சி
வில் சர்வீஸ் மற்றும் குரூப் 1 நிலையிலான தேர்வுகள் முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்கிற அடிப்படையில் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் ஒவ்வொரு நிலையிலும் வெற்றி தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இவற்றில் குறிப்பாகப் பிரிலிமினரி என்று அழைக்கப்படும் முதனிலைத் தேர்வில் வெற்றிபெற இயலாதவர்கள் மிக எளிதில் உற்சாகம் இழந்துவிடுகிறார்கள். ஆனால், அப்படிக் கவலை கொள்வதற்கு எந்த அவசியமும் இல்லை.
முதனிலைத் தேர்விலேயே வெற்றிபெற முடியவில்லையே, நாம் இந்தத் தேர்வை எழுதத் தகுதியானவர்தானா என்ற சந்தேகம் எழலாம். முதனிலைத் தேர்வில் தோல்வி அடைந்த ஆயிரக்கணக்கானோர் அடுத்தடுத்த முயற்சிகளில் அனைத்து நிலைகளையும் கடந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே, முதனிலைத் தேர்வில் வெற்றிபெறுவது என்பது குறிப்பிட்ட பணிக்கான தகுதி அல்ல, அந்த ஆண்டில் முதன்மைத் தேர்வை எழுதுவதற்கான தேவை தகுதி மட்டுமே.
முதனிலைத் தேர்வில் வெற்றிபெற முடியாமல் போகலாம். அது இயல்பானது. அதைப் போல, முதன்மைத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வில் கூட வெற்றி வாய்ப்பை இழக்கலாம். எந்த நிலையில் தவறினாலும் அந்த ஆண்டில் வெற்றி வாய்ப்பு தவறிவிட்டது என்றுதான் அர்த்தம். எனவே, எழுதிய தேர்வு கடைசி முயற்சியாக இல்லாதவரை, முதனிலைத் தேர்வில் வெற்றிபெற முடியாமல் போனதற்காக துவண்டு போகத் தேவை இல்லை.
முன்கூட்டிய தயாரிப்பு
முதனிலைத் தேர்வில் போதிய கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பெற முடியாதவர்கள் உடனடியாக அடுத்த ஆண்டுக்கான தயாரிப்பில் இறங்கிவிட வேண்டும். கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு அடுத்த ஆண்டு தேர்வுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். இன்னும் எந்தெந்தப் பாடங்களில் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முடிவுசெய்துகொண்டு அதை முன்கூட்டியே தொடங்கிவிட வேண்டும்.
முதனிலைத் தேர்வில் வெற்றிபெற முடியாமல் போனவர்கள் அடுத்த ஆண்டுக்கான முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு இரண்டையுமே குறிவைத்துப் படிக்க வேண்டும். அடுத்து வரும் ஆண்டுக்கான முதனிலைத் தேர்வுக்குப் படித்தால் மட்டும் தற்போதைக்குப் போதும் என்ற எண்ணம் வந்துவிடக் கூடாது. இது இரண்டு விதங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும். முதலாவதாக, அடுத்த ஆண்டில் முதனிலைத் தேர்வில் வெற்றிபெற்றவுடன் முதன்மைத் தேர்வுக்கு அதிகப்படியாக உழைக்க வேண்டியிருக்கும். இரண்டாவதாக, முதனிலைத் தேர்வுக்கான தயாரிப்புக்குக் காலம்தாழ்ந்துபோய் மீண்டும் ஒருமுறை வெற்றிவாய்ப்பை இழக்க நேரலாம்.
முடிவுக்கு முன்பே திட்டமிடல்
குடிமைப் பணித் தேர்வுகளைப் பொறுத்தவரை முதனிலைத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளை அன்றைய தினமே பெரும்பாலான பயிற்சி நிறுவனங்கள் தங்களது இணையதளங்களில் வெளியிட்டுவிடுகின்றன. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளைப் பொறுத்தவரை தேர்வாணையமே உத்தேச விடைப் பட்டியலைத் தனது இணையதளத்தில் வெளியிடுகிறது. முந்தைய ஆண்டின் கட்-ஆஃப் மதிப்பெண் மற்றும் குறிப்பிட்ட ஆண்டில் கேட்கப்பட்ட வினாத்தாளின் தன்மை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தோராயமாக கட்-ஆஃப் மதிப்பெண்ணைக் கணிக்கலாம். அதை மனதில்கொண்டு முதனிலைத் தேர்வில் வெற்றிபெற இயலுமா, வாய்ப்பில்லையா, இல்லை கட்-ஆஃப் மதிப்பெண்ணின் நெருக்கத்தில் இருக்கிறோமா என்பதை முடிவுசெய்துகொள்ளலாம்.
முதனிலைத் தேர்வில் வெற்றிபெற வாய்ப்பிருந்தால், முதன்மைத் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். வெற்றிபெற இயலாது எனத் தெரிந்தால், அடுத்த ஆண்டுக்கான தேர்வுக்கு இப்போதிருந்தே தயாராக வேண்டும். இடைப்பட்ட நிலையில் என்னவாகுமோ என்று உறுதியாகத் தெரியாத நிலையில், முதன்மைத் தேர்வுக்கான தயாரிப்பைத் தொடர வேண்டும். தேர்வு முடிவு எப்படி வந்தாலும் அதைச் சமாளிப்பதற்கு அதுவே சிறந்த வழி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago