கதை சொல்லும் பாடம்-2: தன்னை உணரும் தருணம்

By அரவிந்தன்

மயக்கும் மாலைப் பொழுது. அழகான ஆற்றங்கரையோரம். ஆற்றை ஒட்டி வாழும் வாத்துக் கூட்டத்தில் இருந்த அம்மா வாத்து, முட்டைகளிலிருந்து வாத்துக் குஞ்சுகள் வெளிவருவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

எல்லா முட்டைகளிலிருந்தும் குஞ்சுகள் வெளியே வந்துவிட்டன. ஒரே ஒரு முட்டை மட்டும் அப்படியே இருந்தது. அது கொஞ்சம் பெரிய முட்டை. நெடுநேரம் கழித்து அந்த முட்டையிலிருந்து குஞ்சு வெளிவந்தது.

அந்த வாத்துக் குஞ்சைப் பார்த்ததும் அம்மா வாத்துக்குப் பெரும் அதிர்ச்சி. அது பார்க்க அசிங்கமாக இருந்தது. மற்ற குழந்தைகளை அரவணைத்துக்கொண்டதைப் போல இந்த வாத்துக் குஞ்சை அம்மா அரவணைத்துக்கொள்ளவில்லை. மற்ற குட்டி வாத்துகளும் இதை வெறுத்து ஒதுக்கின.

ஒதுக்கப்பட்ட குட்டி வாத்து மிகுந்த வருத்தத்துடன் தனிமையில் வாடியது. அது எவ்வளவோ முயற்சி செய்தும் மற்ற வாத்துக்கள் அதைச் சீந்தவில்லை. அது நன்றாக நீந்தும். மற்றவர்களைவிட நன்றாகப் பறக்கவும் செய்யும். ஆனால், என்ன பிரயோஜனம், அது அசிங்கம் என்று எல்லா வாத்துக்களும் சொல்கின்றன.

“நான் அசிங்கம் புடிச்ச வாத்து” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்ட அந்தக் குட்டி வாத்து அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்றது.

புதிய இடத்தில் சேவல் போன்ற பறவைகளைச் சந்தித்தது. வேறு சில வாத்துக்களையும் அது பார்த்தது. ஆனால், அங்கும் இதே கதைதான். அசிங்கம் பிடித்த வாத்தை யாரும் மதிக்கவில்லை. தங்களோடு சேர்த்துக்கொள்ளவில்லை.

குட்டி வாத்து வெறுத்துப்போனது. வேறு இடம் தேடிச் சென்றது. ஒதுங்கி வாழ்ந்தது.

வசந்த காலம் வந்தது. மரங்கள் பூத்துக் குலுங்கின. குளங்களில் நீர் நிரம்பியது. அப்போது குட்டி வாத்து இருந்த குளத்தை நோக்கிச் சில அன்னப் பறவைகள் வந்தன. அழகான தோற்றம் கொண்ட அந்தப் பறவைகளைப் பார்த்ததும் இந்தக் குட்டி வாத்துக்குப் பிடித்துப்போனது. இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றியது.

அன்னப் பறவைகள் குளத்தில் நீந்தி விளையாடின. பிறகு புறப்பட்டுச் சென்றன. வாத்துக்கு ஏக்கமாக இருந்தது. அந்தப் பறவைகளுடனேயே பறந்து போய்விடலாமா என்று ஏங்கியது. ஆனால், அசிங்கம் பிடித்த தன்னை இந்தப் பறவைகள் மட்டும் எப்படிச் சேர்த்துக்கொள்ளும் என்ற தயக்கம் அதைத் தடுத்தது.

மழைக்காலம் வந்தது. தனிமையில் தவிக்கும் வாத்து மேலும் அதிகமாகக் கஷ்டப்பட்டது. அடுத்து குளிர்காலம். குளத்தைப் பனி மூடியது. துணைக்கு ஆளில்லாமல் குளிரில் விடைத்துக் கிடந்தது வாத்து. சரியாகச் சாப்பிடவும் வழியில்லை. குளிர் குறைந்த பிறகுதான் அதற்கு உயிர் வந்தது. எனினும் அதன் தனிமைச் சிறை வாழ்க்கை தொடர்ந்தது.

இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன. வாத்து வளர்ந்துவிட்டது. அது பல இடங்களுக்கும் பறந்து செல்ல ஆரம்பித்தது. எங்காவது, யாராவது தன்னை மதித்து ஏற்றுக்கொள்ள மாட்டார்களா, அன்பு செலுத்த மாட்டார்களா என்று ஏங்கியது.

ஒரு நாள் புதிதாக ஒரு குளத்துக்குச் சென்றபோது முன்பொரு நாள் தன்னை மிகவும் கவர்ந்த அந்தப் பறவைகளைப் போலவே சில பறவைகளைப் பார்த்தது. அவற்றின்பால் ஈர்க்கப்பட்டு அருகில் சென்றது.

என்ன ஆச்சரியம். அந்தப் பறவைகள் இந்தப் பறவையை அன்போடு வரவேற்றன. வயதான பறவைகள் கொஞ்சின. இளம் பறவைகள் நட்போடு நெருங்கின.

இந்த வாத்துக்கு ஒரே வியப்பு. கடைசியில் தன்னையும் சேர்த்துக்கொள்ள ஒரு கூட்டம். தன்னிடமும் அன்புகாட்டச் சில ஜீவன்கள். அதிலும், தான் பார்த்ததிலேயே அழகான பறவைகள் தன்னிடம் நட்பு பாராட்டுகின்றன. இதைவிட வேறு என்ன வேண்டும்?

நெடுந்தூரம் பறந்து வந்த அது, கரையில் நின்றபடி குளத்தில் தன் அலகை நீட்டித் தண்ணீர் குடித்தது. அப்போது குளத்தில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்து அசந்துபோனது.

எந்தப் பறவையை உலகிலேயே அழகான பறவை என்று அது நினைத்ததோ அந்தப் பறவையைப் போலவே தன் தோற்றம் இருப்பதை அது உணர்ந்தது. தன் கண்களை நம்ப முடியாமல் திரும்பத் திரும்பப் பார்த்தது. பக்கத்தில் இருந்த பறவைகளைப் பார்த்தது. சந்தேகமே இல்லை. அதே பறவைதான். அதே தோற்றம்தான். சிறிய வயதில் குளத்தில் பார்த்த அந்தத் தோற்றம் இப்போது இல்லை.

அசிங்கமான வாத்து என்று தன்னை நினைத்துக்கொண்டிருந்த அந்தப் பறவை வாழ்வில் முதல் முறையாகத் தன் தோற்றம் குறித்துப் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டது. பெருமிதத்தில் நெஞ்சு விம்ம, உற்சாகத்துடன் சிறகடித்துப் பறந்தது. நான் அழகான பறவை, மிக அழகான பறவை என்ற உணர்வுடன் வானில் சந்தோஷமாகப் பறந்தது.

வாழ்வின் மீதும் உலகின் மீதும் புதிய நம்பிக்கை பிறந்தது.



சிறு வயதில் தன்னைப் பற்றிய ஏதாவது ஒன்றை நினைத்துக் கவலைப்படாதவர்கள் குறைவாகவே இருப்பார்கள். சிலருக்கு இந்த மனக் குறை சற்று அதிகமாகவே இருக்கும். தோற்றம், நிறம், பேசும் விதம், குடும்பப் பின்னணி, பொருளாதார நிலை என்று ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம் இருக்கும். அந்தக் காரணம் அவரைச் சிறுமைப்படுத்தும். தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். பிறரால் ஒதுக்கப்படவும் காரணமாக இருக்கும். ஒதுங்கி வாழவைக்கும். வாழ்க்கையே பிடிக்காமலும் போகும். குள்ளம், நோஞ்சான், குண்டு, கறுப்பு, முட்டாள், அசடு என்று ஏதோ ஒரு அடைமொழி சூட்டப்பட்டு அவமானத்துக்கு உள்ளாகும் அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும் அல்லவா? பிறர் சொல்லும் குறை தன்னிடம் இருப்பதாக நாமே நம்புவதும் அதை நினைத்துக் குமைவதும்கூட இளம் ப்ருவத்தில் நடப்பதுதானே.

எனினும், ஏதோ ஒரு தருணத்தில் தன்னிடம் இருக்கும் நிறை ஒருவருக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. யாரோ ஒருவர் மூலம், ஏதோ ஒரு நிகழ்வின் மூலம், ஏதோ ஒரு தூண்டுதலின் மூலம்… தன்னைப் பற்றிய சிறப்பான விஷயம் ஒருவருக்குத் தெரிந்த பிறகு அவர் வாழ்க்கையே மாறிவிடுகிறது. அதுவரை அவரைப் பாடாய்ப் படுத்திய தாழ்வு மனப்பான்மை விலகிவிடுகிறது. தன் அடையாளம் அதுவல்ல என்பதை அவர் உணர்ந்துவிடுகிறார். தன் உண்மையான அடையாளம் எது, தன் ஆளுமை எது, தன் சிறப்பு எது என்பதை அவர் உணர்ந்துகொள்கிறார். தனக்கான இடம் எது என்பதை அவர் கண்டுகொள்கிறார்.அதன் பிறகு அவர் வாழ்க்கை மாறிவிடுகிறது. பிறரால் ஒதுக்கப்படுபவர் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுபவராக மாறிவிடுகிறார்.

இந்தக் கதையில் வரும் அந்தப் பறவை, அசிங்கம் பிடித்த வாத்தாகத் தன்னை நினைத்துக்கொண்டிருந்தது. ஆனால், உண்மையில் அது வாத்துக் குஞ்சுகளுடன் தப்பிப் பிறந்த அன்னப் பறவை. சிறிய வயதில் தான் யார் என்பது அதற்குத் தெரியவில்லை. தன் அடையாளம் எது, தன் இடம் எது என்று தெரியவில்லை. விளைவு, ஒதுக்கப்படுதலும் தாழ்வு மனப்பான்மையும். தான் ஒரு அழகான அன்னப் பறவை என்பதை உணர்ந்த தருணம் அதன் வாழ்க்கையின் மகத்தான தருணம். அதன் வாழ்வையே அடியோடு மாற்றிய தருணம்.

நம் ஒவ்வொருவருக்கும் அத்தகைய தருணம் ஏற்படும். ஏனென்றால் வெளித் தோற்றமும் பின்புலமும் எப்படி இருந்தாலும் நம் அனைவரிடமும் சிறப்பான ஒரு விஷயம் இருக்கத்தான் செய்கிறது. அதை உணரும் தருணம்தான் நம் வாழ்வின் மாயத் தருணம்.

உங்கள் வாழ்வின் மாயத் தருணத்தை நீங்கள் சந்தித்து விட்டீர்களா? இல்லையெனில் விரைவில் சந்திப்பீர்கள்.



ஹன்ஸ் க்றிஸ்டியன் ஆண்டர்சன் என்பவர் எழுதிய ‘The Ugly Duckling’ என்னும் புகழ்பெற்ற இந்தக் கதையை இணையத்தில் https://goo.gl/vxaFJL என்னும் இணைப்பில் அனிமேஷன் படமாகப் பார்த்து ரசிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது. அன்னப் பறவையின் சுய அடையாளம் பற்றி எழுதியவரின் பெயரான ‘ஹன்ஸ்’ என்பதற்கு சமஸ்கிருதத்தில் அன்னம் என்று பொருள் என்பது ஆச்சரியமான ஒற்றுமை.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்