சேதி தெரியுமா? - பிசிசிஐ புதிய தலைவர்!

By மிது கார்த்தி

மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா

மீண்டும் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா மே 23 அன்று பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றார்கள். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த விழாவில், ஆளுநர் ரோசைய்யா ஜெயலலிதாவுக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அமைச்சர்கள் இரு குழுக்களாகப் பதவியேற்றுக்கொண்டார்கள்.

தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்பது இது ஆறாவது முறையாகும். ஏற்கெனவே அவர் 1991, 2001, 2002, 2011, 2015-ம் ஆண்டுகளில் முதல்வராகப் பொறுப்பேற்றார். முதல்வரானவுடன் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி டாஸ்மாக் நேரம் குறைப்பு, 100 யூனிட் இலவச மின்சாரம் உள்பட 5 கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்

தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகத் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மே 24 அன்று தேர்வு செய்யப்பட்டார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. அதற்கு அடுத்தபடியாகத் திமுக 89 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்படி தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து திமுகவுக்குக் கிடைத்தது.

சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராகத் துரைமுருகனும், கொறடாவாகச் சக்கரபாணியும், துணைக்கொறடாவாக பிச்சாண்டியும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

புதுவை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடியை நியமிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மே 22 அன்று உத்தரவிட்டார். முந்தைய ஆளுநர் கட்டாரியா 22 மாதங்களுக்கு முன்பு ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதன்பிறகு அந்தமான் நிகோபார் துணை நிலை ஆளுநர் ஏ.கே.சிங். புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் கூதலாகக் கவனித்து வந்தார்.

புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், புதிய துணை நிலை ஆளுநகராக கிரண்பேடியை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி அந்தப் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே குழுவுடன் இணைந்து செயல்பட்டார். பின்னர் பா.ஜ.க.வில் இணைந்து டெல்லி மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கி தோல்வியைத் தழுவினார்.

பிசிசிஐ புதிய தலைவர்!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக அனுராக் தாக்கூர் மே 22 அன்று தேர்வு செய்யப்பட்டார். பிசிசிஐ தலைவராக இருந்த சஷாங் மனோகர் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். இதனால் பிசிசிஐ தலைவர் பதவி காலியானது. புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான சிறப்புப் பொதுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய தலைவராக அனுராக் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார். இவர் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். வாரியத்தின் செயலாளராக அஜய் ஷிர்கே தேர்வானார்.

வெற்றிகரமான மறு பயன்பாட்டு விண்கலம்

பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுவது ராக்கெட். ஆனால் அது ஒரே ஒரு முறைதான் பயன்படுத்த முடியும். இதற்கு மாற்றாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ரீயூசபிள் லாஞ்சிங் வெஹிகிள்- டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர்’ (ஆர்எல்வி- டிடி- RLV-TD HEX-01) என்னும் புதிய மறு பயன்பாட்டு விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்து 23 மே அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினர்.

முற்றிலுமாக இந்திய தொழில்நுட்பத்தில் 95 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விண்கலம் 6.5 மீட்டர் நீளமும், 1.75 டன் எடையும் கொண்டதாகும். பொதுவாக விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது உராய்வினால் ஏற்படும் வெப்பத்தைத் தாங்க இதன் வெளிப்புறத்தில் சிறப்பு ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளது.

முதல்வர்கள் பதவியேற்பு

அஸ்ஸாம் மாநில முதல்வராக சர்வானந்த சோனோவால், மே 24 அன்று பதவியேற்றார். அவருடன் 10 அமைச்சர்களும் பதவியேற்றனர். அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டியில் நடைபெற்ற விழாவில் மாநில ஆளுநர் பத்மநாப பாலகிருஷ்ண ஆச்சார்யா, சோனோவாலுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சோனோவால் அஸ்ஸாமின் 14-வது முதல்வர் ஆவார். அஸ்ஸாமில் பாஜக ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை ஆகும்.

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக 2-வது முறை பதவியேற்றார் மம்தா பானர்ஜி. கொல்கதாவில் அவருக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். மம்தாவுடன் 42 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில் கொல்கத்தா மேயர் சோவன் சாட்டர்ஜி, கிரிக்கெட் வீராங்கனை லட்சுமி ரத்தன் சுக்லா, பாடகி இந்திராநில் சென் உள்ளிட்ட 18 பேர் புதிய முகங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்