எவ்வளவு பெருசு! - நம் குடும்பம் ரொம்பப் பெரியது...

By ஆசை

இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு வரைபடத்தில் கொண்டுவருவதாக ஒரு கற்பனை செய்துகொள்வோம். அந்த வரைபடத்தில் நம் சூரியக் குடும்பம் ஒரு புள்ளி அளவு கூட இருக்காது. ஆனால், நம் பூமியின் அளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் தெரியும் சூரியக் குடும்பம் எவ்வளவு பெரியது என்று.

சூரியக் குடும்பத்தின் வரைபடத்தை நம் பாடநூல்களில் பார்த்திருப்போம். நடுவே, சூரியன் இருக்க, அடுக்கடுக்காக இருக்கும் நீள்வட்டப் பாதையில் ஒன்றன் பின் ஒன்றாக புதனில் ஆரம்பித்து, தனது கோள் தகுதியை இழந்த புளூட்டோ வரை அந்தப் படங்களில் வரிசையாகக் கொடுக்கப்பட்டிருக்கும். சூரியக் குடும்ப உறுப்பினர்களின் உண்மையான அளவைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்த்தால் அவற்றை ஒரு வரைபடத்துக்குள் கொண்டுவருவது இயலாத காரியம். அவற்றின் அளவுகளை வைத்து விகிதாச்சாரப்படி ஒரு வரைபடத்தை எழுத்தாளர் பில் பிரைசன் தனது ‘எ ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் நியர்லி எவரிதிங்’ நூலில் கற்பனை செய்துபார்த்திருக்கிறார்.

உண்மையான தொலைவு?

பூமியை ஒரு பட்டாணி அளவுக்கு வரைந்தால் விகிதாச்சாரப்படி வியாழன் கோளை ஆயிரம் அடிகள் தள்ளிதான் வரும். புளூட்டோ ஒன்றரை மைல் தூரம் தள்ளிதான் வரும். இந்த விகிதாச்சாரத்தில் அது பாக்டீரியா அளவில்தான் இருக்கும். வரைபடமே இவ்வளவு பெரிதாக இருக்குமென்றால் உண்மையான தொலைவு எவ்வளவு நீண்டதாக இருக்கும்!

பிரம்மாண்டமான விளிம்பு

பெரும்பாலான சூரியக் குடும்பத்தின் வரைபடத்தைப் பார்த்தால் ஏதோ புளூட்டோவுடன் சூரியக் குடும்பமே முடிந்துவிடுவதுபோல்தான் வரைந்திருப்பார்கள். உண்மையில் புளூட்டோவுக்கு அப்பால்தான் சூரியக் குடும்பத்தின் பெரும்பான்மைப் பரப்பு விரிந்திருக்கிறது. புளூட்டோ அமைந்திருக்கும் பிராந்தியத்தை கைப்பர் பட்டை என்பார்கள். அதையும் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தால் சூரியக் குடும்பத்தில் விளிம்பாக ஓர்ட் திரள் இருக்கும். விளிம்பு என்று ஒரு பேச்சுக்குத்தான் சொல்ல முடியுமே தவிர அந்த விளிம்பே அவ்வளவு பிரம்மாண்டமானது.

ஓர்ட் திரளின் உள்விளிம்பு சூரியனிலிருந்து 50,000 வா.அ. (காண்க பெட்டி) தொலைவிலும் வெளிவிளிம்பு 2,00,000 வா.அ. தொலைவிலும் அமைந்திருக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் சூரியனிலிருந்து புளூட்டோ வரையிலான தொலைவு என்பது சூரியனிலிருந்து ஓர்ட் திரள் வரையிலான தொலைவில் ஐம்பதாயிரத்தில் ஒரு பங்குதான்.

சூரியன், கோள்கள், குறுங்கோள்கள், நிலவுகள், விண்கற்கள் உள்ளிட்ட சூரியக் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை கோடிக் கணக்கில் இருக்கும். ஆனால், சூரியக் குடும்பத்தில் இந்த விண்பொருட்கள் ஆக்கிரமித்திருக்கும் இடம் என்பது ஒரு லட்சம் கோடியில் ஒரு பங்குதான். இவ்வளவு பரந்து விரிந்த நம் சூரியக் குடும்பத்தில் மனிதர்கள் பயணித்ததிலேயே அதிகபட்சத் தொலைவு 4,00,171 கி.மீ.தான். 1970-ல் நாசாவின் அப்பல்லோ 13 மிஷன் விண்கலத்தில் பயணித்த விண்வெளி வீரர்கள் நிலவின் மறு பக்கத்தைச் சுற்றியபோது படைத்த அந்த சாதனை இன்னமும் முற.

மனிதர்கள் உருவாக்கியதிலேயே மிக அதிக தொலைவு பயணித்த பொருள் என்றால் அது வாயேஜர்-1 விண்கலம்தான். 1977, செப்டம்பர் 5 அன்று செலுத்தப்பட்ட அந்த விண்கலம் 2,020 கோடி கி.மீ. தொலைவைத் தாண்டி இன்னும் பயணித்துக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் உருவாக்கிய கலங்களின் உச்சபட்ச வேகங்களுள் வாயேஜரின் வேகமும் ஒன்று. மணிக்கு 62,140 கி.மீ. வேகம்! இந்த வேகத்தில் பயணித்தாலும் ஓர்ட் திரளை அது சென்றடைவதற்கு இன்னும் 300 ஆண்டுகள் ஆகும் என்றும் அதைக் கடப்பதற்கு 30,000 ஆண்டுகள் ஆகும் என்றும் நாஸாவின் கணக்கு சொல்கிறது.

நம் குடும்பம் எவ்வளவு பெரியது என்று இப்போது தெரிகிறதா? என்ன, குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் இடையே அவ்வளவு தூரம்! ஓர்ட் திரளிலிருந்து சூரியனை நம்மால் பார்க்க முயன்றால் மிகவும் பலவீனமான, நுண்ணிய ஒளிப்புள்ளியாய் அது தெரியும். ஆனால், அந்த ஒளிப்புள்ளியின் சக்தி ஓர்ட் திரள்வரை இழுத்துப்பிடித்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய வியப்பு!

எவ்வளவு தூரம்?

வானியலைப் பொறுத்தவரை தூரங்களை அளவிட ஒளியாண்டு (9,46,073,04,72,580.8 கி.மீ.), வானியல் அலகு (Astronomical unit) ஆகியவற்றையே பயன்படுத்துகிறார்கள். சூரியனின் மையத்துக்கும் பூமியின் மையத்துக்கும் இடைப்பட்ட தொலைவான 14.96 கோடி கிலோ மீட்டர்தான் ஒரு வானியல் அலகு (தமிழில் சுருக்கமாக ‘வா.அ.’ என்று குறிப்பிடுவோம்). சூரியனுக்கும் சூரிய குடும்பத்தின் பிற உறுப்பினர்களுக்கும் இடையிலான தொலைவின் சிறு பட்டியல்:

சூரியனிலிருந்து புதன் 0.39 = வா.அ. (5,79,10,000 கி.மீ.)

வெள்ளி = 0.723 வா.அ. (10,82,00,000 கி.மீ.)

செவ்வாய் = 1.524 வா.அ. (22,79,40,000 கி.மீ.)

வியாழன் = 5.203 வா.அ. (77,83,30,000 கி.மீ.)

சனி = 9.523 வா.அ. (142,46,00,000 கி.மீ.)

யுரேனஸ் = 19.208 வா.அ. (287,35,50,000 கி.மீ.)

நெப்டியூன் = 30.087 வா.அ. (450,10,00,000 கி.மீ.)

புளூட்டோ = 39.746 வா.அ. (594,59,00,000 கி.மீ.)

கைப்பர் பட்டை = 30 வா.அ. 50 வா.அ.

ஓர்ட் திரள் = 50,000 வா.அ. 2,00,000 வா.அ.

(அடுத்த வாரம்: பால்வீதி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்