வேலையைக் காதலி!- குரங்கை நினைக்காமல் மருந்து குடிக்கலாம்

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

வரலாறு காணாத முக நூல் பகிர்வுகளும், இன்னும் வேண்டும் என்று கேட்ட கடிதங்களும் மீண்டும் பயங்கள், பதற்றங்கள் பற்றி எழுதத் தூண்டியது. இந்த வாரமும் ‘பய’ டெக்னாலஜி! (பயம் பற்றித் தொழில்நுட்பப் பாடம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம், சும்மா ஒரு பில்ட் அப் வார்த்தை!)

முதலில் ஒரு நம்பிக்கை வார்த்தை. எல்லாப் பயங்களையும் வென்றெடுக்கலாம். நம்பிக்கை, முயற்சி, வழிகாட்டல் இருந்தால் நிச்சயம் முடியும்.

இன்று மனித வளப் பயிற்சி, மன சிகிச்சை, நிர்வாகக் கல்வி, ஆலோசனை, சிறப்புரை என எல்லாத் தொழில் நடவடிக்கைகளுக்கும் ஆதாரம் பேச்சுதான். ஆனால் பள்ளியில் படித்தபோது எனக்குத் திக்கு வாய் பிரச்சினை இருந்தது என்றால் நம்புவீர்களா?

பிறகு மருத்துவ உளவியல் படிக்கும்போதுகூட மேடைகளில் பேச சிரமப்பட்டிருக்கிறேன். “எப்படியிருந்தாலும் நீ உன்னிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களிடம் தனிமையில் பேசப்போகிறாய்! மேடைப் பேச்சு கிடையாதே. அப்புறம் என்ன பயம்?” என்று தேற்றியிருக்கிறார் ஓர் ஆசிரியை. மேடைப் பேச்சுதான் என் வாழ்க்கை என நாங்கள் இருவரும் அப்போது அறிந்திருக்கவில்லை.

இன்றுவரை உலகமெங்கும் சென்று, 400 நிறுவனங்களுக்கு மேல் சுமார் 48,000 பேருக்குப் பயிற்சி அளித்த நான் ஒரு காலத்தில் பேசப் பயந்தவன் என்ற தகவலைச் சொல்வதன் காரணம்- உங்களாலும் முடியும் என்று சொல்லத்தான்.

நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்!

அடுத்து, முடிவைவிட முயற்சி முக்கியம். வெற்றியா தோல்வியா என்று பார்க்காதீர்கள். முயற்சி எடுங்கள். கண்டிப்பாக வெற்றி அடையும் இலக்குகளுக்காக மட்டும் தாம் முயல்வீர்கள் என்றால் புதிதாக எதையும் செய்ய முடியாது. அதனால் உங்களைப் பரீட்சித்துப் பார்க்க எல்லா வழிகளையும் ஆராயுங்கள்.

நேர்காணல் பயம் என்றால் அதை மட்டும் நினைக்காமல், எந்தெந்த இடங்களில் பேச வாய்ப்பிருக்கிறது என்று பார்த்து அங்கெல்லாம் முயலுங்கள். பெரிய பதவிகளில் உள்ள பலர் இன்றும் மைக் பிடிக்க நடுங்குவதை நான் பார்த்திருக்கிறேன். கீழே உட்காரும்போதுள்ள நகைச்சுவை உணர்வு மேடை ஏறினால் காணாமல் போய்விடும். அதனால் எங்கு பேசினாலும் இயல்பாகப் பேசும் மன நிலையைப் பெறப் பாருங்கள்.

திட்டமிடுதலும் ஒத்திகை பார்ப்பதும் நல்லதுதான். ஆனால் அது மட்டும் காப்பாற்றாது. பதற்றம் வருகையில் எல்லாம் மறந்து போகும். அதனால் இயல்பு நிலை கொள்வதுதான் இலக்கு. நிறைய நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனும்போது எல்லாம்தான் மறந்துபோகும். பதற்றமும் இயல்பு நிலையும் எதிர் உணர்வுகள். இரண்டில் ஒன்றுதான் இருக்க முடியும்.

பதற்றத்தைக் குறைக்க வேண்டும் எனும்போதே பதற்றம் பெருகும். காரணம் உங்கள் மனம் பதற்றத்தை நினைக்கையில் உங்கள் உடல் பதற்றத்திற்குத் தயாராகிறது. இது குரங்கை நினைக்காமல் மருந்து குடிக்கச் சொன்னது போல.

அதற்கு மாறாக, உங்களைத் தளர்வு நிலையில், இயல்பு நிலையில் வைத்திருக்கும் விஷயங்களுக்குத் தயாராகுங்கள். இதைப் பதற்றம் வரும்போது செய்ய முடியாது. பதற்றம் இல்லாத காலத்தில் பழக்கம் செய்யுங்கள்.

யோகா செய்யலாம், ரிலாக்சேஷன் பயிற்சிகள் செய்யலாம். உடல் சார்ந்த விளையாட்டுகள் உதவும். உங்களுக்குப் பிடித்த, நம்பிக்கையுள்ள எந்த வழியைப் பயன்படுத்தினாலும் சரி. இந்த இயல்பு நிலை நிச்சயம் பிடிபடும். இதுதான் சிக்கலான நேரத்தில் பதற்றத்தின் தீவிரத்தைக் குறைக்கும்.

எல்லா விளையாட்டு வீரர்களும் பதற்றமில்லாமல் பேட்டி கொடுப்பதற்குக் காரணம் அவர்கள் மேற்கொள்ளும் உடல் மற்றும் மனம் சார்ந்த பயிற்சிகள்.

ஒரு நிகழ்வுக்குத் தயார் செய்தல் என்பது அந்தக் காலையில் தொடங்கும் செயல் அல்ல. அது பல வாரங்கள், மாதங்கள் அல்லது வருடங்களுக்கு முன்னரே செய்ய வேண்டியது. அது அந்த நிகழ்வின் முக்கியத்தைப் பொறுத்தது. நேர்காணலில் பதற்றத்தைக் குறைப்பதற்கும் இந்தத் தங்க விதி பொருந்தும்.

நாளை நேர்காணல் என்றால் இன்று என்ன செய்ய என்று யோசிப்பது உதவாது. என் யோசனை: எல்லா மாணவர்களும் படிக்கும் காலத்திலேயே நேர்காணலுக்குத் தயாராக வேண்டும்.

சரி, நேர்காணல் நாளுக்குப் பயம் போக்கும் யோசனைகளே கிடையாதா?

உண்டு. இதோ:

முதலில் நேர்காணல் நேரத்திற்கு ஒரு மணி நேரமாவது முன்னதாகச் செல்லுங்கள். அந்த இடமும் சூழலும் பழகும். இது இயல்பு நிலையைக் கூட்டும்.

அங்கு வந்த மற்றவர்களுடன் பேசுங்கள். ஆனால் பயங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டாம். பொது விஷயங்கள் மட்டும் பேசுங்கள்.

நேர்காணலை உரையாடல் என்று எடுத்துக்கொள்ளுங்கள். உங்களைச் சோதிக்க அழைத் துள்ளார்கள் என்ற எண்ணம் போகும்.

தெரியவில்லை என்றால் தெரி யாது என்று கூனிக் குறுகாமல் சொல்லுங்கள். தெரிந்ததை ஆர்வமாகச் சொல்லுங்கள்.

மெலிதான நகைச்சுவை கை கொடுக்கும். அது உங்களையோ பிறரையோ தாழ்த்தாமல் இருத்தல் அவசியம்.

பதற்றத்தில் பதில் மறந்துவிட்டது என்றால் அதை அப்படியே சொல்லிவிட்டு பிற விஷயங்களைப் பேசுங்கள். கிளறாமல் விட்டால் மீண்டும் ஞாபகத்துக்கு வரும்.

கை நடுக்கம், குரல் உடைதல், வியர்வை போன்றவை உங்கள் பதற்றத்தைக் காட்டிக் கொடுக்கலாம். அதை வெளிக்காட்டுவது ஒரு குறையில்லை என்று எண்ணினால் அவை குறையும். தடுக்க நினைத்தால் அதிக நேரம் நீடிக்கும்.

நேர்காணல் செல்லும் முன் பிடித்த இசை, பிடித்த மனிதர், பிடித்த உணவு, பிடித்த புத்தகம், பிடித்த சட்டை எல்லாம் பிடித்ததாகத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

கிளம்பும் முன் உங்களுக்குச் சொல்லிக்கொள்ளுங்கள்: ‘என்னால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்யப் பார்க்கிறேன். இதை ஓர் அனுபவமாகக் கொள்கிறேன்!’

இனி என்ன? பயமில்லை. ஜெயம் உண்டு!

டாக்டர் ஆர். கார்த்திகேயன்- தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்