சுரேஷ் என்று ஒரு நண்பர் கடை கடையாக ஏறிப் பொருள்கள் வாங்குவதில் சளைக்காதவர். அவரோடு ஒரு பொருளை வாங்க நாமும் போய்விட்டால் போதும் போதும் என்று ஆகிவிடும். நம் கால்களை ஒடித்துவிடுவார். ஆனால் இன்று அவர் தலைகீழாக மாறிவிட்டார். அவர் பொருள்கள் வாங்குவது ஒன்றும் குறைந்துவிடவில்லை. முன்பு கடை கடையாகப் போய் வாங்கியவர் தற்போது இணையதளம் இணையதளமாகப் போய்த் தேடுகிறார்.
எனது நண்பரைப் போலவே பல்லாயிரக்கணக்கான மக்கள் பொருள்களை வாங்கும் முறையும் வேகமாக மாறிவருகிறது. இந்த மாற்றம் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு புதிய துறையையே உருவாக்கியுள்ளது.
அதுதான் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை.
மடிக்கணினிகளையும் திறன்பேசிகளையும் டேப்லெட் சாதனங்களையும் இலக்காக வைத்து மார்க்கெட்டிங் செய்வதுதான் இந்தத் துறை. டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் முக்கியமான நோக்கம் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பொருளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதுதான்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்பவர்களுக்கு நிறைய வெப் டிஸைன் உள்ளிட்ட தொழில்நுட்பத் திறமைகள் தேவை என்ற கருத்து பொதுவாக மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் அது முழு உண்மையல்ல. டிஜிட்டல் மார்க்கெட் துறையில் வேலை செய்ய விரும்புபவர்களுக்குப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களையும் மின்னஞ்சல் உள்ளிட்டவற்றையும் மார்க்கெட்டிங் புரிதலோடு கையாளத் தெரிந்தாலே போதும் என்பதுதான் உண்மை.
இன்றைய நவீன உலகில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையின் வளர்ச்சி மிகப் பிரம்மாண்டமாக உள்ளது. 2014-ம் ஆண்டின் கடைசிக் காலாண்டு காலகட்டத்தில் இணைய விளம்பரம் மூலம் 1400 கோடி டாலர்கள் வருமானத்தை ஈட்டுகிற சாதனையை இந்தத் துறை செய்துள்ளது.
டிஜிட்டல் விளம்பரத் துறை என்பதில் மொபைல் விளம்பரத் துறை என்பது தனிப்பிரிவாக இருக்கிறது. அந்தத் துறையில் கடந்த 2013-2014 ம் ஆண்டுகளின் காலகட்டத்தில் 76 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்கிறது இன்டராக்டிவ் அட்வர்டைசிங் எனும் ஒரு நிறுவனம்.
சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்யும் துறையின் வளர்ச்சியும் 56 சதவீதம் இருந்துள்ளது.
இந்தத் துறையின் சமீபகாலத்து அபார வளர்ச்சி மிகப் பெரிய வேலை வாய்ப்புகளை இளைய தலைமுறையினருக்குத் திறந்துவிட்டுள்ளது. உங்களின் ஆர்வத்துக்குத் தகுந்தாற்போலப் பலவகையான வாய்ப்புகளை அது வைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களை மட்டும் கருத்தில்கொண்டு அதிலேயே மார்க்கெட்டிங் பணியைச் செய்யலாம். காபி ரைட்டிங் எழுதத் தெரிந்தவர்கள் அந்தப் பணியைச் செய்யலாம். கன்டென்ட் மேனேஜ்மெண்ட் எனும் வேலைவாய்ப்பும் இந்தத் துறையில் உருவாகி உள்ளது. நீங்கள் மென்பொருள் தொழில்நுட்பம் தெரிந்தவரா? அப்படியானால் பொருள்களை வாடிக்கையாளரிடம் கொண்டு செல்லும் வகையிலான மொபைல் ஆப்ஸ்களையும் உருவாக்கலாம். இணையப் பக்கங்களைப் பல்வேறு அழகுமிக்க முறையில் வடிவமைக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இதில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
புதிய இளைஞர்கள் மட்டுமல்ல. தங்களின் தொழில் வாழ்க்கையை மாற்ற வேண்டும் எனத் திட்டமிடுபவர்களுக்கும் இந்தத் துறை வாய்ப்புகளை அள்ளித்தரும். பாரம்பரியமான தொழில்களைச் செய்யும் தொழில்முனைவர்களும் பெண்களும் கூடத் தங்களுக்கான தொழில் வாழ்க்கையாக இந்தத் துறையைத் தேர்வு செய்யலாம்.
வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிலாக இந்தியாவில் இது வளர்ந்து வருகிறது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகக் கடும் வேகத்தில் இதன் வளர்ச்சி உள்ளது.
தற்போது எட்டு லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் இந்தத் துறையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஒரு கசப்பான உண்மையும் இந்தத் துறையின் சவாலாக இருக்கிறது. அது என்னவென்றால் தேர்ச்சிபெற்ற திறமைசாலிகளான ஊழியர்கள் கிடைப்பதில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே, இந்தத் துறை பற்றிய போதுமான அறிவும் பயிற்சியும் இல்லாத நிலை நீடிக்கிறது. அதனால் வாய்ப்புகள் ஏராளமாகவும் திறமையாளர்கள் மிகக் குறைவாகவும் உள்ள துறையாக இது தற்போதைய நிலையில் இது உள்ளது.
இந்தத் துறையில் முன் அனுபவம் தேவையில்லாதவர்களுக்கான பணிகள் முதல் தேர்ச்சிபெற்ற திறமைசாலிக்கான பணிகள் வரை பலதரப்பட்ட பணிகள் இருக்கவே செய்கின்றன. இதில் 42 சதவீதத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் முன்அனுபவம் தேவையில்லாத பணிகளில்தான் உருவாகிஉள்ளன என்பதும் உண்மைதான்.
சமீப ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு பெருநிறுவனங்களும் தங்களின் பொருள்களை மக்களிடம் கொண்டு செல்ல டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் நுழைந்துவிட்டன. அதனால் இந்தத் துறையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மேனேஜர்கள், சோசியல் மீடியா மார்க்கெட்டர்கள், கன்டென்ட் மார்க்கெட்டர்கள் எனும் பெயரில் புதிய உயர் பதவிகளும் உருவாகியுள்ளன.
இந்தத் துறையில் திறமைபடைத்த ஊழியர்களுக்கு வருடத்துக்கு 20 லட்சம் ரூபாய்கள் வரை கூட சம்பளம் தருவதற்குப் பெருநிறுவனங்கள் முன்வருகின்றன. சந்தைப்படுத்தலில் திறமை வாய்ந்த சாதாரண ஊழியர்களுக்கான ஆரம்பகட்ட ஆண்டு சம்பளம் கூட 4அல்லது 5 லட்சமாக இருக்கிறது.
சரி ஏராளமான வாய்ப்புகளைத் தரும் இந்தத் துறைக்கான படிப்புகள் ஏதாவது இருக்கிறதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் சம்மந்தமான படிப்புகளைத் தற்போது சில நிறுவனங்கள் வழங்குகின்றன. டெல்லி ஸ்கூல் ஆப் இன்டெர்நெட் மார்க்கெட்டிங் எனும் நிறுவனம் பட்டயப் படிப்பை வழங்குகிறது. 10 வது படித்தவர்கள், பிளஸ் 2 படித்தவர்களும் இதில் சேரலாம். இதுவரை இத்தகைய படிப்புகளில் வந்து சேர்பவர்கள் பொதுவாக ஏற்கெனவே பணிகளில் இருப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்கிறார் இந்தப் பள்ளியின் இயக்குநர் குணால் சவுத்ரி.
டிஜிட்டல் வித்யா எனும் டெல்லி நிறுவனமும் இத்தகைய பட்டயப்படிப்புகளை வழங்குகிறது. இதில் ஆன்லைனிலும் படிக்கலாம். Edukart எனும் நிறுவனமும் படிப்புகளை வழங்குகிறது. தென்னிந்தியாவில் இருப்பவர்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் அகடமி எனும் நிறுவனம் உதவியாக இருக்கும். இது ஹைதராபாத்தில் செயல்படுகிறது.
இவை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே. பல்வேறு நிறுவனங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை பற்றிய படிப்புகளை ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய துறையில் தேடலும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு நிச்சயம் அவை உதவியாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago