தலைவராக காத்திருக்கும் மாணவர்கள்!

By எல்.ரேணுகா தேவி

ளைஞர் மாதிரி நாடாளுமன்ற கூட்டங்களும் அதற்கான போட்டிகளும் பள்ளி அளவில் பரவலாகி வருகின்றன . இதன் மூலம் நாட்டு நிலவரம், நிர்வாகத் திறன், பிரச்சினைகளை விவாதித்துத் தீர்வு காணும் ஆற்றல் ஆகியவற்றை மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே கற்றுக் கொள்ளத் தொடங்குகிறார்கள். ஆனால், அதே மாணவர்கள் கல்லூரிகளுக்குச் சென்ற பின்பு தங்களுடைய உரிமைகளைக் கோருவதற்கு மாணவர் பேரவை அமைக்க மிகச் சில கல்லூரிகள் மட்டுமே அனுமதிக்கின்றன.

லிங்க்தோ (Lyngdoh) கமிட்டியின் பரிந்துரைப்படி உச்ச நீதிமன்றம் 2006-ம் ஆண்டில் நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள், அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என அனைத்திலும் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் ஜே.என்.யூ, ஹைதராபாத் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில மத்தியப் பல்கலைக்கழகங்களைத் தவிர்த்து ஏனைய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களுக்கான பேரவைத் தேர்தல்கள் நடத்தப்படுவதே இல்லை. தமிழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் நடப்பது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதேநேரம் இமாசலப் பிரதேசம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர்ச்சியாக மாணவப் பேரவைத் தேர்தல் நடத்தப்படுகின்றது.

தேவை தேர்தல்

“170 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி அளித்துவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க எங்களுடைய மாநிலக் கல்லூரி பல தலைவர்களை உருவாக்கியிருக்கிறது. தற்போது எங்கள் கல்லூரியில் அடிப்படை வசதிகளான சுத்தமான கழிப்பறை, சுத்தமான வகுப்பறையை பார்ப்பதே அரிது. இதுபோன்ற அடிப்படை வசதிகளை மாணவர்கள் கேட்டுப் பெறுவதற்கு மாணவப் பேரவை அவசியம். ஆனால் கடந்த மூன்று ஆண்டுளுக்கு முன்பு எங்களுக்கான தேர்தலை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. மீண்டும் மாணவப் பேரவை தேர்தலை நடத்தும் உரிமை வேண்டும் என தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் மாநிலக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவர் ஆகாஷ்.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு மாணவப் பேரவை தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

“உச்ச நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் அதனை அமல்படுத்தும் மாநில அரசு மாணவப் பேரவை தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் உள்ளது. மாணவர் பேரவை என்றாலே மாணவர்கள் போராட்டம் செய்வார்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் அதனால் தங்களுக்குப் பிரச்சினை வரக்கூடும் என்ற பயத்தினால் கல்லூரி நிர்வாகமும், அரசும் திட்டமிட்டே மாணவர் பேரவைத் தேர்தலை அனுமதிப்பதில்லை. தமிழகத்தில் ஒரு சில கல்லூரிகளில் தேர்தல் நடத்துவதற்குப் பதிலாக கல்லூரி நிர்வாகமே தங்களுக்குப் பிடித்த மாணவரை, மாணவப் பேரவை தலைவராக நியமிக்கும் போக்கும் உள்ளது.

சொல்லப்போனால், பல்கலைக்கழக நிலைக்குழு மாணவப் பேரவை செயல்பட்டால்தான் கல்லூரிகளில் நடக்கும் விழாக்களுக்கு மானியம் அளிக்கும். இதற்காகச் சில பல்கலைக்கழகங்கள் மாணவர் பேரவை தேர்தல்களை நடத்துகின்றன. ஆனால், அவ்வாறு நடக்கும் தேர்தல்கள் மாணவர்களுக்கு முன்னறிவிப்பு இல்லாமல் ஒரு நாளுக்கு முன்பு அறிவித்து தேர்தலை சம்பிரதாய நிகழ்வாக நடத்தி முடிக்கின்றன. உச்ச நீதிமன்ற ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி சுதந்திரமான, ஜனநாயக முறைப்படி மாணவர் பேரவைத் தேர்தல்கள் தமிழகத்தில் நடத்தப்படுவதில்லை” என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன்.

பிரச்சினை மாணவர்களிடம் இல்லை

கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தினால் மாணவர்களுக்குள் அடிதடி பிரச்சினைகள் உருவாகின்றன என்கிறார்கள். அப்படியென்றால் அண்டை மாநிலங்களில் நடைபெறும் மாணவர் பேரவைத் தேர்தல் காரணமாகவும் மாணவர்களிடம் பிரச்சினைகள் வர வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி நடப்பதில்லையே” என்கிற கேள்வியை எழுப்புகிறார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் உச்சிமாகாளி.

“மாணவர்களின் கோரிக்கையை வலியுறுத்தும் மாணவர் பேர்வை கல்லூரிகளில் உருவானால் நிர்வாகத்தில் உள்ள பிரச்சினைகளை அவர்கள் கேட்கத் தொடங்கிவிடுவார்கள் என்ற அச்சம் கல்லூரி நிர்வாகத்தினரிடமும், பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடமும் நிலவுகிறது. மாணவர்களுக்கு அரசியல் புரிதலை ஏற்படுத்தினால் அவர்கள் அடுத்து அரசைக் கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவார்கள் என்கிற காரணத்துக்காக அரசு திட்டமிட்டே மாணவர் பேரவை நடத்தக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளது” என்கிறார் அவர்.

மாணவப் பருவத்தில் சமூகம், அரசியல் குறித்த புரிதலுக்கு வழிவகுக்கும் மாணவர் பேரவைத் தேர்தலை தடை செய்வது ஜனநாயக உரிமையைப் பறிப்பதன் தொடர்ச்சியே. ஆக்கப்பூர்வமான மாற்றத்துக்கு வழியமைக்கும் இந்தத் தேர்தல் குறித்து வெளிப்படையான விவாதம் அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்