ஓடிடி உலகம்: காதலின் கள யதார்த்தம்!

By ரசிகா

ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியன் உருவாக்கத்தில் வெளியாகி, பல சர்வதேச விருதுகளைக் குவித்த படம் ‘டூலெட்'. அப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுக மானவர் சந்தோஷ் நம்பிராஜன். ஓர் ஒளிப்படக் கலைஞராகத் தனது சினிமா பயணத்தை தொடங்கி நடிகரான அவர், தற்போது ‘காதலிசம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் முகம் காட்டியிருக்கிறார்.

அவர் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்துள்ள இப்படம், எம்.எக்ஸ். பிளேயர், ஹங்கமா, வீ (vi movies), ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்,கேலக்ஸி ஓடிடி (Galaxy OTT), டேக்நெட் வெப் (Tagnet web) உள்ளிட்ட ஆறு ஓடிடி தளங்களில் தற்போது காணக் கிடைக்கிறது. உலகின் எந்த மூலைக்குப் புலம்பெயர்ந்து சென்று தமிழர்கள் வசித்தாலும் அங்குள்ள கலாச்சாரத்துக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக்கொண்டாலும் வேர்களை மறப்பதில்லை.

இந்தப் படத்தில் சிங்கப்பூரில் வாழும் ஓர் இளம் ஜோடியின் வாழ்க்கையை ரசனையும் வலியும் கலந்து வடித்திருக்கிறார் இயக்குநர். தற்காலத் தலைமுறையின் உறவு நிலைகளில் ஏற்படும் சிக்கல் ஒன்றினை எளிமையான திரைமொழியில் பேசியிருக்கிறார்.

முகுந்த் (சந்தோஷ் நம்பிராஜன்) சிறந்த ஒளிப்படக் கலைஞராக வேண்டும் என்கிற லட்சியத்துக்காக இயங்கிக்கொண்டிருக்கிறார். அவரும் அவரது திறமையால் கவரப்படும் ஸ்மிதாவும் (ஹர்மீத் கௌர்) நண்பர்கள் ஆகி, பின்னர் காதலில் விழுகிறார்கள். முகுந்த் திருமணம் என்கிற கட்டமைப்பை அடியோடு மறுக்கும் சுதந்திர உணர்வு கொண்டவன். நவீனப் பெண்ணாக இருந்தாலும் திருமணம் பாதுகாப்பானது என்பதை ஸ்மிதா தன் பெற்றோரின் வாழ்க்கை வழியே உணர்ந்துகொண்டவள்.

ஆனால், ‘ஒரு கலைஞனின் வருமானம்’ குறித்த கேள்வியில் திருமணத்துக்கான கதவு அடைபடுகிறது. வேறு வழியின்றி ஸ்மிதாவும் முகுந்தும் திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்தல் என்கிற முடிவுடன் வாழ்க் கையைத் தொடங்குகிறார்கள்.

பற்றுக்கோடு இருப்பதுபோலவும் இல்லாததுபோலவும் இருக்கும் அந்தப் புதிய வாழ்க்கை மகிழ்ச்சியின் விளை நிலமாக இருந்தாலும், அறுவடை, குழந்தையின் வடிவில் வந்து நிற்கிறது. இன்றைய தலைமுறையினர் குழந்தையைப் பெற்றுக்கொள்ளவும் அதை வளர்த்தெடுக்கவும் தயாராக இருக்கிறார்களா என்பதைக் கள யதார்த்தத்துடன் முன்வைக்கிறது இப்படம்.

குறைந்தபட்சப் பொறுப்புகள் இன்றி இணைத்து வாழ்தலில் ஏற்படும் சவால்கள், கட்டற்ற சுதந்திர உணர்வின் எல்லை எதுவரை என்பன வற்றை ரசனையும் சுய விசாரணைத் தன்மையும் கொண்ட காட்சிகள் வழியாக படம் சித்தரிக்கிறது. உலகமய வாழ்க்கை, ஆண்-பெண் உறவு நிலைகளின் எதிர்பார்ப்புகளைத் தேங்காய் உடைப்பது போல் வச னங்களால் உடைத்துச் சிதறடித்தி ருக்கிறார் இயக்குநர்.

பெண்களின் வலியை ஆண்களின் பார்வையில் பிரதிபலிப் பதும் கவனிக்க வைக்கிறது. முகுந்த் - ஸ்மிதா இடையிலான அறிமுகம், சீரான நட்பு, அது காதலாகக் கனியும் தருணம் ஆகியவை ரசனையாகப் படமாக்கப் பட்டிருக்கின்றன.

சிங்கப்பூர் வாழ் தமிழர் என்றில்லாமல் எல்லா நிலப்பரப்புக்கும் பொருந்தக்கூடிய சமகாலத்தின் பொதுமை மிகுந்த கதையை, பிரேம்குமார் கையில் கேமரா தாங்கி (handheld) படம் பிடித்திருப்பது கதாபாத்திரங்களை நமக்கு நெருக்க மாக்குகிறது. எம்.எஸ்.காமேஷின் பாடல்கள் படத்துக்கு இளமைத் துள்ளலைத் தந்திருக்கின்றன. ஆனால், உரையாடல்களின் மேல் ஒலிக்கும் பின்னணி இசையை அவர் தவிர்த்திருக்கலாம்.

சந்தோஷ் நம்பிராஜன் - ஹர்மீத் கௌர் இருவரும் பொருத்தமான இணையாகவும் கதையின் சிக்கலுக்குப் பின் பொருந்தாத இணையாகவும் நம்மை உணர வைக்கி றார்கள். நாயகியின் தந்தையாக வருபவர் இயல்பான பாவனைகளுடன் நேர்த்தியாக நடித்திருக்கிறார். குறைவான பொருள் செலவில் உருவான ‘காதலிசம்’ நிறைவான உரையாடலை நிகழ்த்தி விடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE