தமிழகத்தின் முதலமைச்சராக ஆறு முறை பதவி வகித்தவர் ஜெ.ஜெயலலிதா. அவர் மாநில அரசியல் மட்டுமின்றி தேசிய அளவிலும் தாக்கம் செலுத்தும் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். பலவிதமான ஏற்ற, இறக்கங்கள் மற்றும் போராட்டங்களைச் சந்தித்த அவரது வாழ்க்கைப் பயணத்தின் திருப்புமுனைகள் இங்கே காலவரிசைப்படி வழங்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் பிறந்தார்
கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா மாவட்டத்திலுள்ள மேல்கோட்டை என்னும் ஊரில் ஜெயராம், வேதவல்லி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். அவரது அப்பாவழித் தாத்தா இட்ட பெயர் கோமளவல்லி. அவருக்கு ஒரு வயதானபோது ஜெயலலிதா என்ற பெயரைப் பெற்றோர்கள் வைத்தனர். ஜெயலலிதாவுக்கு ஜெயகுமார் என்ற மூத்த சகோதரர். 1950-ல் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராம் மரணமடைந்தார். ஜெயலலிதாவின் தாய் வேத வல்லி, ஜெயலலிதாவையும் அவர் அண்ணன் ஜெயகுமாரையும் பெங்களூருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
சென்னைக்கு வந்தார்
ஜெயலலிதாவும் அவரது அண்ணனும் பெங்களூருவில் அத்தையுடன் தங்கியிருக்க அவரது அம்மா வேதவல்லி, சென்னைக்கு வந்தார். ஜெயலலிதா பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில் படித்தார். வேதவல்லி நாடகங் களிலும் சினிமாக்களிலும் சந்தியா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். 1958-ல் ஜெயலலிதாவின் அத்தைக்குத் திருமணமான நிலையில், அவர் சென்னை வந்தார். சென்னையின் புகழ்பெற்ற சர்ச் பார்க் கான்வென்டில் சேர்க்கப்பட்டார். கர்நாடக இசை, பரத நாட்டியம் மற்றும் கதக் நடனப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. படிப்பைப் பொறுத்தவரை முன்னணி மாணவியாகத் திகழ்ந்தார்.
திரைவாழ்வு தொடங்கியது
1964-ல் சர்ச் பார்க் கான்வென்டில் மெட்ரிக் வகுப்பில் நல்லமுறையில் தேறினார். புதுமுக வகுப்பில் படிப்பதற்கு தயாரான சூழலில், குடும்பத்தை அழுத்திய கடன் சுமையை நீக்கும் வகையில் சினிமா நடிகையானார். அவரது முதல் திரைப்படம் ‘சின்னடா கொம்பே’ என்ற கன்னடப் படம். சிறு வயதில் அவருக்கு வழக்கறிஞராகும் லட்சியம் இருந்தது. ஜெயலலிதாவின் முதல் தமிழ்த் திரைப்படம் ‘வெண்ணிற ஆடை’. 1965-ல் வெளிவந்த இத்திரைப்படத்தின் இயக்குநர் ஸ்ரீதர்.
அதே ஆண்டு தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான தயாரிப்பு என்று இன்றும் நினைவுகூரப்படும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். உடன் முதல் முறையாகக் கதாநாயகியானர்.
1965 முதல் 1980 வரை ஜெயலலிதா நட்சத்திரமாக ஜொலித்த ஆண்டுகள். அக்காலத்தில் அதிகச் சம்பளம் வாங்கும் திரைக்கலைஞராக விளங்கினார். புகழ் மிக்க பிராண்டுகளின் விளம்பர மாடலாகவும் இருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 140 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் 120 திரைப்படங்கள் வெற்றிப்படங்கள். அவர் தமிழில் நடித்த கடைசித் திரைப்படம் 1980-ல் வெளியான ‘நதியைத் தேடி வந்த கடல்’.
அரசியல் வாழ்வின் தொடக்கம்
1982, ஜூன் 5-ம் தேதி, அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் ஜெயலலிதா இணைந்தார். ‘பெண்ணின் பெருமை’ என்ற தலைப்பில் முதல் மேடைப் பேச்சை நிகழ்த்தினார். அரசியலில் நுழைவதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். தான் என்றும் அவர் கூறினார். அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்தை மேற்பார்வையிடும் உயர் மட்டக் கமிட்டியின் உறுப்பினராகப் பின்னர் நியமிக்கப்பட்டார். 1983-ல் ஜெயலலிதா அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனார்.
1984, மார்ச் மாதம் 12-ம் தேதி, அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பி னராக வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை, அப்போதைய சட்டசபை சபாநாயகர் கே. ராஜாராம் முன்மொழிந்தார். 1984-ம் ஆண்டு முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார்.
எம்.ஜி.ஆர் மரணம்
அ.தி.மு.க. வின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். 1987, டிசம்பர் 24 அன்று மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான இரண்டு அணிகள் ஏற்பட்டன. 1988, ஜனவரி 1-ம் தேதி அ.தி.மு.க. (ஜெ) அணிக்கு பொதுச் செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.
முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர்
1989, ஜனவரி 24-ம் தேதி, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜி னாமா செய்தார். போடி நாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் நின்று சட்டசபை உறுப்பினர் ஆனார் ஜெயலலிதா. அவர் தலைமையிலான அணி 27 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி ஆனது.
1989, பிப்ரவரி 9-ம் தேதி தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். இரண்டு அணிகளாக இருந்த அ.தி.மு.க.வை ஒன்று சேர்த்து இரட்டை இலை சின்னத்தையும் மீட்டார். அதே ஆண்டு நவம்பர் மாதம் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அ.தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் 39 இடங்களை வென்றது. இதன் மூலம் ஜெயலலிதா தேசிய அரசியலில் நுழைந்தார்.
முதலமைச்சர் ஆனார்
1991-ல் சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில், ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி, 234 தொகுதிகளில் 224-ஐ வென்றது. 39 நாடாளுமன்றத் தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியது. அதிகபட்ச பெரும்பான்மையுடன் ஜெயலலிதா, தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். அதிகபட்ச பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் (25) இடம்பெற்ற சட்டசபையாகவும் அது அமைந்தது.
தொட்டில் குழந்தைத் திட்டம்
1992-ம் ஆண்டு பெண் சிசுக்கொலையைத் தவிர்க்கும் வகையில் ‘தொட்டில் குழந்தைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 2011-ம் ஆண்டுவரை அறிமுகம் செய்யப்பட்டது. பெண்கள் சார்ந்த குற்றங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்க மகளிர் காவல் நிலையங்கள் முதல் முறையாக அமைக்கப்பட்டன. போலீஸ் பணிகளில் 30 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழகத்தில் அரசு வேலைகள் மற்றும் கல்வியில் 69 சதவீதம் இடஒதுக்கீடு தொடர வழிவகை செய்யப்பட்டது.
அடுத்த தேர்தலில் தோல்வி
1996 மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தோற் கடிக்கப்பட்டார். அ.தி.மு.க. தோல்வியைத் தழுவியது. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
மீண்டும் பெற்ற வெற்றி
2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. மீண்டும் வெற்றிபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். 2002-ம் ஆண்டு, ஜெயலலிதா ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் வென்று மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார். பெண் போலீஸ் கமாண்டோக்களைக் கொண்டு இந்தியாவின் முதல் மகளிர் காவல் படையை அமைத்தார்.
வழக்கு, விடுதலை, மீண்டும் தோல்வி
2003, நவம்பர் மாதம் டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜெய லலிதாவை விடுதலை செய் தது. 2006-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தோற்றது. ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெய லலிதா வென்றார். பின்னர் எதிர்கட்சித் தலைவர் ஆனார்.
அம்மா பிராண்ட்
2011, மே மாதம் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் 13 கட்சிகள் கூட்டணி அமைத்து மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆனார். அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் என பல நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டன.
2016, மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 134 இடங்களை வென்று மீண்டும் முதலமைச்சர் ஆனார். தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரான சில தலைவர்களில் வரிசையில் ஜெயலலிதா இடம்பெற்றார். செப்டம்பர் மாதம், பெண் அரசு ஊழியர்களுக்கு ஒன்பது மாத பிரசவ கால விடுப்பை அறிவித்தார். அதற்கு முன்னர் ஆறு மாத காலமே இருந்தது.
காலம் ஒலித்த மணி
2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிசம்பர் 5-ம் தேதி, 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் மாரடைப்பு காரணமாக நள்ளிரவு 11.30 மணிக்குக் காலமானார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago