எவ்வளவு பெருசு! - நீண்ட, நெடிய வீதி!

By ஆசை

மனிதர்களின் ‘தொலைநோக்கி’ப் பார்வையால் உற்று நோக்கப்படக்கூடிய பிரபஞ்சத்தின் அளவு சுமார் 9,300 கோடி ஒளியாண்டுகள் குறுக்களவு கொண்டது. இது நமது ‘தொலைநோக்கி’ப் பார்வையின் எல்லைதான். அதைத் தாண்டியும் விரிந்திருக்கும் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதை இன்னும் சரியாக அனுமானிக்க முடியவில்லை. இவ்வளவு பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் நம் சூரியக் குடும்பம் இருக்கும் பால்வீதி மண்டலம் (Milky Way Galaxy) என்பது பூமியில் நாம் இருக்கும் தெருவைப் போன்றதுதான். இன்னும் சொல்லப்போனால் நம் தெருவின் சிறு சந்துதான்.

சிறிய விண்மீன்தான் சூரியன்

பிரபஞ்சம் தோன்றி சுமார் 1,370 கோடி ஆண்டுகள் ஆகின்றன; இதில் பால்வீதி தோன்றி சுமார் 1,320 ஆண்டுகளும் பூமி தோன்றி சுமார் 450 கோடி ஆண்டுகளும் ஆகின்றன. இதில் மனித இனம் தோன்றி சுமார் 2 லட்சம் ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால், கி.பி. 1920 வரை இந்தப் பிரபஞ்சத்தில் நாம் அறிந்திருந்த ஒரே விண்மீன் மண்டலம் (Galaxy) பால்வீதி மண்டலம்தான். வானியல் மேதை எட்வர்டு ஹப்பிளின் அனுமானங்களைக் கொண்டுதான் பால்வீதியைத் தவிரவும் மற்ற விண்மீன் மண்டலங்கள் இருக்கின்றன என்பது ஆதாரபூர்வமாக நமக்குத் தெரிய வந்தது.

ஏதோ சில விண்மீன் மண்டலங்கள் மட்டும் அல்ல; இன்றைய மதிப்பீட்டில் பிரபஞ்சத்தில் சுமார் 20,000 கோடி விண்மீண் மண்டலங்கள்வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. நமது பால்வீதி பற்றி நாம் கொண்டிருக்கும் பெருமிதம் இதையெல்லாம் பார்க்கும்போது பொசுக்கென்று ஆகிவிடுகிறதல்லவா!

அவசரப்பட வேண்டாம்! பிரபஞ்சத்தில் நம் பால்வீதி நடுத்தர அளவிலான ஒரு விண்மீண் மண்டலம் என்றாலும் இதில் மட்டும் 10,000 கோடியிலிருந்து 40,000 கோடி வரை விண்மீன்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவற்றில் ஒரு சிறிய விண்மீன்தான் நம் குடும்பத் தலைவர் சூரியன்.

நடுவில் ராட்சசக் கருந்துளை

பால்வீதியின் குறுக்களவு சுமார் ஒரு லட்சம் ஒளியாண்டுகள் இருக்கலாம் என்று நாஸா சொல்கிறது. நடுவில் நீள்செவ்வக வடிவத்தைக் கொண்டிருக்கும் சுருள் வடிவ விண்மீண் மண்டலம்தான் பால்வீதி. பெரும்பாலான விண்மீன் மண்டலங்களைப் போலவே பால்வீதியின் நடுவிலும் ராட்சசக் கருந்துளை ஒன்று இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த ராட்சசக் கருந்துளையின் குறுக்களவு சுமார் 2.25 கோடி கி.மீ. பால்வீதியின் மையத்திலிருந்து சுமார் 25,000 ஒளியாண்டுகள் தொலைவிலும் பால்வீதியின் விளிம்பிலிருந்து சுமார் 25,000 ஒளியாண்டுகள் தொலைவிலும் நமது சூரியக் குடும்பம் அமைந்திருக்கிறது.

இவ்வளவு விண்மீன்களையும் சூரியக் குடும்பம் போன்ற குடும்பங்களையும் கொண்டிருந்தாலும் அவையெல்லாம் பால்வீதியின் மொத்த நிறையில் 10% மட்டுமே. பால்வீதியின் 90% நிறை கரும்பொருள் (Dark matter) என்றழைக்கப்படும் புதிரான ஒரு சக்தியுடையதுதான்.

இவ்வளவு பெரிய பால்வீதியில் நாம் மட்டும் தனியாக இருக்கிறோமா என்ற கேள்வி நமக்கு எழலாம். அமெரிக்க வானியலாளர் ஃப்ராங்க் டிரேக் ஒரு கணக்கு போட்டுப் பார்த்தார். நமது பால்வீதியில் மட்டும் கோடிக் கணக்கான கிரகங்களில் உயிரினங்கள், அதுவும் நமது பூமியில் இருப்பதைப் போல அறிவு வளர்ச்சி பெற்ற உயிர்ச் சமூகங்கள், இருக்கலாம் என்று அவரது கணக்கு சொல்கிறது.

முட்டிக்கொள்ளப்போகிறோம்

அசையாத பொருள் என்று இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும் அப்படியே இருப்பதில்லை. எல்லாமே பயணித்துக்கொண்டும், மாற்றம் அடைந்துகொண்டும்தான் இருக்கின்றன. பால்வீதியும் அப்படியே. ‘பிரபஞ்ச நுண்ணலைப் பின்னணி’ (Cosmic Microwave Background) என்ற பெருவெடிப்பின் கதிரியக்க எச்சத்தோடு ஒப்பிட்டே பிரபஞ்சத்தின் உறுப்பினர்களின் வேகம் கணிக்கப்படுகிறது. அந்தக் கணக்கில் பார்த்தால் நமது பால்வீதி ஒரு மணி நேரத்துக்கு 22 லட்சம் கி.மீ. என்ற வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இதே வேகத்தில் போகும் நமது பால்வீதி, வருங்காலத்தில் ஆந்த்ரோமீடா விண்மீண் மண்டலத்தோடு போய் முட்டிக்கொள்ளும். அச்சம் தேவையில்லை அதற்கு இன்னும் கிட்டத்தட்ட 400 கோடி ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் நாம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதை அடுத்த வாரம் பார்த்துவிடலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்