வியூகம் 03: ஒரு முறை மட்டும்தான் வாய்ப்பு!

By செல்வ புவியரசன்

உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வை (நெட்) ஆண்டுக்கு இருமுறை நடத்திவந்தது பல்கலைக்கழக மானியக் குழு. தற்போது அந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பு சி.பி.எஸ்.இ. வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. சி.பி.எஸ்.இ. தனது பணிச்சுமையைக் காரணம்காட்டி அத்தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்திவருகிறது.

நெட் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுகின்ற மாணவர்களுக்கே முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது. எனவே கலைத் துறைகளிலும் இலக்கியம், சட்டம், வணிகவியல் ஆகிய பிரிவுகளிலும் முதுகலைப் பட்டம் பெற்ற மாணவர்களின் பணிவாய்ப்பும் ஆராய்ச்சி உதவித்தொகைக்கான வாய்ப்பும் பாதியாகக் குறைந்துவிட்டது. மேலும் மாநில அளவில் ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டிய செட் தேர்வு எப்போது நடக்கும் என்ற உறுதியும் இல்லை. எனவே ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கின்ற இந்த வாய்ப்பை மாணவர்கள் தவறவிட்டுவிடக் கூடாது.

புதிய மாற்றம்

யு.ஜி.சி. நெட் தேர்வில் 3 தாள்களை எழுதவேண்டும். முதல் தாளில் ஆய்வு முறை, கற்பிக்கும் முறை, கணினி பயன்பாட்டு அறிவு, சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களிலிருந்து 60 கேள்விகள் கேட்கப்படும். அவற்றில் 50 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். இரண்டாம் தாளில் முதன்மைப் பாடத்திலிருந்து எளிதான வகையில் 50 கேள்விகள் கேட்கப்படும். இவை இரண்டும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் முறையில் அமைந்தவை.

மூன்றாம் தாளைப் பொறுத்தவரை அதன் வினாத்தாள் அமைப்பு கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றமடைந்து வந்திருக்கிறது. முன்பெல்லாம் விவரித்து எழுதும் வகையிலேயே மூன்றாம் தாள் அமைந்திருந்தது. இப்போது மூன்றாம் தாளும் முதலிரண்டு தாள்களைப்போலவே சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுவிட்டது.

யூ.பி.எஸ்.சி. தேர்வுகளைப் போல யு.ஜி.சி. நெட் தேர்விலும் தவறான பதில்களைத் தேர்ந்தெடுத்தால் மதிப்பெண்களைக் குறைக்கும் நெகட்டிவ் மார்க் முறையும்கூடச் சோதித்துப் பார்க்கப்பட்டது. ஆனால் அந்த முறை அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்திலேயே விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது.

கடந்த காலத் தேர்வு முறைகளோடு ஒப்பிட்டால் தற்போதைய தேர்வு முறை மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு எளிதான வகையில் அமைந்துள்ளது.

5 ஆண்டுகள், 125 கேள்விகள்

முதல் தாள் எல்லாப் பாடப் பிரிவினருக்கும் பொதுவானது. இரண்டாம் தாளும் மூன்றாம் தாளும் முதன்மைப் பாடத்தின் முதுகலை தரத்தில் அமைந்திருக்கும். முதன்மைப் பாடத்தைப் பொறுத்தவரை இரண்டாம் தாளில் 50, மூன்றாம் தாளில் 75 என மொத்தமே 125 கேள்விகள்தான்.

இளங்கலை, முதுகலை என்று ஐந்தாண்டு காலம் கல்லூரிப் படிப்பில் கற்றுக்கொண்டதையெல்லாம் சோதித்துப் பார்க்கும் வகையில் இந்த 125 கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே, இதுவரை படித்த பாடங்களைக் கவனமாக நினைவுகூர்ந்தால் போதுமானது. ஆனால், தேர்வுக்கான வழிகாட்டு நூல்களை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. ஒவ்வொரு பாடத்திலும் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய பாடநூல்களை முடிந்தவரை படிப்பது நல்லது.

மொழி தடை அல்ல

தேர்வுகள் சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கும் வகையிலேயே கேட்கப்படுகின்றன. எனவே, அதே வகையில் அமைந்த வினாத்தாள் தொகுப்புகளைப் படித்துக்கொள்வது தேர்வுக்கு மிக உதவியாக இருக்கும். யூ.பி.எஸ்.சி. முதனிலைத் தேர்வில் விருப்பப் பாடமும் ஒன்றாக இருந்தபோது அப்ஜக்டிவ் வகையில் 120 கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த வினாத்தாள்கள் தற்போதும் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுவருகின்றன. அந்த வினா தொகுப்புகள் நெட் தேர்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணத்துக்கு, வரலாற்றுப் பாடத்தில் நெட் தேர்வெழுதும் ஒரு மாணவர், யூ.பி.எஸ்.சி. முதனிலைத் தேர்வின் வரலாற்று பாடத்துக்கான பழைய கேள்வித் தாள்களையும் தனது தயாரிப்பில் ஒரு பகுதியாகக்கொள்ளலாம். ஆனால், மொழிப் பாடம் படித்தவர்களுக்கு இந்த வாய்ப்பில்லை.

தாய்மொழியில் இளங்கலையும் முதுகலையும் படித்தவர்கள் ஆங்கிலத்தில் நெட் தேர்வு எழுத வேண்டியிருப்பதை எண்ணி, அச்சப்பட வேண்டியதில்லை. முந்தைய தேர்வுமுறையில் மூன்றாம் தாளை ஆங்கிலத்திலேயே எழுத வேண்டியிருந்தது. தற்போதைய முறையில் ஆங்கிலத்தைப் புரிந்துகொண்டால் போதும். ஆனால் அதைவிடவும் முக்கியமாகப் படித்த பாடத்தைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஆண்டுகளில் படித்ததை 125 கேள்விகளால் சோதித்துப் பார்க்கும் தேர்வு இது. கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் தேர்வு எழுதுபவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அதற்கான பதிலை நினைவில் வைத்திருக்கிறார்களா என்பதுதான் வெற்றியை முடிவுசெய்யும்.

தேர்வு வந்தாச்சு!

யு.ஜி.சி. நெட் தேர்வு - நவம்பர் 5, 2017

பதிலளிக்க வேண்டிய மொத்தக் கேள்விகள்- 175

முதன்மைப் பாடத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகள்- 125

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்