வடகிழக்கு மாநிலங்கள் - மேகங்களின் ஆலயமாய் மேகாலயா

By வீ.பா.கணேசன்

இந்தியாவிலேயே அதிகமான மழைப் பொழிவைச் சந்திக்கும் மேகாலயா மாநிலம் ‘கிழக்கின் ஸ்காட்லாந்து’ என அழைக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் இந்தியாவிலேயே அதிகமான மழை பொழியும் சிரபுஞ்சி இங்குதான் உள்ளது. இந்த மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்தான் விடுதலைக்கு முன்புவரை அசாமின் தலைநகராக இருந்தது.

மாநிலத்தின் பெரும்பகுதி மலைப் பகுதிகளாகவும், சுமார் 70 சதவீதப் பரப்பு காடுகளாகவும் இருக்கும் இம்மாநிலத்தில் ஜயிந்தியா, காரோ, காஸி ஆகிய பழங்குடி இனக் குழுக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் காஸி மலைப் பகுதிகள், ஜயிந்தியா மலைப் பகுதிகள், காரோ மலைப் பகுதிகள் இப்போது சுயாட்சிப் பகுதிகளாகச் செயல்பட்டு வருகின்றன.

இன்றும் தாய்வழிச் சமூகம்

1960-ல் அசாமில் கொண்டுவரப்பட்ட அசாம் மொழியை அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கும் சட்டம்தான் முதலில் இப்பகுதி மக்களைத் தன்னாட்சிக்காகக் குரல் எழுப்ப வைத்தது. முதலில் அசாமில் இந்த இனக்குழுக்கள் பெரும்பான்மையாக இருந்த மாவட்டங்கள் தன்னாட்சிப் பிரிவுகளாக உருவாகி, பின்னர் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலான துணைநிலை மாநிலமாக மாறி, 1972-ம் ஆண்டில் தனி மாநிலமாக உருவெடுத்தது. எனினும் இனக் குழுக்களுக்கான தன்னாட்சி பகுதிகள் இன்றும் தொடர்கின்றன.

மேகாலயாவின் முக்கிய இனங்களான ஜயிந்தியா, காரோ, காஸி ஆகியவை இன்றுவரை தாய்வழி சமூகத்தைப் பின்பற்றுபவை என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தின் இளைய மகளே வாரிசாகக் கருதப்படுகிறார். பெண்களே பிறக்காத குடும்பங்கள் வேறு குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணைத் தத்தெடுத்து வாரிசாக நியமிக்கின்றன. அதன் பிறகு அந்தப் பெண் புதிய வீட்டிலேயே வாழத் தொடங்குகிறார்.

எங்கே செல்லும் பாதை?

இவர்கள் காடுகளில் உள்ள குறிப்பிட்ட மரத்தைத் தங்கள் மூதாதையர்களாக வணங்குவதோடு, அதைச் சுற்றியுள்ள மரம், செடி, கொடிகளைக்கூட வெட்டுவதில்லை. இவ்வாறு தெய்வமாக வணங்கப்படும் மரங்களைச் சுற்றிக் காடுகள் வளர்கின்றன. இதுவே இந்த மாநிலம் இன்றுவரை பசுமை பூத்துக் குலுங்கவும், நாட்டின் மற்ற பகுதிகளைவிட அதிகமான மழைப் பொழிவைப் பெறவும் காரணமாக அமைகிறது.

முன்பு அசாமின் தலைநகராக இருந்ததால், ஓரளவுக்கு போக்குவரத்து வசதிகளோடு ஷில்லாங் இருக்கிறது. அதே நேரத்தில் மாநிலத்தின் இதர பகுதிகளில் சாலை வசதிகள் இன்னமும் மேம்படவில்லை. மாநிலத்தின் மொத்தப் பரப்பளவைக் கணக்கில் எடுக்கும்போது 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 100 சதுர கிலோமீட்டருக்கு 41.69 கிலோமீட்டர் மட்டுமே சாலை வசதிகள் உள்ளன. மெண்டிபதார் என்ற இடத்திலிருந்து அசாமின் தலைநகரான குவாஹாட்டிக்கு ரயில் போக்குவரத்து 2014 நவம்பர் 30-ம் தேதியன்றுதான் தொடங்கியது என்பதிலிருந்தே இந்த வளர்ச்சியின் போக்கைப் புரிந்துகொள்ள முடியும்.

முதன்முதலில் அரிசி சாகுபடி

அசாமின் குவாஹாட்டியிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஷில்லாங் வரையிலான சாலைகள் இப்போது எண்ணற்ற பூங்காக்களால் நிரம்பியுள்ளன. மாநிலத்தில் ஓடும் பல ஆறுகளிலிருந்து 1400-1520 மெகாவாட் நீர் மின்சார உற்பத்திக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

மேகாலயாவின் இயற்கை வளங்களில் ஒன்றாகச் சுமார் 500-க்கும் மேற்பட்ட கற்பாறைகளாலும், சுண்ணாம்புப் பாறைகளாலும் ஆன குகைகள் மாநிலம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. இந்தியத் துணைக்கண்டத்திலேயே மிக நீளமான, மிக ஆழமான குகைகள் இங்கேதான் உள்ளன. இப்போது மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சி நிபுணர்கள் இந்தக் குகைகளை ஆய்வு செய்ய வருகின்றனர்.

இந்தப் பகுதியில் புதிய கற்காலத்திலிருந்தே மக்கள் வாழ்ந்துவந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இக்காலத்தில் தோன்றிய ஜூம் முறையிலான விவசாயம் இன்றுவரை தொடர்கிறது. (இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்). இந்தியாவில் அரிசியைப் பயிரிட்டுப் பயன்படுத்தத் தொடங்கிய முன்னோடிகளாக இப்பகுதி மக்கள் இருந்தனர் என்று சர்வதேச அரிசி நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆட்டம் காணும் அரசுகள்

மேகாலயா தனி மாநிலமாக 1972-ல் உருவான பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் சராசரியாக அதிகபட்சம் 18 மாதங்கள் மட்டுமே நீடித்துவந்துள்ளன. இத்தகைய நிலைத்தன்மை இல்லாத நிலை மாநிலத்தின் வளர்ச்சியை பெரிதும் பாதித்தது. எனினும் 2008-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 5 ஆண்டுகள் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற மக்களவைத் தலைவராக இருந்த பி.ஏ. சங்மாவும் அவரது மகன் முகுல் சங்மாவும் இந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தவர்கள்.

ஏனைய வடகிழக்கு மாநிலங்களைப் போலவே இந்த மாநிலமும் வங்கதேசத்திலிருந்து குடியேறுபவர்களின் பிரச்சினையைச் சந்தித்துவருகிறது. குறிப்பாக இந்த மாநிலப் பழங்குடி இனத்தவருக்கும் குடியேறிகளுக்கும் இடையிலான மோதல்கள் மட்டுமே இங்கு வன்முறை நிகழ்வுகளாக உள்ளன. எனினும் சமீபத்தில் கிறிஸ்தவ அமைப்புகளும் இதர பழங்குடி அமைப்புகளும் இந்த நிலையில் ஓரளவு மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதால் வடகிழக்கில் பெருமளவு அமைதி தவழும் மாநிலமாக மேகாலயாவைக் குறிப்பிடலாம்.

நிலமும் மக்களும்

# 22,429 சதுர கிலோமீட்டர் பரப்பளவு.

# 32,11,000 பேர் மக்கள் தொகை.

# மாநில மக்களில் 75 சதவீதம் பேர் கிறித்து வர்கள். இந்தியாவில் கிறித்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள மூன்று மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும்.

# ஆங்கிலமும், காஸி, காரோ ஆகியவை மாநிலத்தின் அதிகார பூர்வ மொழிகள்.

# இவர்கள் காடுகளில் உள்ள குறிப்பிட்ட மரத்தை தங்கள் மூதாதையர்களாக வணங்குவதோடு, அதை சுற்றியுள்ள மரம், செடி, கொடிகளைக்கூட வெட்டுவதில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்