கண்ணகி நகர் 2 அடுக்கு மீன் மார்க்கெட் ரோட் கேட்டது யாருப்பா? இங்க இறங்கிக்க..” என்றார் கண்டக்டர்.
“பெரிய பெரிய கல்விச் சாலைகளை எல்லாம் பார்த்திருப்பீங்க, சாலையில் கல்வியைப் பார்த்திருக்கீங்களா?” என்ற நண்பர் ஒருவரின் கேள்விதான் அந்த இடத்தைத் தேடிப் போகவைத்தது.
தெருவில் உதிக்கும் ஆசிரியர்கள்
கண்ணகி நகரின் ஒன்பதாவது முதன்மை தெருவை ஒட்டியிருக்கும் நடைபாதை அது. மாலை 5 மணிக்கு தார்ப்பாய் விரிக்கப்படுகிறது. 5.15-க்கெல்லாம் மழலையர் வகுப்பில் படிக்கும் குழந்தைகள் முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை படிப்பவர்கள் வரை, ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கூடுகின்றனர். பள்ளியில் அன்றைக்கு செய்யச் சொன்ன வீட்டுப் பாடத்தை முதலில் முடித்த பின், புதிய பாடங்கள் சொல்லித்தரப்படுகின்றன.
சொல்லித்தருபவர்களும் இந்த இடத்திலேயே படித்து, பள்ளிப் படிப்பை முடித்து, தற்போது கல்லூரியில் படிப்பவர்கள்தான். மாணவர்களையே ஆசிரியர்களாக்கும் இந்த முயற்சியை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது வாசுதேவன், உமா மகேஸ்வரி தம்பதியர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள்.
ஆட்டோவோடு புரண்ட வாழ்க்கை
சென்னையை அழகுபடுத்துகிறோம் என்ற பேரில், கூவம் நதியோர வாசிகளை அவர்களின் வாழ்விடத்திலிருந்து அகற்றி, நகரத்துக்கு ஒதுக்குப்புறத்தில் அரசு உருவாக்கியதுதான் ஒக்கியம் துரைப்பாக்கத்துக்கு அடுத்துள்ள கண்ணகி நகர். வீட்டில் இருவருமே வேலைக்குப் போனால்தான் இரண்டு வேளை சாப்பாட்டுக்காவது உத்தரவாதம் என்கிற நிலை. விடியற்காலை கணவன் மனைவி கூலி வேலை, வீட்டு வேலை, கட்டிட வேலை என கிளம்பிவிடுவார்கள். இதனால், குழந்தைகளைப் படிக்கவைப்பதற்கு யாருமே இருக்க மாட்டார்கள்.
இப்படித்தான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, கண்ணகி நகரின் 9-வது முதன்மை சாலையும் இருந்தது. இங்கு இரண்டு ஆட்டோக்களுக்குச் சொந்தக்காரராக இருந்தார் வாசுதேவன். ஒரு விபத்தில் ஆட்டோ தலைகீழாகக் கவிழ, வாழ்க்கையும் தலைகீழானது. கால்களில் பட்ட காயத்துக்கு மருத்துவ சிகிச்சையுடன் மூன்று குழந்தைகளுக்கான படிப்புச் செலவைச் சமாளிக்க முடியவில்லை.
“பள்ளிக் கட்டணத்தைக் கட்ட முடியாமல்போக, தனியார் பள்ளியிலிருந்து எங்களுடைய பிள்ளைகள் வெளியேற்றப்பட்டார்கள். மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்தோம். ஆனால், டியூஷன் ஃபீஸ்கூட கட்ட முடியாத நிலையில் இருந்ததால், இந்தப் பகுதியில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் இலவச இரவுப் பாடசாலையைத் தொடங்கலாமே எனத் தோன்றியது. பலரும் குடித்துவிட்டு உருண்டு புரளும் இடமாக இருந்த இடத்தைச் சுத்தப்படுத்தி, பாபாசாஹேப் அம்பேத்கர் இலவச இரவுப் பாடசாலையைத் தொடங்கினோம். இப்போது வாடகை ஆட்டோதான் ஓட்டுகிறார் என்னுடைய புருஷன்” என்னும் உமா மகேஸ்வரி, 6-ம் வகுப்புவரை மட்டுமே படித்தவர்.
வானமே கூரையாய்
“தொடக்கத்தில் பல எதிர்ப்புகள் கிளம்பினாலும், நாளடைவில் எங்களுக்குச் சிலர் உதவினர். கடந்த ஐந்து ஆண்டுகளாக கூரைகூட இல்லாமல்தான் இங்கு கற்றுத்தருகிறோம். தற்போது கூரை அமைத்துத் தருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. படிக்கும் வேளையில் குழந்தைகளுக்கு இங்கு வசிப்பவர்களே பிஸ்கெட், பன் போன்றவற்றை வாங்கித்தருவார்கள். ஒரு சில தன்னார்வலர்கள் வாரத்துக்கு மூன்று நாள் வந்து சொல்லிக்கொடுத்துவிட்டுச் செல்வார்கள். ஆனால், யார் வந்தாலும் வராவிட்டாலும், ரேவதி, ராஜேஸ்வரி, சந்தியா, கவிதா, அலமேலு, பார்த்திபன், மணிமாறன் ஆகியோர் எங்களின் நிரந்தர மாணவ ஆசிரியர்கள். அவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூபாய் 1,500 கொடுப்பதற்கே எங்களுக்குப் பெரிய போராட்டமாகத்தான் இருக்கும்” என்கிறார் வாசுதேவன்.
ஒளிமயமான எதிர்காலம்
இந்த வீதியோரப் பாடசாலை சமூக மாற்றங்களுக்கும் வித்திட்டிருக்கிறது. இங்கு தொடர்ந்து கல்வி கற்பிக்கப்பட்டதால் குழந்தைத் திருமணத்திலிருந்து சில பெண்கள் தப்பித்திருக்கிறார்கள் என்கின்றனர் இங்கு தொடக்கத்திலிருந்து படித்து, தற்போது மாநிலக் கல்லூரியில் படித்துவரும் ரேவதியும் ராஜேஸ்வரியும். அதேபோல “அம்பேத்கர் இரவு பாடசாலையைப் பற்றிக் கேள்விப்பட்டு, பல கல்லூரிகள், நிறுவனங்களிலிருந்தும் இந்த இடத்தை வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்” என்றார் இந்தப் பகுதியிலிருந்து ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பாண்டியன்.
“கணக்கில் எட்டு மார்க் மட்டுமே எடுத்த ஒரு பையனை பள்ளி இறுதித்தேர்வில் 80 சதவீதம் மார்க் எடுக்கவைத்தோம். இதைப் பார்த்த வசதி படைத்த பலரும் பணம் கொடுத்து இங்கே டியூஷன் சேர்ப்பதற்கு முன்வந்தனர். இது வசதி இல்லாதவர்கள் படிப்பதற்கான இடம் என்று கூறிவிட்டோம். பாடசாலையைத் தொடங்கியதிலிருந்து இந்த இடத்தை இலவசமாகச் சுத்தப்படுத்திவரும் செல்வி, பாளையம் இப்படி நிறைய பேரின் எதிர்பார்ப்பில்லாத உதவிகள்தான் எங்களுக்கு உரமாக இருக்கின்றன” என்றார் நெகிழ்ச்சியுடன் உமா மகேஸ்வரி.
தொடர்புக்கு: 86789 57785, 72990 95646.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago