கோலிவுட் ஜங்ஷன்: 10 வருட இடைவெளி!

By செய்திப்பிரிவு

சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் இயக்குநரின் படைப்புக்காக ரசிகர்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டு மானாலும் காத்திருப்பார்கள். கடந்த 2013இல் ‘விடியும் முன்’ என்கிற புதிய தலைமுறைத் த்ரில்லர் திரைப்படம் கொடுத்த பாலாஜி குமார், 10 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம் ‘கொலை’.

அதன் ட்ரைலர் கடந்த ஆண்டே வெளியாகி ரசிகர்களை எதிர்பார்க்க வைத்தது. வரும் 21ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படம், பூட்டப்பட்ட வீட்டுக்குள் கொலையாகிக் கிடக்கும் ஒரு கதாநாயகியின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைத் துப்புத் துலக்கும் கதை. கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார் பாலாஜி குமார்.

கொலையைத் துப்பறியும் முன்னாள் காவல் அதிகாரியாக, முதல் முறை ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அவருக்கு உதவும் காவல் அதிகாரியாக ரித்திகா சிங் வருகிறார். இவர்களுடன் ராதிகா சரத் குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை இன்பினிட்டி - லோட்டஸ் புரொடக் ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.

யோகி பாபுவின் உருமாற்றம்! - யோகி பாபுவைப் படம் முழுவதும் வரும் கதாபாத்திரங்களில் நடிக்கவைத்தால், ‘மினிமம் கியாரண்டி’ வசூலுக்கு உத்தரவாதம் என்று நம்பிப் பல படங்களில் அவர் மீது சுமையை ஏற்றி வைக்கிறார்கள். அவரும் அவற்றை ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று ஊதித் தள்ளிவிடுகிறார். தற்போது ‘பாட்னர்’ படத்தில் அவர்தான் கதையின் மையம். கதாநாயகன் ஆதியின் அறை நண்பராக இருக்கும் யோகிபாபு, விஞ்ஞானி பாண்டியராஜனின் ஆராய்ச்சிக் கூடத்தில் எதிர்பாராவிதமாக ஓர் ஊசியைப் போட்டுக்கொள்கிறார்.

மறுநாள் தூங்கி எழும்போது ஒரு அழகான பெண்ணாக உருமாறிவிடுகிறார். அதாவது ஹன்சிகா மோத்வானியாக மாறிவிடுகிறார். இதனால் அவருக்கு ஏற்படும் தவிப்புகளையும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் இதனால் படும் பாடுகளையும் முழு நீள நகைச்சுவைக் களத்தில் சொல்லியிருக்கிறாராம் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் மனோஜ் தாமோதரன். ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்திருக்கும் இப்படத்தில், ஹன்சிகா முதல் முறையாக நகைச்சுவைக் கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE