கோலிவுட் ஜங்ஷன்: யூடியூபர்களின் திரைப்படம்!

By செய்திப்பிரிவு

சின்னத்திரையில் கிடைத்த புகழுடன் வெள்ளித்திரையில் நுழைந்து வெற்றிபெறுவது பழைய ட்ரெண்ட்! யூடியூபில் கிடைத்த புகழை சினிமாவில் பயன்படுத்தி வெற்றிபெறுவதுதான் தற்போதைய போக்கு. பிரபல யூடியூபர் ராஜ்மோகன் ‘பாபா பிளாக் ஷீப்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும் 10 இளம் யூடியூபர்களை இந்தப் படத்தின் மூலம் நடிகர்களாகவும் அறிமுகப்படுத்துகிறார். ‘விருமாண்டி’ புகழ் அபிராமி முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ள படம் இது.

சமீபத்தில் இப்படத்தின் இசை, ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அதில் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ் நடிகர் வாணி போஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினார்கள். விழாவில் பேசியபோது “பள்ளி நாள்களில் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளும் மாணவர்களின் ‘கமிங் ஆஃப் ஏஜ்’ திரைப்படமாக ‘பாபா பிளாக் ஷீப்’ உருவாகியிருக்கிறது” என்றார் இயக்குநர் ராஜ்மோகன்.

பெண் மையக் கதையில் தான்யா: ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் தொடங்கி இயக்குநர் மிஷ்கினுடைய அசோசியேட்டாகப் பணிபுரிந்து வருபவர் ஜேபி. அவர், தான்யா ரவிச்சந்திரன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘BP180’ என்கிற பெண் மையத் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில், மருத்துவக் குற்றம் ஒன்றைத் தடுக்கப் போராடும் இளம் மருத்துவராக தான்யா நடிக்கிறார். அவருக்கு எதிராகக் காய்களை நகர்த்தும் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி நடிக்கிறார்.

இவர்களுடன் கே. பாக்யராஜ், ‘ஜெய்பீம்’ புகழ் தமிழ், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அதுல் இண்டியா மூவீஸ் சார்பில் அதுல் எம். போஸ்மியா குஜராத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்து இப்படத்தைத் தயாரிக்கிறார். 40 கதைகளைக் கேட்டு, இந்தக் கதை பிடித்ததால் படத்தைத் தயாரிப்பதாக அதுல் கூறியிருக்கிறார்.

ஹாரிசன் ஃபோர்டின் கடைசி சாகசம்! - ரஜினி இத்தனை வயதில் கதாநாயகனாக நடிக்க வேண்டுமா என்று கேட்பவர்கள் உண்டு! ஹாலிவுட்டின் முதுபெரும் ஆக் ஷன் நாயக நடிகர் ஹாரிசன் ஃபோர்டு, 80 வயதில் நடித்த தனது கடைசி சாகசத் திரைப்படத்துடன் வந்திருக்கிறார்.

‘பிளேட் ரன்னர்’. ‘என்டர்ஸ் கேம்’ என அதிரடி ஆக்ஷன் படங்கள் வழியாகப் புகழ்பெற்றிருந்தவரை, 1981இல் வெளியான ‘இண்டியானா ஜோன்ஸ்’ வரிசையின் முதல் படமான ‘ரைடர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க்’கில் நடிக்க வைத்து, ‘ஜேம்ஸ் பாண்ட்’ வரிசைப் படங்களுக்கு சவால் விடுத்தார் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்.

அதன் பின்னர், ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களையே திகைக்க வைக்கும் சாகசங்களை லாஜிக்குடன் செய்யும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர், பேராசிரியர் இண்டியானா ஜோன்சாக 3 படங்களில் அடுத்தடுத்து தோன்றிய ஹாரிசன் போர்ட் உலகம் முழுவதும் தனக்கு ரசிகர்களை ஈட்டினார். தற்போது பழுத்த முதுமையில் அவர் நடித்துள்ள ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ ஐந்தாம் பாகமாக வரும் ஜூன் 26இல் தமிழ் உட்பட நான்கு இந்திய மொழிகளில் வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE