சேதி தெரியுமா? - அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தமிழர்

By மிது கார்த்தி

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தின் ஸ்ரீ சீனிவாசன் நியமிக்கப்பட இருப்பதாக பிப்ரவரி 14 அன்று தகவல் வெளியானது. இந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டால் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார். இந்தியாவின் சண்டிகரில் பிறந்த ஸ்ரீ சீனிவாசனின் (48) பெற்றோர், 1960களில் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தனர். அமெரிக்காவிலேயே பட்டப்படிப்பை முடித்து கீழ்நீதிமன்றத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சீனிவாசன் தற்போது அந்நாட்டின் 2-வது பெரிய நீதிமன்றமான கொலம்பியா சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றிவருகிறார். அண்மையில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆன்டோனின் ஸ்காலியா உயிரிழந்ததை அடுத்து இந்தப் பதவிக்கு சீனிவாசனின் பெயர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.



மே.இ. தீவுகள் வசமானது உலகக் கோப்பை

மிர்பூரில் பிப்ரவரி 14 அன்று நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி முதன்முதலாகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. பிட்சை சரியாகக் கணித்து இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்துத் துல்லியமாக வீசி இந்திய அணியை 145 ரன்களுக்குச் சுருட்டியது அந்த அணி. இலக்கை விரட்டும்போது இந்திய அணி கொடுத்த கடும் நெருக்கடியை மன உறுதியுடன் எதிர்கொண்டு கடைசி ஓவரில் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனது.



எதிர்க்கட்சி அந்தஸ்து கோரிய மனு தள்ளுபடி

நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து அளிக்க உத்தரவிடுமாறு கோரும் பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 15 அன்று நிராகரித்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் மனுவைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 44 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு குறைந்தபட்சம் 10 சதவீத உறுப்பினர்கள், அதாவது 55 உறுப்பினர் இருக்க வேண்டும். இதைக் காரணம் காட்டி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க மறுத்துவிட்டார்.



சுத்தமான நகரம்: திருச்சிக்குப் பெருமை

இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக மைசூரு இடம் பிடித்தது. தமிழகத்தின் திருச்சி நகரம் 3-ம் இடத்தைப் பிடித்தது. மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவின் சுத்தமான நகரங்களின் பட்டியலை பிப்ரவரி 15 அன்று வெளியிட்டது. 2014-ம் ஆண்டைப் போலவே 2015-லும் மைசூரு முதலிடம் பிடித்தது. சண்டிகர், திருச்சி, டெல்லி மாநகராட்சி, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 73 நகரங்களை, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது.



பதக்கப் பட்டியலில் இந்தியா அபாரம்

அஸாமின் குவாஹாட்டி மற்றும் மேகாலயாவின் ஷில்லாங்கில் நடைபெற்ற 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் பிப்ரவரி 17 அன்று நிறைவுற்றன. இதில் இந்தியா 188 தங்கம் உட்பட 308 பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இலங்கை 25 தங்கம் உட்பட 186 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

பாகிஸ்தான் 12 தங்கம் உட்பட 106 பதக்கங்களுடன் 3-வது இடத்தைக் கைப்பற்றியது. தெற்காசிய விளையாட்டு போட்டிகள் பிப்ரவரி 5-ல் தொடங்கியது. சார்க் அமைப்பில் உள்ள இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்த 2,672 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.



அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய அரசுக்கு அனுமதி

அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய அரசு அமைக்க பிப்ரவரி 18-ல் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. சட்டப் பேரவையில் எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் தொடர்பான ஆவணங்களை ஆய்வுசெய்த நீதிபதிகள், குவாஹாட்டி உயர் நீதிமன்ற உத்தரவு திருப்தி அளிப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்த வழக்கை குவாஹாட்டி உயர் நீதிமன்ற அமர்வு இரண்டு வாரங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய அரசு அமைப்பதற்கான தடை நீங்கியது. பாஜகவுடன் இணைந்து காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புதிய அரசு அமைப்பார்கள் என்று தெரிகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவந்தது. காங்கிரஸ் கட்சியிலிருந்து 14 பேர் விலகினார்கள். இவர்களைத் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நபம் ரெபியா உத்தரவிட்டார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சபாநாயகரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்