நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், மைசூர் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 11 அன்று ‘நவீன அறிவியலும், சான்றுகளும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். “இந்தியா மூடநம்பிக்கைகளை விடுத்து, இன்னுமொரு பகுத்தறிவான சமூகமாக மாற வேண்டும். மூடநம்பிக்கையின் அடிப்படையில் செயல்படும் கலாச்சாரத்தைவிட அறிவியல் அறிவின் அடிப்படையில் செயல்படும் கலாச்சாரமே சிறந்தது” என்று பேசியிருக்கிறார் வெங்கட்ராமன்.
“மேற்கு ஐரோப்பாவில் நவீன அறிவியல் முறைகள் வளர்ச்சியடைந் திருப்பது விபத்தல்ல. அதன் விளைவாகவே தொழிற்புரட்சியும், நவீன மருத்துவமும் உருவாகின. அமெரிக்கா உட்பட, இந்த அறிவியல் முறைகளைப் பின்பற்றிய நாடுகளே கடந்த 200 ஆண்டுகளில் முன்னேறியிருக்கின்றன. கிழக்காசிய நாடுகளான சீனா, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா போன்றவை கூட அறிவியல் முறைகளைப் பின்பற்றி முன்னேறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த அறிவியல் முறைகளில் தங்களை இணைத்துக்கொள்ளாத சமூகங்கள் இன்னும் பின்தங்கியே இருக்கின்றன” என்கிறார் வெங்கட்ராமன்.
தயார் நிலையில் பிஎஸ்எல்வி-சி 29
ஆறு சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுடன் ‘பிஎஸ்எல்வி-சி 29’ ராக்கெட்டை இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் டிசம்பர் 16-ம் தேதி விண்ணில் ஏவுகிறது. இந்த ஆறு செயற்கைக்கோள்களில் ‘TeLEOS’ செயற்கோள்தான் முக்கியமானது. 400 கிலோகிராம் எடையுடைய இந்தச் செயற்கைக்கோள் பூமியைக் கண்காணிக்கும். இது ஒரு வணிகரீதியான செயற்கைக்கோள் ஏவுதல்தான். அத்துடன், இந்த ஆண்டு, இஸ்ரோ செலுத்தும் கடைசி ராக்கெட்டும் இதுதான்.
இந்த 2015 ஆண்டில் மட்டும், இஸ்ரோ ஹரிகோட்டாவில் இருந்து 14 செயற்கைக்கோள்களை அனுப்பியிருக்கிறது. இதில் பதின்மூன்று செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி ராக்கெட்டிலும், ஒரேயொரு தொடர்பியல் செயற்கைக்கோளான ஜிசாட்-6 யை மட்டும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டிலும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த ‘பிஎஸ்எல்வி-சி 29’ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டால், இந்த எண்ணிக்கை இருபதாக உயரும்.
தென்னிந்தியாவை எச்சரிக்கும் ஐநா
எல் நீனோ என்பது பசிபிக் பெருங்கடலின் கடல்பரப்பு வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு [ஏழு முதல் 24 மாதங்கள் வரை] ,சராசரி வெப்பநிலையைவிட அதிகமாகும் நிகழ்வு. அதனாலும் உலகில் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இதன் தாக்கத்தால் அடுத்த ஆண்டு தொடக்கத்திலும் தென்னிந்தியாவில் கடும் மழை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கிறது சமீபத்தில் வெளியான ஐநாவின் அறிக்கை. தெற்காசியாவிலும், தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்யும் என்று தெரிவிக்கிறது அந்த அறிக்கை. இதற்கு நேரெதிராக தெற்காசியாவின் வடக்குப் பகுதிகளில் குறைவான மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாகவும் ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.
எல் நினோவால், நவம்பர் 2015 - ஏப்ரல் 2016 வரை, சுமத்திரா, ஜாவா, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதிகள், பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதிகள் போன்றவற்றில் வறட்சி ஏற்படலாம் என்கிறது ஐநா.
725 விவசாயிகள் தற்கொலை
மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 725 என்று ராஜ்ய சபாவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2014-ல், மகாராஷ்டிராவில் 2,568 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.
“மகாராஷ்டிராவில் பல்வேறு காரணங்களால், இந்த அக்டோபர் மாதம் வரை 725 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டுக்கான தேசிய குற்றப்பதிவு நிறுவனத்தின் (என்சிஆர்பி) முழுமையான அறிக்கை இன்னும் வெளியாகவில்லை” என்று தெரிவித்திருக்கிறார் மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர் மோகன்பாய் குந்தாரியா.
மகாராஷ்டிராவில் வறட்சியால் 2013-ல் 38.42 லட்சம் ஹெக்டேரும், 2014 -ல் 112.46 லட்சம் ஹெக்டேரும், 2015 -ல் 53.11 லட்சம் ஹெக்டேரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.
மனிதனைப் போல் சிந்திக்கும் இயந்திரம்
மனித மூளையின் கற்றல் திறன்களுடன் ஓர் இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கியிருக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்தக் கண்டுபிடிப்பு செயற்கை அறிவுத்தளத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என்று சொல்கின்றனர் விஞ்ஞானிகள். இதைப் பற்றி ‘சயின்ஸ்’ பத்திரிக்கையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. மனிதர்கள் ஒரு புதிய விஷயத்தைத் தனித்துவத்துடன் எப்படிக் கற்றுக்கொள்கிறார்களோ, அதே மாதிரி கற்றுக்கொள்ளும். இதற்கு ‘பேசியன் புரோகிராம் லெர்னிங் (BPL)’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
தற்போது இந்த மாதிரிக் கணினி, கையெழுத்துப் பிரதிகளில் இருந்து எழுத்துகளைப் புரிந்துகொள்ளும். சைகைகள், நடன அசைவுகள், பேச்சு மற்றும் சைகை மொழிகளைப் புரிந்துகொள்ளும்படியாக அதனை மாற்றுவதற்கு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரியை அமெரிக்காவின் மசாசூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர்களும், கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago