கணித ஆராய்ச்சியை மேம்படுத்த 1888-ம் ஆண்டில் நியூயார்க் கணிதச் சங்கம் உருவானது. அது 1923-ம் ஆண்டில் அமெரிக்கக் கணிதச் சங்கமாக மாறியது. இன்று உலகில் கணிதத்தைப் பற்றிய மாநாடுகள், ஆய்வு வெளியீடுகள், சஞ்சிகைகள், புத்தகங்கள் போன்ற கணிதம் சார்ந்த செயல்பாடுகளில் முதன்மை பெற்றதாக அமெரிக்கக் கணிதச் சங்கம் விளங்குகிறது. உலகளவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணிதவியலாளர்கள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் ரோட் தீவு, வாஷிங்டன், மிஷிசிகன் ஆகிய மூன்று இடங்களில் இது இயங்கி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் இதன் சார்பாக மிகப் பெரிய மாநாடு நடைபெறும். இதில் உலகெங்கிலுமிருந்து 5000 -த்துக்கும் மேற்பட்ட கணித ஆய்வாளர்கள் பங்கேற்று தங்கள் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்துகொள்வார்கள்.
பரிசுகளின் பட்டியல்
வெவ்வேறு கணித உட்பிரிவுகளில் தலைசிறந்தச் சாதனை புரிபவர்களுக்கு ஆண்டுதோறும் 19 கணிதப் பரிசுகளை இந்தச் சங்கம் வழங்கிவருகிறது.
கணிதப் பயன்பாட்டுக்கான பிர்காப் பரிசு, போச்சர் நினைவுப் பரிசு, லீ இயல் எனும் கணித உட்பிரிவில் சாதனை புரிவோருக்கு செவாலே பரிசு, இயற்கணிதத்தில் சாதனை புரிபவருக்கு நெல்சன் கோல் பரிசு, எண்ணியலில் சாதனை புரிபவருக்கு நெல்சன் கோல் பரிசு, லெவி கொநான்ட் பரிசு, ஜோசப் டூப் பரிசு, கணிதம் மற்றும் இயற்பியலுக்கான லியோனார்ட் ஐசன்பட் பரிசு, புல்கர்சன் பரிசு, சிறந்த கணித ஆய்வுக் கட்டுரைக்கான மூர் பரிசு, இளநிலைப் படிப்பில் சிறந்த கணித ஆய்வு நிகழ்த்திய மாணவருக்கு பிரான்க்-மார்கன் பரிசு, ராபின்ஸ் பரிசு, சாட்டர் பரிசு, கணிதத்தைப் பிரபலப்படுத்துவதற்கான ஸ்டீல் பரிசு, கணிதத்தில் வாழ்நாள் சாதனை படைத்தவருக்கு ஸ்டீல் பரிசு, மிகச் சிறப்பான கணித ஆய்வு புரிந்தவருக்கான ஸ்டீல் பரிசு, வடிவியலில் சிறந்த ஆய்வு புரிந்தவருக்கான ஆஸ்வால்ட் வெப்லென் பரிசு, வைட்மேன் நினைவுப் பரிசு, கணிதப் பயன்பாட்டுக்கான நார்பர்ட் வைனர் பரிசு ஆகியவையே தற்போது அமெரிக்கக் கணிதச் சங்கம் வழங்கிவரும் 19 கணிதப் பரிசுகளாகும். அவற்றுள் முக்கியமான சில பரிசுகளை மட்டும் பார்ப்போம்.
ஜார்ஜ் பிர்காப் பரிசு
கணிதப் பயன்பாடுகளில் மிகச் சிறந்த பங்களிப்பை உலகெங்கும் உணரும் விதமாக ஏற்படுத்தும் அறிஞருக்கு இந்தப் பரிசு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்தப் பரிசு பெறுபவருக்கு ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இந்தப் பரிசை இம்மானுயேல் கேன்டஸ் என்ற கணித அறிஞர் பெற்றார். இந்தப் பரிசு அமெரிக்கக் கணிதச் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்களுக்கே வழங்கப்படுகிறது. அடுத்த பிர்காப் பரிசு, 2018-ம் ஆண்டு ஜனவரியில் வழங்கப்படும்.
செவாலே பரிசு
கணிதத்தில் “லீ இயல்” எனும் உட்பிரிவில் கடந்த ஆறு ஆண்டுகளில் சிறந்த பங்களிப்பை நிகழ்த்தும் கணித அறிஞருக்கு இந்தப் பரிசு இரண்டு ஆண்டுகளுக்கு (இரட்டை எண்ணுடைய ஆண்டில்) ஒரு முறை வழங்கப்படுகிறது. எந்த நாட்டைச் சேர்ந்தவரும் இந்தப் பரிசைப் பெறலாம். இதை வெல்பவருக்கு தற்சமயம் எட்டாயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.
முனைவர் பட்டம் பெற்று அதிகபட்சம் 25 ஆண்டுகள் ஆகியிருக்கும் நபருக்கே இந்தப் பரிசு வழங்கப்படும். 2016-ம் ஆண்டுக்கான பரிசை ஜியோர்டி வில்லியம்சன் என்ற கணித அறிஞர் வென்றுள்ளார். அடுத்த செவாலே பரிசு, 2018-ம் ஆண்டு ஜனவரியில் வழங்கப்படும்.
பிரான்க் நெல்சன் கோல் பரிசு
25 ஆண்டுகள் அமெரிக்கக் கணிதச் சங்கத்தின் செயலாளராக விளங்கியவர் பிராங்க் நெல்சன் கோல் என்ற கணித அறிஞர். அவரின் நினைவாக ஏற்படுத்தப்பட்ட இந்தப் பரிசு, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இயற்கணிதம் மற்றும் எண்ணியல் ஆகிய கணித உட்பிரிவுகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் சிறந்த ஆய்வு நிகழ்த்திய அறிஞருக்கு இந்தப் பரிசு வழங்கப்படும்.
இதை வெல்பவருக்குத் தற்சமயம் ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இயற்கணிதத்துக்காக வழங்கப்பட்ட இந்தப் பரிசை பீடர் சோல்ஷ் வென்றார். அதேபோல் எண்ணியலுக்கான பரிசை சேங் மற்றும் அவரது குழுவினர் பெற்றனர்.
மார்கன் பரிசு
கணிதத்தில் சிறந்த ஆராய்ச்சி புரிந்த இளங்கலை பயிலும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பிராங்க் மற்றும் பிரெனி மார்கன் பரிசு ஒவ்வோராண்டும் வழங்கப்படுகிறது.
ஸ்டீல் பரிசு
கணிதத்தில் பெரும் விளைவை தனது ஆய்வுகள் மூலம் ஏற்படுத்திய அறிஞருக்கு வாழ்நாள் சாதனை விருது, கணிதத்தைப் பிரபலப்படுத்தும் நபருக்கான விருது, கணிதத்தில் மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கும் அறிஞருக்கான விருது என மொத்தம் மூன்று பிரிவுகளில் ஸ்டீல் பரிசு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது.
முதல் பிரிவுக்கான பரிசுத் தொகை 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களாகவும், மற்ற இரு பிரிவுகளுக்கும் தலா ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை அளிக்கப்படுகின்றன. 2016-ம் ஆண்டுக்கான ஸ்டீல் பரிசை வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் பேரி சைமன் என்ற கணித அறிஞர் வென்றுள்ளார்.
நார்பர்ட் வைனர் பரிசு
2004-ம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்தப் பரிசு, கணிதத்தில் அதீத பயன்பாடுகளைக் கொண்டிருக்கும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் கணித அறிஞருக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பரிசை வெல்பவருக்கு ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். மேலும் அவர் அமெரிக்கக் கணிதச் சங்கத்திலோ, சியாம் கழகத்தின் உறுப்பினராகவோ இருக்க வேண்டும்.
ஆண்ட்ரியூ மஜ்தா என்ற கணித அறிஞர் 2013-ம் ஆண்டில் இந்தப் பரிசை வென்றார். அடுத்த பரிசு 2016-ல் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும். மேலும் விவரம் வேண்டுவோர் www.ams.org எனும் இணையதளத்துக்கு செல்லவும்.
எதிரொலி
இங்கிலாந்து பைதாகரஸுக்கு முன்பாகவே தமிழர்கள் பைதாகரஸ் தேற்றத்துக்கு இணையான தேற்றத்தைக் கண்டுபிடித்து உள்ளார்கள். இந்தப் பாடலைப் பாருங்கள்: “ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறதாக்கி கூறிலே ஒன்று தள்ளி குன்றத்தில் பாதி சேர்த்தால் வருவது கர்ணம்தானே” நீளம்: base(length); குன்றம்: height; கர்ணம்: hypotenuse.
- இணையத்தின் வழியாக, ராமச்சந்திரன்,
# இந்தப் பாடல் சங்க காலத்தில் தோன்றியது அல்ல. கிட்டத்தட்ட இருநூறு அல்லது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது.
# இந்தப் பாடல் எல்லாச் செங்கோண முக்கோணங்களுக்கும் உண்மையாகாது. குறிப்பாக (3k,4k,5k) மற்றும் (5k,12,13k) ஆகிய பக்க அளவுகளைக் கொண்ட செங்கோண முக்கோணங்களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே, இந்தப் பாடல் பைதாகரஸ் தேற்றத்தை மொத்தத்தில் வெளிப்படுத்தாது.
# பைதாகரசோ அல்லது அவரது சீடர்களில் ஒருவரோ இந்தத் தேற்றத்தின் நிரூபணத்தை முதன் முதலில் வழங்கியதால் இதை ‘பைதாகரஸ் தேற்றம்’ என அழைக்கிறோம். இவருக்கு மூன்று நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த இந்தியாவின் பவுத்தயானா என்பவர் இதைக் குறிப்பிட்ட வடிவில் வழங்கியிருந்தாலும், முதன் முதலில் நிரூபணம் வழங்கிய பெருமை பைதாகரஸ் என்பவரையேச் சாரும்.
# கிரேக்கர்களே கணிதத்தில் முதன் முதலாக நிரூபணம் என்ற கொள்கையை ஏற்படுத்தினார்கள். இதுவே கணிதத்தின் ஆதாரமாக இன்றளவும் திகழ்கிறது. எனவே நாம் பைதாகரஸ் தேற்றம் என்று அழைப்பதுதான் பொருத்தமாக அமையும்.
கட்டுரையாளர் கணிதப் பேராசிரியர்
தொடர்புக்கு: piemathematicians@yahoo.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 mins ago
சிறப்புப் பக்கம்
36 mins ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago