ஒரே வரியில் சொல்வதானால் இஸ்லாமிய கல்வி, இந்து கல்வி என எதுவும் இல்லை. இந்தியக் கல்வி, உலகக் கல்வி என்பதே உள்ளது. - இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத்
பழைய கல்வியும் புதுக்கல்வியும்
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடக்கும்போது இஸ்லாமியப் பெண்கள் தங்களின் குழந்தைகளுக்குக் கிருஷ்ணர் வேடமிடுவதைப் பார்க்கும்போது நான் சந்தோஷப்படுவேன். அப்போதெல்லாம் ஆர். ராஜேஷை நினைப்பேன். ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்த நமது கல்விக்கூடங்களில் எவ்வளவோ குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் இந்தக் கல்வி வந்திருக்காவிட்டால் சாதி, மத, இன வேற்றுமையைக் கடந்து ஒன்றாக ஒரே இடத்தில் நமது குழந்தைகள் கூடிக் கற்கும் ஒரு வகுப்பறையை நாம் அடைந்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
குருகுலக் கல்விதான் நமக்கான கல்விமுறை என்பவர்கள் அந்தக் கல்விமுறையில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை பார்க்க மறுக்கிறார்கள். அது எல்லோருக்குமான ஜனநாயகக் கல்வியாக இருக்கவில்லை என்பது உண்மைதானே? அந்தக் கல்விமுறையில் நமக்கு ஒரு அம்பேத்கரோ ஒரு அப்துல் கலாமோ கிடைத்திருக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தம்.
கல்வி அனைவருக்குமானது என இன்று கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது. உள்ளூரின் பிரிவினைச் சுவர்கள் இன்றைய வகுப்பறையில் நுழைவது கடினம். பொதுவாக ஆண், பெண் பாலினப் பாகுபாட்டையும் இன்றைய வகுப்பறை கடந்துள்ளது.
தொழில்துறைக்கான கல்விமுறை
இவ்வளவு புரிதல்கள் எனக்கு இருந்தாலும் இந்திய மண்ணுக்கே உரிய பொதுத்தன்மையாக ‘வேற்றுமையில் ஒற்றுமை’ இருக்கிறது என்று எனக்கு உணர்த்தியவர் மாணவர் ஆர். ராஜேஷ். தன்னை வெறும் ராஜேஷ் என அழைப்பது அவருக்குப் பிடிக்காது. “ஆர். ராஜேஷ் சார்” எனத் திருத்துவார். இன்ஷியலோடு சேர்த்துப் பெயரைச் சொல்வது நம் கல்வியின் ஒரு அங்கம். வகுப்பில் இரண்டு மூன்று ராஜேஷ்கள் இருப்பதால் இப்படி.
பழைய குருகுலக் கல்விக்கும் தற்போதைய நமது கல்விக்குமான வித்தியாசங்களில் முதன்மையானது தற்போதைய கல்வி, சான்றிதழைத் துரத்தும் கல்வியாக இருப்பது. குருகுலக் கல்வி, இது பிளஸ் 2, இது இளநிலை அறிவியல் பட்டம் என எந்தச் சான்றும் வழங்கவில்லை. எதைப் பயிற்சியாகப் பெற்றாலும் அதற்கு ஒரு சான்று தரும் இந்தக் கல்வி முறையை அறிமுகம் செய்தவர் இங்கிலாந்தின் கல்வியாளர் ஜான் டூயி (John Dewey). 19-ம் நூற்றாண்டின் தொழில்புரட்சிக்கு லட்சக்கணக்கான வேலையாட்கள் தேவைப்பட்டனர். அந்தத் தேவைக்கான ஒரு உடனடி தீர்வாக பாஸ்ட்புட் மாதிரி - “இதைப் படித்தால் போதும். அந்தச் சான்றிதழோடு வேலைக்கு வரலாம்” என்று தொழிற்துறைக்காக உருவாக்கப்பட்டதே ஜான் டூயி கல்விமுறை. பிரிட்டிஷ்காரர்கள் அதையே இங்கும் அறிமுகம் செய்தார்கள்.
கல்வியின் இந்தியத்தன்மை
இந்தியாவில் சுதந்திரத்துக்கு பிறகு அறிமுகமாக வேண்டிய கல்வி எது என்ற கேள்வி எழுந்தபோது காந்தியடிகள் இந்தக் கல்வியை எதிர்த்தார். வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற ராட்டை நூற்பதைத் தனது அரசியலாக முன்வைத்தவர் அவர். நம் கல்வியில் ராட்டைக்கே அதாவது பழைய கிராமியத் திறன் தொழில் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் தரப்படவேண்டும் என வாதிட்டார். ஆனால் சோஷலிச சிந்தனையாளர்கள் காந்தியின் கருத்துகளை விமர்சித்து நேருவின் பின்னால் அணிவகுத்தனர். அவர்கள் தங்களது அறிவியல் மேம்பாட்டுக் கல்விக்கான அடையாளமாக நுண்ணோக்கியை (Microscope)முன்வைத்தனர். அடிப்படைக் கல்வி பாடப் புத்தகத்தோடு நில்லாமல் கருவிகளைக் கையாளவைக்கும் உலகளாவிய அறிவு பெறுதலாக இருக்க வேண்டும் என்று நேரு ‘இந்தியாவைக் கண்டுணர்தல்’ எனும் நூலில் எழுதினார்.
எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த் 1947- ல் பழங்காலக் கல்விமுறைக்குள் திரும்பிச்செல்வது ஆபத்து என்றார். கிணற்றுத் தவளைபோல தனது மதமும் சாதியும் சொல்லித்தரும் விஷயங்கள் மட்டும்தான் உண்மையான உலகம் என்று கருதுவோரை அது படைத்துவிடும் என்று On Education எனும் நூலில் அவர் எழுதியுள்ளார். இந்தக் கல்வியில் இந்தியத் தன்மையின் இடம் எங்கே என்பது காந்தியடிகள் எழுப்பிய கேள்வி. இந்தியத் தன்மை என்றால் என்ன என்று எனக்கு உணர்த்தியவர்தான் ஆர். ராஜேஷ்.
வீர சிவாஜியும் ஆர். ராஜேஷும்
நாங்கள் அப்போது பெற்றோர் தினவிழாவுக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். நான் வேலை பார்த்த பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவராக ஆர். ராஜேஷ் இருந்தார். விழாவில் குழந்தைகளை வைத்து நாடகம் போடும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எந்த அடிப்படையான குறிக்கோளும் இல்லாமல் நான் சில மாணவர்களைத் தேர்வுசெய்து அவர்களோடு பேசினேன். ஆசிரியரே நாடகத்தை உருவாக்குவதுதான் வழக்கம். அதற்காக யோசித்துக்கொண்டிருந்த என்னிடம் “சிவாஜி நாடகம் போடலாம் சார்” என்று மடமடவெனக் கதைச் சுருக்கத்தைச் சொன்னார் ஆர். ராஜேஷ்.
இது நிஜத்தில் நடந்த சம்பவமாம். எங்கள் ஊர் அருகே பண்ருட்டி மவுலியா தர்காவுக்கு மன்னர் சிவாஜி வந்துள்ளார். தர்காவில் இஸ்லாமிய மதகுருவான மவுலியாவும் ஒரு போர்ச்சுகீசிய கிறிஸ்துவப் பாதிரியாரும் சேர்ந்து அளவளாவுவதைக் காண்கிறார். இது எப்படிச் சாத்தியம் என்று சிவாஜி கேட்கிறார்.
“பல வர்ணங்களிலான வானவில்லைப்போலத்தான் மதங்களும். அவை வேறு வேறாக இருப்பினும் அவை போற்றும் கருணையும் அன்பும் ஒன்றே” என்று மவுலியா அவருக்கு விளக்குவார். இதைக் கேட்ட வீர சிவாஜி மனம் மாறி எல்லா மதத்தினரையும் ஒன்றுபோலக் கருதினாராம்.
பண்ருட்டி மக்களிடையே வாய்மொழிக் கதையாக உள்ள இதை நாடகமாக நாங்கள் அரங்கேற்றினோம். அதில் ஆர். ராஜேஷ் புகுத்திய அடுத்த அம்சம்தான் அற்புதமானது. ராஜேஷ் இஸ்லாமிய மவுலியாவாக நடித்தார். இந்து மதத்தைப் பின்பற்றிய வீர சிவாஜி மன்னராக அவரது நண்பரான இன்னொரு மாணவர் ஜோசப் நடித்தார். கிறிஸ்துவப் பாதிரியாராக இன்னொரு நண்பர் பஷீர் அகமது நடித்தார். “அவங்க அவங்க மதத்துக்கான வேஷத்தை அவங்க அவங்க போட்டு நாடகம் போடுறதுல என்ன சார் புதுமை? அப்பத்தான் சார் நம்மால மத்த மதத்துக்காரங்களையும் புரிஞ்சிக்கவும் முடியும். அதுதான் சார் உண்மையான இந்தியா!” என்று ஆர். ராஜேஷ் தனது யோசனையை என்னிடம் விளக்கியது இன்னமும் என் காதுகளில் கேட்கிறது.
அந்த நாடகத்துக்காக அதிகாரிகள் உள்ளிட்ட பலரது பாராட்டு எனக்குக் கிடைத்தது. அதற்கெல்லாம் ஆர். ராஜேஷ்தான் காரணமானவர் என்று நான் நெகிழ்ந்தேன். நம் குழந்தைகள் மத நல்லிணக்கம் பேணும் இந்தியாவில்தான் வாழ விரும்புகிறார்கள் என்பதை எனக்குப் புரியவைத்தவர் ஆர். ராஜேஷ். இன்று தன் ‘இந்தியாவை’ பாதுகாக்க ஸ்குவாட்ரண்ட் ராஜேஷ்- ஆக இந்திய விமானப் படையில் சேவையாற்றி வருகிறார்.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago