சரியான விடையற்ற தேர்வுகள்

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

நான் சைக்காலஜிஸ்ட் என்று தெரிந்ததும் என்னிடம் கேட்கப்படும் நிச்சயக் கேள்வி: “அப்போ என் மனசில இருக்கறத அப்படியே கண்டுபிடிச்சிடிவீங்க இல்ல? என் பர்சனாலிட்டியை அப்படியே ஸ்டடி பண்ணிடுவீங்க இல்ல? என்னைப் பத்தி சொல்லுங்க, முழுசா சொல்லுங்க பாக்கலாம்?”

உளவியல் மாந்திரீகம் அல்ல; அப்படியெல்லாம் கூற முடியாது, கூறக் கூடாது என்று விவரித்தவுடன் சற்று சுவாரசியம் இழந்து கேட்பார்கள்: “பின்னே எப்படி உங்க கிட்ட வர்றவங்க மனசைக் கண்டுபிடிப்பீங்க?”

கூர்ந்து நோக்குதலும் உரையாடலும் நிறைய விடைகள் தரும். அதற்கு மேல் இதற்கான உளவியல் சோதனைகள் உள்ளன எனச் சொல்வேன். அது எப்படி இருக்கும் என்று கேட்டால் பெரும்பாலும் கேள்வித்தாளும் விடைத்தாளும் கொண்டவை என்றவுடன் மேலும் சோர்வடைவார்கள்.

சைக்காலஜிஸ்ட் மற்றும் சைக்காலஜிகல் டெஸ்ட்கள் எனும்போதும் மக்கள் மிகவும் வித்தியாசமாக, கவர்ச்சியாக எதிர்பார்க்கிறார்கள். அதற்கு நம் சினிமாதான் காரணம்.

நாயகனோ நாயகியோ புத்தி பேதலித்தால் சுருதி சுத்தமாய்ப் பாட்டுப்பாடியே குணப்படுத்திய காலங்கள் ஒன்று உண்டு. அதைக் கேட்டே குணமாவார்கள். அல்லது தலையில் அடிபட்டு மனம் பேதலித்தால் மீண்டும் அடிபட்டுக் குணமாகும். குண்டடி பட்டும் சாகாமல் மனம் பேதலிப்பார் உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர். நான் ஏன் பிறந்தேன் படத்தில் பாட்டுப் பாடியே அவர் காஞ்சனாவை எழுந்து நடமாட வைப்பார்.

அப்போதெல்லாம் குடும்ப டாக்டர்தான் அறிவுரை கூறுவார். ‘கல்யாணம் பண்ணினா எல்லாம் சரியாப் போகும்’ என்பார். ‘எங்காவது மலைப் பிரதேசத்துல போய் கொஞ்சம் ஓய்வெடுக்கச் சொல்லுங்க’ போன்ற சிகிச்சைகளைத்தான் பார்த்திருக்கிறோம். எண்பதுகளுக்கு மேல் சைக்கியாட்டிரிஸ்டு என்ற பெயர்ப் பலகையுடன் தாடி அல்லது வழுக்கை கொண்ட ஒரு வயோதிகர் வந்து புத்தகத்தில் இல்லாத பெயர்களைக் கூறுவார். சுற்றும் வட்ட வரியை நோக்கச் சொல்வார்கள். சி.டி. ஸ்கேன் மிஷின் எல்லாம் காட்டுவார்கள். டாக்டர் வில்லன் என்றால் ஷாக் கொடுப்பார்.

நிஜத்தில் அதிகப்படியான உளவியல் ஆய்வுகள் பேப்பர் பென்ஸில் டெஸ்டுகள் என்று கூறப்படும் வகையைச் சேர்ந்தவையே. அதுவும் வேலைத் தேர்வு, ஆளுமைச் சோதனை எல்லாம் தாண்டி இன்று நன்கு நிரூபிக்கப்பட்ட சைக்கோமெட்ரிக் டெஸ்டுகள் வந்துவிட்டன. ஒரு தேர்வு எழுதுவது போல 30 நிமிடங்கள் நீங்கள் மேற்கொண்டால், நம் ஆய்வுக்குத் தேவையான அனைத்துத் தகவலும் கிடைக்கும்.

சரி, இது யார் வேண்டுமானாலும் ஜெராக்ஸ் எடுத்துப் பயன்படுத்த முடியுமா என்றால் முடியாது. ஸ்டெத்தஸ்கோப்பை எடுத்து வைத்துக்கொண்டு டாக்டர் ஆவேன் என்று கூறுவது போல இது. மருந்து பெயர் தெரிந்தால் உங்களால் சிகிச்சை செய்ய முடியும் என்று பொருளில்லையே? அது போலத்தான் இது. என்ன ஆய்வு செய்ய வேண்டும் வரும் முடிவுகளை எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்பது ஒரு தேர்ந்த உளவியல் நிபுணருக்குத்தான் தெரியும்.

ஒருவர் வேண்டுமென்றே சரியில்லாத விடைகள் கொடுத்து ஏமாற்ற நினைத்தாலும் அதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். உதாரணத்திற்கு, நீங்கள் விற்பனை சார்ந்த வேலைக்கான தேர்வுக்குப் போகிறீர்கள். சைக்கோமெட்ரிக் டெஸ்டில், ‘புது மனிதர்களிடம் சகஜமாக நீங்களாகவே சென்று பேச்சு கொடுப்பீர்களா?’ என்று ஒரு கேள்வி உள்ளது. நீங்கள் கூச்ச சுபாவம் மிக்கவர். ஆனால் அது தெரிந்தால் வேலை கிடைக்காது. நீங்கள் இந்தக் கேள்விக்கு ‘இல்லை’ என்று உண்மையை டிக் செய்வதற்குப் பதில் ‘ஆம்’ என்று டிக் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் மாற்றி விடை அளித்த விவரம் பல வடிவங்களில் தெரிந்துவிடும்.

பல சைக்கோமெட்ரிக் டெஸ்டுகளில் ‘Lie Score’ என்று ஒன்று உள்ளது. அது உங்கள் பதில்களின் நம்பகத்தன்மையைச் சொல்லிவிடும். அதிகம் லை ஸ்கோர் இருந்தால், அந்த ஆய்வை நிராகரித்துவிடுவோம். ஒரே கேள்வி பலமுறை மாறி மாறிக் கேட்கப்பட்டிருக்கும். ஒரு புறம் அதற்கு ஆம் என்று விடையளித்து, இன்னொரு புறம் இல்லை என்றால் அது Response Discrepancy என்று காட்டிக் கொடுக்கும்.

ஒவ்வோர் ஆய்வும் பல்லாயிரம் பேரிடம் கொடுத்துச் சோதிக்கப்பட்டு, புள்ளியியல் நம்பகத்தன்மையோடு கொண்டுவரப்படுகிறது. அதனால் ஏமாற்றுவது மிகக் கடினம்.

உங்கள் டெஸ்ட் முடிவுகள் நம்ப முடியாதவையாகவோ, சர்ச்சைக் குரியவையாகவோ இருந்தால் நிச்சயம் அவை நேர்காணலில் அலச எடுத்துக் கொள்ளப்படும். அதனால் சாயம் வெளுப்பது உறுதி.

பல நேரங்களில் அந்த ஆய்வின் மொழி புரியாமல்கூடத் தவறுகள் நடக்கலாம். புரியாதபோது அருகிலுள்ள ஆய்வாளரை ‘இதற்கு என்ன பொருள்?’ என்று கேட்பது உத்தமம்.

பேப்பர் பென்ஸில் டெஸ்டுகளுக்கு நான் சொன்னது, அனைத்து வகை உளவியல் சோதனைகளுக்கும் பொருந்தும். உங்கள் உண்மையான ஆளுமையை, திறமையைக் காட்ட முயலுங்கள். அதுதான் உங்கள் தேர்வுக்கு உதவும். அவர்கள் என்ன சோதிக்க முயல்கிறார்கள் என்று நீங்களாக நினைத்து அதற்கேற்ப உங்கள் பதில்களை மாற்றாதீர்கள்.

அறிவு சார்ந்த தேர்வுகள் தவிர அனைத்து ஆய்வுகளிலும் ‘இதுதான் சரியான விடை’ என்று ஒன்று கிடையாது. உங்களை முழுதாக அறிந்துகொள்ளத்தான் இந்த ஆய்வுகள். அதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.

இந்த அடிப்படை புரியாததால் இந்த சைக்கோமெட்ரிக் தேர்வுகளை எப்படி மேற்கொள்வது என்பது போல நடத்தப்படும் அமெச்சூர் பயிற்சிகள் முழுத் தோல்வி அடைகின்றன.

உளவியல் ஆய்வு மேற்கொள்ள உங்களுக்குத் தேவை பயிற்சி அல்ல. உண்மையை உறுதியுடன் சொல்லும் நேர்மை!

காதலியுடன் பேச விடைகள் மனப்பாடம் செய்துவிட்டுப் போய் ஜெயிக்க முடியுமா என்ன?

முதன் முதலில் அறிவுத் தேர்வை அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.

பள்ளிக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரும்போது எழும் சிக்கல்தான், பிள்ளைகளை வகைப்படுத்தலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. 10 வயது உள்ள குழந்தை 12 வயதுக்குள்ள கிரகிக்கும் திறன்களுடன் உள்ளபோது அதற்கு ஒரு சிறப்புக் கல்வி தேவைப்பட்டது. அதே போல 10 வயதுள்ள குழந்தை 8 வயதுக்கான கிரகிக்கும் திறன்களுடன் உள்ளபோதும் வேறு வகையான சிறப்புக் கல்வி தேவைப்பட்டது.

குழந்தைகளின் இந்த உளவியல் வளர்ச்சியை அளவிடக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஐ.க்யூ. டெஸ்ட். நோக்கம்: சராசரிகளுடன் இணைந்து வாழத்தக்க சிறப்புக் கல்வி முறைகளை உருவாக்குவது.

ஆனால் அந்தத் தேர்வுகள், உலகப் போரின்போது படை வீரர்கள் தேர்விற்கும், பின்னர் வணிக நிறுவனங்களின் ஆட்கள் தேர்வுகளுக்கும் பயன்பட ஆரம்பித்தன.

இன்றுள்ள அனைத்து வகை அறிவு சார்ந்த சோதனைகளுக்கும் முன்னோடியான ஆய்வைக் கண்டுபிடித்தவர் பிரான்ஸ் பள்ளி ஆசிரியர் ஆல்ஃப்ரெட் பினேதான்!

டாக்டர். ஆர். கார்த்திகேயன்- தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்