உடல் நலத்தைப் பாதிக்கும் தீய பழக்க வழக்கங்கள் இன்று குழந்தைகளை மிக எளிதில் ஆட்கொண்டுவிடுகின்றன. அதன் விளைவுகள் சமூகத்தையே தலை குனியவைத்துவிடும் அபாயம் மிக்கவை. - அமர்த்திய சென்
புத்தாண்டுக்கு மது கிடைக்காது!
ஒரு மாணவரின் பெருவாரியான நேரம் பள்ளிக்கூடத்தில்தான் கழிகிறது. ஆனால், பள்ளிக் கல்வி அவர்களுடைய வாழ்வில் நேரடியாகத் தலையிடுவது கிடையாது. பாடங்களும் குழந்தைகளை விட்டுத் தள்ளியே நிற்கின்றன. பன்மைத்தன்மை கொண்ட இந்தியாவில், பொதுக் கல்வி இப்படி இருப்பதே நல்லது எனலாம். ஆனால், சமூகத்தைப் பீடித்துள்ள பல தீய பழக்க வழக்கங்களின் விதை பள்ளிப் பருவத்தில் களையாக விதையூன்றிப் புற்றுநோயாக வெளியே தெரியாமல் வளர்வதைக் காண்கின்றோம். மதுக் கடைகளை மொத்தமாக மூடுவது இருக்கட்டும். காந்தி ஜெயந்திக்கும், வள்ளலார் தினத்துக்கும் மதுக்கடைகளை மூடுவதைவிட ஆங்கிலப் புத்தாண்டு தினத்திலும் பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடியும் தினத்திலும் வலுக்கட்டாயமாக மூடினால் பல முதல் நாள் ‘குடியாளர்களை’த் தவிர்க்கலாம்!
“உங்கள் வீட்டில் புகைப்பழக்கத்துக்கு ஆளானவர்கள் உள்ளனரா?”, “உங்கள் வசிப்பிடம் அருகே மதுபானக் கடை உள்ளதா?” என நேரடியாகக் குழந்தைகளின் வாழ்வில் தலையிடுதல் கல்வியின் கடமை இல்லையா? அதை விடுத்து, ஒழுக்கம் எனும் பெயரில் சில பள்ளிகள் கடைப்பிடிக்கும் கெடுபிடிகள் அஃக்மார்க் சித்ரவதைகள். தேர்வுக்காக மட்டுமே நமது வகுப்பறைகள் வேலைபார்ப்பதே ஒருவிதத்தில் சமூகத்தைச் சீரழிவுப் பாதைக்கு இட்டுச்சென்றிருக்கிறது.
மத்தியச் சுகாதார அமைச்சகமும் சில அரசு சாரா அமைப்புகளும் சேர்ந்து தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் பள்ளி செல்லும் வளர் இளம் பருவத்தினரிடையே நடத்திய ஒரு ஆய்வின் முடிவு அதிரவைக்கிறது. முன்பெல்லாம் நகர்ப்புறக் குழந்தைகளிடம் மட்டுமே புகைபிடித்தல், குட்கா உள்ளிட்ட பழக்கங்கள் இருந்தன. ஆனால் இன்று கிராமப்புறங்களுக்கும் இது பரவிவிட்டது. போதைப் பழக்கச் சட்ட விரோதச் சந்தையின் வியாபார இலக்குகள் பள்ளிகளே. இதில் கிராமம், நகரம் வேறுபாடு இல்லை என்பதைப் புள்ளிவிவரங்களோடு சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு. இந்தச் சூழலை மீறி இத்தகைய விஷயங்களுக்கு எதிராகப் பள்ளியில் நாம் என்ன செய்ய முடியும் என்பதை எனக்குக் காட்டியவர் மாணவர் பாலாஜிதான்.
சுய சுகாதாரம் பேணுதல்
குழந்தைகள் பள்ளிகளில் மட்டுமே கற்பதில்லை. எப்படி உடை உடுத்த வேண்டும், எது ஸ்டைல், எது ஆளுமை எழுச்சி, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அவர்கள் பார்க்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் கற்கிறார்கள் என்பதை எடுத்துரைத்தவர் உளவியலாளர் ஹான்ஸ் எய்சங்க் (Hans Eysench). புகைபிடித்தல் போலச் சுகாதாரக் கேட்டை விளைவிக்கும் தீய பழக்கங்கள் சமூக நலக் கல்வியின் சீர்கேட்டால் வருவதே என அவர் அறிவித்தார்.
பள்ளி, வசிக்கும் தெரு இப்படித் தாங்கள் வாழும் சூழலில் யார் மதிப்பு மிக்கவர்கள் என நினைக்கிறார்களோ அவர்களுடைய நடை உடை பாவனைகளைப் பின்பற்றுவது குழந்தைகளின் இயல்பு. அவர்களைச் சுற்றி இயங்கும் உலகம் கடைப்பிடிக்கும் நல்லதும் கெட்டதும் சொல்லிக்கொடுக்காமலேயே அவர்களுடையது ஆகிவிடும். சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தொடங்கிப் பிரபல விஞ்ஞானிகள்வரை தாக்கம் செலுத்துவது இப்படித்தான் என ஹான்ஸ் எய்சங்க் விளக்குகிறார். பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகள் பழகிக்கொள்வதையும் சேர்த்து அவர் 27 பொதுக் காரணிகளை வரிசைப்படுத்தினார்.
ஹான்ஸ் எய்சங்கின் ஆய்வுகளை அடிப்படையாக வைத்து ‘சுய சுகாதாரம் பேணுதல்’ பாடம் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது. தீய பழக்க வழக்கங்கள், குழந்தைப் பருவத்தில் பாலியல் சார்ந்த பழக்க எல்லைகள் உட்பட அவர்கள் கலந்தாலோசித்துக் கற்க வேண்டிய பல அம்சங்கள் அந்தப் பாடத் திட்டத்தில் இடம்பெற்றன.
இத்தகைய தீய பழக்கத்துக்கும், கேடுகளுக்கும் ஆட்பட்டவர்களை விடுவிக்க ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டனர். மாணவர்களை வழிநடத்த ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சியும் வழங்கப்பட்டது. இவ்வகை ஆசிரியர்கள் ஆளுமை வளர்ச்சி வல்லுநர் (Personality Developers) என்று அழைக்கப்பட்டனர். இத்தகைய ஆசிரியர்கள் பாடமாக எதையும் நடத்த மாட்டார்கள். குழந்தைகளை உட்காரவைத்துப் பொது விஷயங்களைக் கலந்துரையாடுவார்கள். நமது சூழலில் அத்தகைய கல்வியின் சாத்தியத்தை எனக்கு விளங்கவைத்தவர் பாலாஜிதான்.
சமூக நலக் கல்வியை நிலைநாட்டிய மாணவர்
இதற்கு முன் நான் பணியாற்றிய பள்ளியில் நாட்டு நலப் பணி முகாமொன்றில் பதினோராம் வகுப்பு மாணவராக எனக்கு அறிமுகமானவர் பாலாஜி. பீடி, சிகரெட் பிடிப்பதன் சுகாதாரக் கேடு குறித்துக் கிராமப்புற மக்களுக்கு வித்தியாசமான செயல் விளக்கம் அளித்து எங்கள் யாவரையும் கவர்ந்திருந்தார். திறந்த வெளியில் அடுப்பை எரியவைத்து அதன்மீது மண்பானையை வைத்தார். அதில் கரி படிவதை எடுத்துக்காட்டி, புகைபிடித்தால் இதேபோல நம் நுரையீரலில் நிகோடின் எனும் புகை படியும். இறுதியாக நுரையீரல் சுருங்கி விரிவதை நிறுத்தும் என விளக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
ஆனால் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் சிலர் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த ஒரு சம்பவம் விரைவில் நடந்தது. பள்ளியில் பணிபுரிந்த நாலைந்து ஆசிரியர்களுக்குப் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. பள்ளியிலேயே மறைவான இடங்களிலிருந்து அடிக்கடி புகை கிளம்புவதைப் பார்த்திருக்கிறோம். ஒருநாள் காலை, ஆசிரியர் அறையின் சுவரில் பெரிய சார்ட் அட்டையில் ‘புகைபிடிப்பது உங்களுக்கு மட்டுமல்ல உடனிருப்பவர் யாவருக்கும் கேடு’ என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இதைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ந்தனர். கழிவறை, மரத்தடி, பள்ளி வளாகத்தில் சில மறைவிடங்கள் என எங்கெல்லாம் ஆசிரியர்கள் நின்று புகைத்தார்களோ அங்கெல்லாம் அதே மாதிரி ‘விழிப்புணர்வு’ போஸ்டர்!
யார் இதைச் செய்தது என்று தீவிரமாக அவர்கள் விசாரித்து மாணவர் பாலாஜியைப் பிடித்தார்கள். ஆசிரியர் அறையில் ஒரே அர்ச்சனை! தங்களை அவமானப்படுத்திவிட்டதாகத் தலைமை ஆசிரியர் வரை நெருக்கடி கொடுத்தார்கள். பாலாஜிக்கு ஆதரவாக சில ஆசிரியர்கள் தலையிட்டோம். ஒரு வழியாக அந்த ஆசிரியர்கள் (பள்ளி வளாகத்திலாவது) புகைபிடிப்பதை நிறுத்தினார்கள்! சமூக நலக் கல்வி எப்படிச் செயல்படும் என்பதை எனக்குக் காட்டிய பாலாஜி தற்போது மருத்துவராகி வேலூரில் பணிபுரிந்துவருகிறார்.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago