவப்பட்டிருக்கும் பூச்சிகள் அருங்காட்சியகத்தை அமைப்பதற்கும் ஜெயராம் உதவியுள்ளார்.

ஒளிப்படம் எடுப்பதில் மட்டுமல்லாமல்; வகைப்பாட்டியலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்தார். வகைப்பாட்டியலுக்கு அவர் அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. நாட்டின் மூத்த வகைப்பாட்டியலாளர்களில் (Taxonomist) ஒருவராக அவர் கருதப்படுகிறார்.

வகைப்பாட்டியலுக்கு ஜெயராம் அளித்திருக்கும்பங்களிப்பைப் போற்றும் விதமாக, இரண்டுஉயிரினங்களுக்கு அவரது பெயர் சூட்டப் பட்டிருக்கிறது. ஆனைமலைக் காட்டில் உள்ள ஒரு தவளை Raorchestes jayarami என்றும் ஒரு சிலந்தி Myrmarachne jayaramani என்றும் பெயரிடப்பட்டுள்ளன.

இவரது ஒளிப்படங்களும் கட்டுரைகளும் நேஷனல் ஜியாகிராஃபிக் உள்ளிட்ட சர்வதேச இதழ்களில் வெளிவந்துள்ளன. தென்னிந்திய வண்ணத்துப்பூச்சிகள் குறித்தும், அமைதிப் பள்ளத்தாக்கு குறித்தும் அவர் புத்தகங்களை எழுதியுள்ளார். இன்று அவர் நம்மிடையே உயிரோடு இல்லை. இருப்பினும் அவரது ஒளிப்படங்கள், கட்டுரைகள், நூல்கள், அவரது பெயரிலிருக்கும் உயிரினங்கள் மூலமாக அவர் இவ்வுலகில் நிலைத்து நிற்கிறார்.

ஜூலை மரத் திருவிழா: இந்தப் பருவமழை காலத்தில் மரங்களின் செழிப்பைக் கொண்டாடும் நோக்கில் சீசன் வாட்ச் நடத்தும் மர விழா ஜூலை 7 முதல் 16 வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பவர்களுக்குப் பரிசு உண்டு.

விழா போட்டிகள்: 100-நாட்-அவுட்: திருவிழாவின் 10 நாள்களில் 100 மரங்களைக் கவனித்துப் பதிவிட வேண்டும்.

மென்மையும் மேன்மையும்: இறகைப் போல மென்மையான இலைகளைக் கொண்ட கருவேலம், வாகை, விடத்தேறு, பாட்மின்டன் பந்து மரம் போன்ற மரங்களைக் கண்காணித்துப் பதிவிட வேண்டும்.

பனை வகைகள்: பனை குடும்பத்தைச் சேர்ந்த பனை மரம், கூந்தல்பனை, தென்னை, ஈச்ச மரம் ஆகியவற்றைக் கண்காணித்துப் பதிவிட வேண்டும்.

எப்படிப் பங்கேற்பது? - உங்களைச் சுற்றியுள்ள மரங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து, பதிவிடுவதன் மூலம் இந்த விழாவின் போட்டிகளில் நீங்களும் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: https://shorturl.at/gJLUW

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்