வெறும் பள்ளி சார்ந்த திறன்களை மட்டுமே ஒரு சமூகம் உயர்வாகக் கருதுவது சரியானதல்ல. புத்திக் கூர்மை பன்முகங்கள் கொண்டது. அது ஆசிரியரையும் கடந்து செல்லும் சக்தி படைத்தது.
- ஹாவர்ட் கார்ட்னர்
தொலைக்காட்சி விளம்பரங்களில் பள்ளிக் குழந்தைகள் விஷேசமான சத்துப் பானங்களை அருந்தி 100க்கு 100 மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். பெரிய கோப்பைகளை வெல்கிறார்கள். பிஸ்கட் சாப்பிட்டால் அறிஞர் ஆகலாம் எனவும் காட்டப்படுகிறது.
அறிவுக் கூர்மை வளர்ச்சி அவ்வளவு சுலபமானதா? பள்ளியின் தேர்வுகள் பாடப் புத்தகத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள அறிவை அடிப்படையாகக் கொண்டவை. படித்து மனதில் ஏற்றிப் பிறகு அப்படியே தேர்வுகளின்போது இறக்குமதி செய்யும் ஒரே வகை அறிவுத் திறனை மட்டுமே வைத்து ஒருவரது புத்திக் கூர்மையை அளவிடுவதா? அதை வைத்து மட்டும் குழந்தைகளைத் திறமைசாலிகள் எனக் கொண்டாடுதல் தவறு என்பதை எனக்கு உணர்த்தியவர் ஜான் ஜோசப்.
பள்ளிக்கூடத்தில் மதிப்பெண்கள் பெறும் திறமை மட்டும் போதாது என்பது பல பெற்றோர்கள் அறிந்ததுதான். ஆனால், ‘மற்ற பிற வகையான திறன்’ என்பது எல்லோருக்கும் தெரியுமா? பள்ளிக் குழந்தைகளைச் சகலகலா வல்லவர்களாக ஆக்குகிறேன் என்று அதிகாலையில் மூச்சுப் பயிற்சியும் யோகா வகுப்பும்; பிறகு பள்ளி முடிந்ததும் கீபோர்ட், பரதநாட்டியம், நீச்சல் பயிற்சி. இதுவும் பத்தாது என்று வாரம் ஒருமுறை செஸ், கராத்தே எனக் குழந்தைகளைப் பரபரப்பாகவே வைத்திருக்கும் பெற்றோர்களை இன்று சாதாரணமாகப் பார்க்கலாம்.
பன்முக அறிவு
இன்று கல்வியில் அதிகம் பேசப்படுவது ஆங்கில உளவியல் அறிஞர் ஹாவர்ட் கார்ட்னரின் பன்முக அறிவுக் கோட்பாடு. குழந்தைகள் பன்முக அறிவை இயல்பூக்கமாகப் பெற்றுள்ளன என்கிறார் அவர். அவரைப் பொருத்த வரை, மொழி அறிவு, இசை அறிவு (இதில் எதிராளியின் குரல் ஏற்றத் தாழ்வை உணர்வதும் அடக்கம்) தர்க்க அறிவு, இட அறிவு (வழியை ஞாபகம் வைத்தல், காணும் பொருட்கள் குறித்த அறிதல்), உடலறிவு (விளையாட்டு வீரருக்கு உரியது) சுய அறிவு, குழு அறிவு என ஏழு அடிப்படை அம்சங்கள் பன்முக அறிவில் அடக்கம்.
புதிய சூழல்களை எதிர்கொள்ளும்போதும், பள்ளி எனும் சட்டகத்துக்கு வெளியேயும் புத்திசாலித்தனத்தைச் சிறந்த அறிவாளிகள் பயன்படுத்துகிறார்கள். நாம் அறிவைப் பள்ளிக்கூடத்துக்கு உள்ளேயே தேடிக்கொண்டிருக்கிறோம். அங்கே இருப்பது ஒரே திறன் சார்ந்த ஒருவகை போலி அதிகாரக் கட்டமைப்பு மட்டுமே. இதை நிரூபித்தவர் ஜான் ஜோசப் .
ஊரை விட்டு ஓடுதல்
நான் அவருக்கு ஆசிரியராக இருந்த ஒரே கல்வியாண்டில் ஜான் ஜோசப் இரண்டு முறை வீட்டைவிட்டு ஓடி விட்டார். முதல்முறை எதற்காக ஓடினார் எனத் தெரியவில்லை. ஆனால், கணக்கு அரையாண்டு விடைத்தாளில் சிவப்பு மை பேனாவால் (ஆசிரியரின் கையெழுத்தில்) 14 மதிப்பெண்ணை 44 ஆக மாற்றியதால் மாட்டிக்கொண்டு இரண்டாவதாக ஓடினார்.
அது என்னவோ ஜான் ஜோசப்புக்கு பள்ளிக் கணிதம் சுட்டுப்போட்டாலும் ஏறவில்லை. பள்ளிக்கும் வீட்டுக்கும் நடுவில் போராட முடியாமலோ அல்லது வீட்டில் கோபித்துக்கொண்டோ இந்தக் கல்வி முறை தரும் மன அழுத்தம் தாளாமலோ ஊரைவிட்டே ஓடும் குழந்தைகள் நமது கல்வி அமைப்பின் பிரம்மாண்டமான தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. யோசித்துப் பார்த்தால் தனது பட்டமும் பட்டயமும் முழுதாகவே போலிதான் என்று சிக்கிக்கொள்ளும் பிரபலங்களை ஒப்பிட்டாலோ, அல்லது வேறு ஒருவர் டிக்கெட்டில் ரயிலில் பயணிப்பவர்கள் செய்கிற அளவுக்குக்கூட அந்த எட்டாம் வகுப்பு மாணவர் ஜான் ஜோசப் செய்தது பெரிய தவறு கிடையாது.
ஆனால், நாம் இத்தகைய சந்தர்ப்பங்களில் குழந்தைகளைப் பேச அனுமதித்து விளக்கம் கேட்பதில்லை. ஆளாளுக்கு அறிவுரையும் அடி உதையுமாகக் குதிப்போம். அதிலிருந்து ஒருவகை தப்பித்தலாகவே குழந்தைகள் வீட்டைவிட்டு ஓடுகிறார்கள். வேறு சிலரோ தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்குத் தள்ளப்படுகின்றனர்.
ஊரை விட்டு ஓடும் குழந்தைகளின் பெற்றோர்கள் காவல்துறையிடம் உடனடியாகப் புகார் செய்வதில்லை. சொந்தக்காரர், தெரிந்தவர் என்று தேடி அலைந்து வேறு வழியில்லாத நிலையில் காவல்துறையில் ‘தெரிந்தவர்’ களிடம் விஷயத்தைச் சொல்வார்கள். தலைமை ஆசிரியருக்குப் பள்ளியின் பெயர் செய்தித்தாளில் வந்துவிடக் கூடாதே என்பது உட்பட இதில் கவலைகள் உண்டு.
பன்முக ஜோசப்
ஒரு வாரம் கழித்து ஒருநாள் ஜான் ஜோசப் பள்ளிக்குத் திரும்பிவிட்டார்.
தலைமை ஆசிரியர்கள் இந்த மாதிரி விஷயங்களில் வேறு பள்ளியில் சேருமாறு ‘அறிவுறுத்து’வார்கள். ஜான் ஜோசப் விஷயத்தில் ஒரு பெரிய ஆச்சரியச் சுனாமி வீசியது.
ஜான் ஜோசப் கையில் 100 ரூபாயை வைத்துக்கொண்டு கடலூரிலிருந்து செஞ்சிக்கு போய்விட்டார். பேருந்து நிலையத்தில் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்த ஒரு பஸ்ஸிலிருந்து யாரோ ஒருவரின் பை வெளியே விழுந்தது. ஜான் ஜோசப் அதை எடுத்து நிமிர்வதற்குள் பஸ் போய்விட்டது. அந்தப் பையில் கத்தை கத்தையாகப் பணம். அதை அவர் பக்கத்திலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டார். தன்னைப் பற்றிய தகவல்களைத் தந்து உரியவரிடம் பணத்தை ஒப்படைத்தார் ஜான் ஜோசப்.
மகளின் சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்கான பணம் தொலைந்துபோய் அது ஜான் ஜோசப் மூலம் கிடைத்ததைச் சொல்லிச் சொல்லி தலைமை ஆசிரியர் முன்னிலையில் எங்களின் முன்பாக அழுதார் அந்தப் பெரியவர். ஜான் ஜோசப்பைப் பாராட்டிக் காவல்துறை அதிகாரிகள் வேறு பரிசுகள் கொடுத்தனர். இதையெல்லாம் பார்த்த தலைமை ஆசிரியருக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
எது குற்றம், எது தவறு?
பள்ளியில் ஜான் ஜோசப் செய்தது தவறு. ஆனால், கண்டெடுத்த பணத்தை அவர் வேறு ஏதாவது செய்திருந்தால் அது குற்றம். இந்த வேறுபாட்டை ஆசிரியர்கள் அறியவேண்டும். இடத்தைப் பற்றிய அறிவு, மொழி, பிறர் மனம் அறிதல், தர்க்க அறிவு, சமூகச் சிந்தனை, எங்கே சென்று எதைச் செய்யவேண்டும் குழு அறிவு உள்ளிட்ட பன்முக அறிவைப் பெற்ற ஜான் ஜோசப், காரண காரியத் தொடர்பு காணுதல், அச்சமின்றி சிந்தனையைச் செயலாக்குதல், பகுத்தாயும் சிந்தனை, பிரச்சினைக்கு ஆக்கபூர்வ தீர்வு காணுதல் இவைதான் அறிவின் அடையாளங்கள்.
நமது பள்ளித் தேர்வுகளால் அதை அளக்க முடியாது என்பதே உண்மை. இந்த வகைத் திறன்களின் பொது விதிகளுக்குள் பள்ளியில் செயல்படுவதும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதும் தேர்வுகளைவிட முக்கியம் என எனக்குப் புரிய வைத்த ஜான் ஜோசப் இன்று ஆட்டோ ஓட்டுகிறார். அவருக்குச் சொந்தமான ஆட்டோவில் கீழ்க்கண்ட வாசகம் உள்ளது.
ஆண்டவர் உனக்குத் தினந்தோறும்
வைக்கும் தேர்வு- மனித நேயம்.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago