தமிழக முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா இறந்தபோது துக்கம் அனுசரிக்கும் விதமாக தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறந்தது என்ற ஒரு செய்தியை வாசித்திருப்பீர்கள். முதல்வர், பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற பொறுப்பில் உள்ளவர்கள் மரிக்கும்போது அவர்களுக்கு மரியாதை செய்வதற்காக தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கச் செய்வது வழக்கம்.
இன்று உலகத்தில் பெரும்பாலான நாடுகள் இந்தப் பழக்கத்தைக் கடைபிடிக்கின்றன. இது முதன் முதலில் எந்த நாட்டில் தொடங்கியது, யாருக்கு முதன் முதலில் இந்த முறையில் மரியாதை செய்யப்பட்டது என்ற கேள்விகளுக்கு விடையாக ஒரு வரலாற்றுச் சம்பவம் இருக்கிறது.
எப்போது தொடங்கியது?
கொடியை அரைக்கம்பத்தில் ஏற்றும் வழக்கம் 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமானது. கிரீன்லாந்துப் படையெடுப்பின் போதுதான் முதன் முதலில் ஒரு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. டென்மார்க் அரசரான நான்காம் கிறிஸ்டியன் கீரின்லாந்து மீது 1605-ம் ஆண்டில் முதன் படையெடுப்பை நடத்தினார். இந்தப் படையெடுப்பில் கிரீன்லாந்தைச் சேர்ந்தவர்கள் எஸ்கிமோக்கள் சிலரைச் சிறைபிடித்தனர். இதற்கு அடுத்தபடியாக 7 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹால் என்பவர் தனிப்பட்ட முறையில் கிரீன்லாந்து மீது படையெடுத்துச் சென்றார். முந்தைய தோல்வியாலும் உயிரிழப்பாலும் எஸ்கிமோக்கள் சுதாரிப்பாக இருந்தார்கள்.
ஜேம்ஸ் ஹால் ஏற்கனவே டென்மார்க் அரசப் படைகள் நுழைந்த பகுதிக்கு தி ஹார்ட்ஸ் ஈஸ் (The Heart’s Ease) என்னும் கப்பலில் வந்துசேர்ந்தார். அந்தக் கப்பலில் இருந்து சிறு படகுகள், கரைக்குச் செல்வற்காக இறக்கப்பட்டன. அவற்றில் ஒன்றில் ஹாலும் இருந்தார். கரையை நெருங்கும் நேரத்தில் மறைந்திருந்த இனூயிட் மக்கள் அவரை அம்பெய்து கொன்றுவிட்டனர். இந்தக் கொலைச் சம்பவம் 1612-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி நடந்தது. ஹாலுடன் பயணம் செய்த ஜான் காட்டன்பே என்னும் அதிகாரி இதைப் பதிவுசெய்துள்ளார்.
ஹால் கொல்லப்பட்ட பிறகு வில்லியம் ஹண்ட்ரஸ் எனும் கப்பல் தளபதி தங்களது தலைவரின் இறப்பைத் தொடர்ந்து, பின்வாங்க முடிவெடுத்துக் கப்பலை இங்கிலாந்தை நோக்கித் திருப்புகிறார். அதே ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி த ஹார்ட் ஈஸ் கப்பல் இங்கிலாந்தை வந்தடைகிறது. பொதுவாகக் கப்பலில் ஏற்றப்பட்டிருக்கும் கொடிகள் அந்தக் கப்பலில் இல்லை. பெருமை மிக்க அந்தக் கப்பல் இறந்த தன் தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு பறக்கும் தன் கொடிகளைத் தாழ்த்திக் கொண்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கொடிகள், நிலப் பகுதியில் முக்கியமான தலைவர்களின் அஞ்சலிக்காக அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டன.
யார் யாருக்கெல்லாம் இந்த மரியாதை?
இது நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்தியாவைப் பொருத்தமட்டில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இறந்துவிட்டால் இந்தியா முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் ஏற்றப்படும். மக்களவை சபாநாயகர், உச்ச நீதி மன்ற நீதிபதி இறந்துவிட்டால் தலைநகர் டெல்லியில் மட்டும் அரைக்கம்பத்தில் கொடி ஏற்றப்படும். மத்திய அமைச்சர் இறந்தால் தலைநகர் டெல்லியிலும் அவரது சொந்த மாநிலத்திலும் அரைக்கம்பத்தில் கொடிகள் ஏற்றப்படும். ஆளுநர், துணை ஆளுநர், முதல்வர் ஆகியோர் இறந்துவிட்டால் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மட்டும் கொடிகள் அரைக்கம்பத்தில் ஏற்றப்படும்.
இவை அல்லாமல் வெளிநாட்டுத் தலைவர்கள் இறப்புக்கும் மரியாதை தெரிவிக்கும் வகையில் கொடிகள் அரைக்கம்பத்தில் ஏற்றப்படும் வழக்கமும் இருக்கிறது. உதாரணமாக தென்னாப்பிரிக்காத் தலைவர் நெல்சன் மண்டேலா இறப்புக்கும் சிங்கப்பூரின் தந்தையாகப் போற்றப்படும் லீ குவான் யூ இறப்புக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இந்திய தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டன.
எப்போதும் பறக்குது!
தேசியக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிடும் வழக்கம் எல்லா நாடுகளுக்கும் பொதுவானது அல்ல. ஈரான், ஈராக், சவுதி அரேபியா, சோமாலியா ஆகிய நான்கு நாடுகளின் கொடிகள் எந்தச் சமயத்திலும் அரைக்கம்பத்தில் பறப்பதில்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago