“ஏந்த இடத்துக்குச் சென்றாலும், அங்கு ஒலிக்கும் சத்தங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அப்போதுதான், திரையில் அதே போன்றதொரு காட்சி வந்தால், இங்கு இப்படித்தான் ஒலி இருக்கும் என்பதை முடிவு செய்ய முடியும்" என்று பேசத் தொடங்குகிறார் ஒலிக்கலவை நிபுணர் உதயகுமார்.
'விவேகம்','விசாரணை', 'அஞ்சாதே', 'பொல்லாதவன்', 'நந்தலாலா','ஆடுகளம்', 'நாடோடிகள்', 'பண்ணையாரும் பத்மினியும்', 'சிறுத்தை' உட்பட பல படங்களுக்கு ஒலிக்கலவைச் செய்தவர் உதயகுமார். தமிழ் திரையுலகில் இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது, அந்தளவுக்குத் தனது பணியின் மூலம் நிரூபித்தவர். அவரிடம் ஒலித்துறையில் ஒலிக்கலவை, சவுண்ட் எஃபக்ட்ஸ் ஆகியவற்றுக்கான படிப்பும் பணியும் குறித்து உரையாடியதிலிருந்து...
திரையுலகில் ஒலிக்கலவை பணி எப்படிப்பட்டது?
முதலில் எடிட்டர் இறுதி செய்த படம் எங்களிடம் வரும். டப்பிங் ட்ராக் , சவுண்ட் எஃபெக்ட்ஸ் ட்ராக், பின்னணி இசை எனத் தனித்தனியாக கொடுப்பார்கள். அத்தனையும் ஒரே ஒலி அளவில் இருக்கும். அவற்றைப் படத்தோடு இணைத்து எந்த இடத்தில் எவ்வளவு ஒலியளவு இருக்க வேண்டும் என முடிவு செய்வேன். பலர் உரையாடும் காட்சியாக இருந்தால், யாருடைய பேச்சுக்கு எந்த ஒலி அளவு இருக்க வேண்டும் என முடிவு செய்வது முக்கியமான பணி.
பல நடிகர்கள் நடித்திருக்கும் வசனக் காட்சியில் யாருடை வசனம் முக்கியமானது, எது மக்களிடம் போய்ச் சேரும் என்பதைத் தீர்மானித்து மற்றவர்களுக்கான ஒலி அளவை குறைக்க வேண்டும். அதே வேளையில் நடந்தபடியே வசனம் பேசியிருந்தால், நடக்கும் சத்தம் எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.
உதாரணத்துக்கு, காட்டுக்குள் படமாக்கப்பட்ட காட்சிக்கான ஒலிக்கலவையை வீட்டுக்குள் பேசும் காட்சியைப் போல் செய்ய முடியாது. எனவே, காட்சி எங்கு நடக்கிறது, எப்போது நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டுதான் ஒலிக்கலவை செய்வோம். திரையரங்கில் எந்த ஒலி எவ்வளவு கேட்க வேண்டும் என்பதையும் இயக்குநருடன் சேர்ந்து முடிவுசெய்வது நாங்கள்தான்.
ஒலிக்கலவைத் துறைக்குள் நுழைய வேண்டுமானால் என்ன படித்திருக்க வேண்டும்?
சென்னை, தரமணியில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் படிக்க வேண்டுமானால் பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல் சார்ந்த அறிவியல் பிரிவைப் படித்திருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் மின் மற்றும் மின்னணு சார்ந்த படிப்பு ஏதாவது படித்திருந்தாலும் சேரலாம். அறிவியல் சார்ந்த படிப்பு ஏதேனும் படித்திருக்கிறார்களா என்று முக்கியமாகப் பார்ப்பார்கள். புனே கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் ஏதேனும் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். சில தனியார் கல்லூரிகளில் குறுகிய காலப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
தனியார் கல்லூரிகளில் படித்துவிட்டு இத்துறைக்குள் நுழைவது எளிதா?
பல தனியார் கல்லூரிகளில் ஒலிக்கான படிப்பு இல்லை. அரசு திரைப்படக் கல்லூரியில் படித்தால், ஒலிப் பொறியாளராக நீண்ட காலமாகப் பணிபுரிபவர்கள் விரிவுரை வழங்குவார்கள். அதன் மூலம் ஒலித்துறையைப் பற்றி சிறப்பாகத் தெரிந்துகொள்ளலாம். அது மட்டுமல்லாமல் அரசாங்கத் துறையில் வேலைக்குச் செல்வதும் எளிது. தூர்தர்ஷன், அனைத்திந்திய வானொலி போன்றவற்றில் உடனே வேலைக் கிடைக்கும். தனியார் கல்லூரியில் படிப்பவர்கள் அவர்களுடைய தனித்திறமையைக் கொண்டே வளர வேண்டும்.
ஒலித்துறையில் என்ன மென்பொருள் முக்கியமானதாகப் பயன்படுத்தி வருகிறீர்கள்?
ஒலியை இணைப்பவர்கள் ப்ரோ டூல்ஸ் உபயோகிப்பார்கள். இசையமைப்பாளர்கள் தரப்பில் க்யூ-பேஸ், நியாண்டோ, சவுண்ட் ஸ்கேப் எனத் தங்களுக்குச் சாதகமான மென்பொருளைத் தகுந்து போன்று பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த மென்பொருளை எல்லாம் இணையம் வழியே படித்து, இத்துறைக்குள் வர முடியாதா?
இணையம் வழியே படித்தாலும், யாராவது ஒலிப் பொறியாளரிடம் உதவியாளராகப் பணிபுரியும்போதுதான் செயல்முறையில் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
இத்துறையில் வேலைவாய்ப்பு எப்படியுள்ளது?
1998-ம் ஆண்டில் சினிமா அல்லது தூர்தர்ஷன் இரண்டில் மட்டுமே பணிகள் இருந்தன. திரைத்துறையில் வேலை கிடைக்கும் பட்சத்தில் முதலில் அப்ரென்டீசாக பயிற்சி பெறும் நிலையில் பணிபுரிவோம். சம்பளம் கொடுக்க மாட்டார்கள். இதனால் பலர் பாதியிலேயே வேலையை விட்டுவிடுவார்கள். பணிபுரியும்போது வேலை பிடித்திருந்தால் பணியாளராக ஒப்பந்தம் செய்துகொள்வார்கள்.
இப்போது நிலைமை மாறியுள்ளது. தற்போது திரையுலகில் கிடைக்கும் சம்பளத்தைவிடத் தொலைக்காட்சி சம்பளம் அதிகம். அது மட்டுமல்லாமல் திரையுலகில் எப்போது வேலை முடியும் என்று சொல்ல முடியாது. ஆனால், தொலைக்காட்சியில் ஷிஃப்ட் முறைப்படி வேலை இருப்பதால் அதற்குப் பலர் போட்டிப் போட்டுக்கொண்டு வருகிறார்கள். ஒலி சம்பந்தப்பட்ட படிப்பை முடித்துவிட்டு நான்கு பேர் திரைத்துறைக்குள் வருகிறார்கள் என்றால், சுமார் 15 பேர்வரை தொலைக்காட்சிக்குச் செல்கிறார்கள்.
திரைத்துறையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றால், முதலில் யாரிடம் உதவியாளராகச் சேர்கிறார்கள் என்றொரு விஷயம் இருக்கிறது. அது மிகவும் முக்கியம். சேர்ந்தவுடனே சம்பளம் பெரியளவில் இருக்காது, ஆர்வத்துடன் கற்றுக்கொள்வதைப் பொறுத்துத்தான் வளர்ச்சி. உதவியாளராகப் பணிபுரியும்போது வாழ்க்கை கொஞ்சம் கடினமானதுதான்.
நீங்கள் எப்படி இத்துறைக்குள் வந்தீர்கள்?
1995-98-ல் திரைப்படக் கல்லூரியில் ஒலிப் பொறியியல் படித்தேன். ஒரு வருடம் மணிசர்மா ஸ்டூடியோவில் பணிபுரிந்தேன். அப்போது பாடலை ஒலிப்பதிவு செய்வது உள்ளிட்டவற்றைக் கற்றுக்கொண்டேன். 2000 - 2008 வரைக்கும் தீபன் சேட்டர்ஜி என்ற ஒலிப் பொறியாளரிடம் பணிபுரிந்தேன்.
அவரிடம் பணியாற்றிய அனுபவம்தான் இப்போது வரைக்கும் வேலைச் செய்ய உதவுகிறது. படத்தின் கதைக்கு ஏற்றமாதிரி நம்மை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை அடிக்கடி சொல்வார். அப்போது பல வித்தியாசமான படங்களில் பணியாற்றி இருக்கிறேன். ஆக்ஷன் படங்களுக்கு ஒலிப்பதிவு செய்து கொண்டிருக்கும்போது, அதற்கு ஏற்ற மனநிலையும் அவசியம். 'சிறுத்தை', 'வீரம்' போன்ற படங்களுக்கான விஷயங்களை 'வாகை சூட வா', 'நந்தலாலா' போன்ற படங்களுக்குச் செய்யமுடியாது.
ஒலிப்பதிவு பணிபுரிவது எப்படி ஒலிக்கலவை பணிக்கு உதவியாக இருக்கும்?
ஒலிப்பதிவு பணிபுரிந்தால் ஒலிக்கலவை எளிது. ஏனென்றால் ஒலிப்பதிவு செய்யும் இடத்திலிருந்துதான் பணிகள் தொடங்குகிறது. அங்கிருந்து ஒலிக்கலவைக்கு ஒலிகள் வரும்போது, எங்கே தவறு நடந்துள்ளது என்பதைக் கணிக்க முடியும். பாடல், டப்பிங் என அனைத்துமே பதிவுசெய்துதான் ஒலிக்கலவைக்கு அனுப்புவார்கள். ஏதாவது ஒரு இடத்தில் பணிபுரிந்த அனுபவமிருந்தால் மட்டுமே ஒலிக்கலவையில் பணியின்போது, ‘இது தான் தவறு’ என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியும்.
திரையரங்கில் எந்த ஒலி எவ்வளவு கேட்க வேண்டும் என்பதையும் முடிவுசெய்பவர் ஒலிக்கலவை நிபுணர்.
ஒலி பொறியாளரிடம் உதவியாளராகப் பணிபுரியும்போதுதான் செயல்முறையில் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும். கதைக்கு ஏற்ற மாதிரி நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago