சேதி தெரியுமா? - ஆசிய சாம்பியன் இந்தியா!

By மிது கார்த்தி

ஆசிய சாம்பியன் இந்தியா!

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே மார்ச் 6 அன்று தாகாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 இறுதிப் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுக் கோப்பையை வென்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 15 ஓவர்களில் 121 ரன் என்ற இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை 7 பந்துகள் மீதம் இருக்கையில் இந்தியா எட்டியது. ஆசிய கோப்பையை இந்தியா வெல்வது இது 6-வது முறையாகும்.



பி.எஃப் பணத்துக்கு வரி இல்லை

பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக, ஊழியர் வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) எடுக்கும்போது வரி விதிக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு மார்ச் 8-ல் அறிவித்தது. மக்களவையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதை அறிவிப்பாக வெளியிட்டார். 2016 ஏப்ரல் 1-க்கு பிறகு பி.எப். நிதியில் சேரும் தொகையை ஊழியர்கள் எடுக்கும்போது, 60% தொகைக்கு வரிவிதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக 2016-17-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது அந்த திட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.



வடகொரியா எச்சரிக்கை

தென்கொரியா, அமெரிக்கா மீது அணுகுண்டுகளை வீசுவோம் என மார்ச் 8-ல் வடகொரியா எச்சரிக்கை விடுத்தது. வடகொரியா- தென் கொரியா எல்லைப் பகுதியில் அமெரிக்கா, தென்கொரிய ராணுவம் இணைந்து போர்ப் பயிற்சியைத் தொடங்கின. இதில் சுமார் 17 ஆயிரம் அமெரிக்க வீரர்களும், 3 லட்சம் தென்கொரிய வீரர்களும் பங்கேற்றனர். இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்தது. அந்நாடு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், “வடகொரியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுத்தால் இரு நாடுகள் மீதும் அணுஆயுதத் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம். அணுஆயுதங்களை ஏவினால் இரு நாடுகளும் சாம்பலாகிவிடும்” என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.



வெளிநாட்டில் விஜய் மல்லையா

வங்கிகளிடம் வாங்கிய சுமார் ரூ.9,000 கோடி கடன் நிலுவை விவகாரம் பெரிதாகக் கிளம்ப, விஜய் மல்லையா வெளிநாடு சென்றுவிட்டதாக மார்ச் 9 அன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. வங்கிகளிடம் கடன் வாங்கித் திருப்பித் தராத விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கக் கோரி மத்திய வங்கிகளின் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரொஹிண்டன் நாரிமன் ஆகியோர் விஜய் மல்லையா எங்கு இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு வங்கிகள் சார்பில் ஆஜரான அட்ர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி, மார்ச் 2-ம் தேதியன்றே நாட்டை விட்டு விஜய் மல்லையா கிளம்பி விட்டார் என்று தெரிவித்தார்.



தனியே தன்னந்தனியே...

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று மார்ச் 10 அன்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தல் மே 16 நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி சேர திமுக, பா.ஜ.க. மக்கள் நலக் கூட்டணி ஆகியவை விருப்பம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை விஜயகாந்த் வெளியிட்டார்.



ஆதார் மசோதா நிறைவேற்றம்

‘ஆதார் மசோதா 2016’ மக்களவையில் மார்ச் 11 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆதார் மூலம் தனிமனித உரிமை பாதிக்கப்படுவதாக எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “அரசு மானியத்தை முறைப்படுத்தவும் உண்மையான பயனாளிகளை அடையாளம் காணவும் இந்த மசோதா உதவும். இதன் மூலம் மானியச் செலவு குறையும். விரல்ரேகை பதிவு உள்ளிட்ட ஆதார் விவரங்களை சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இல்லாமல் யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டோம்” என்று தெரிவித்தார். இதையடுத்து மக்களவையில் ஆதார் மசோதா நிறைவேறியது.



கிரகணத்தால் சூழ்ந்த இருள்

முழு சூரிய கிரகணத் தாக்கத்தினால் மார்ச் 9, 2016 அன்று இந்தோனேசியாவின் சில பகுதிகள் இருளில் மூழ்கின. முழு சூரிய கிரகணம் புதன் காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை ஏற்பட்டது. இந்தச் சூரிய கிரகணத்தை உலகின் பல பகுதிகளிலும் மக்கள் கண்டுகளித்தனர். இந்தோனேசியாவின் சில பகுதிகள் 2 நிமிடங்களுக்கும் மேல் இருளில் மூழ்கியது. இந்தியாவின் பிற பகுதிகளில் பாதி சூரிய கிரகணத்தைக் காண முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்