எனக்கு டி.சி. கொடுங்க சார்!

By ஆயிஷா இரா.நடராசன்

தங்கள் செயல்களைத் தாங்களே விமர்சிக்கும் வாய்ப்பைக் குழந்தைகளுக்குத் தருபவரே சரியான ஆசிரியர்.

- கல்வியாளர் ஆனி பிராடன்

பள்ளிக்கூட மாணவர்கள் மது அருந்திவிட்டு வகுப்புக்கு வருவதாக வரும் செய்திகளைப் படித்துவிட்டுப் பதறுகிறோம். கலி முத்திவிட்டது என்பதிலிருந்து சமூகச் சீரழிவு என்பது வரை பார்வைகள் பலவிதம்.

இந்த நேரத்தில் நான் கல்யாணியை நினைத்துக்கொள்கிறேன். என்னைச் செதுக்கிய மாணவர்களின் வரிசையில் முதலில் (பெயர் மாற்றம் செய்து) உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பும் பெயர் அது.

பள்ளி எனும் அந்தஸ்து

மாணவர்களின் ஒழுங்கீனமான செயல்களுக்குப் பள்ளிக்கூடம்தான் பொறுப்பு என்பது (விவாதிக்கப்படாமலேயே) தமிழ்கூறும் நல்லுலகம் ஏற்றுள்ள கருத்து. ஆனால், இன்றைய குழந்தைகள் வளரும் சூழல்களே வேறு. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்களின் சொத்தாக, தங்களின் சூப்பர் செல்லப் பிராணியாக, தங்களது கனவுகளை நிறைவேற்றுபவர்களாக, தங்களது எதிர்காலமாகக் கருதுகிறார்கள் என்கிறார் ஜான் ஹோல்ட் எனும் கல்வியாளர். இணையதளம், வீடியோ விளையாட்டு, சினிமா, டி.வி என அவர்களைச் சுற்றி விரியும் மீடியா வட்டமும் மறுபுறம் இருக்கிறது.

பெற்றோர்களின் கனவையும் எதிர்காலத்தையும் சாதிக்க பிள்ளைகள் மூலம் சான்றிதழ் பெறுவது என்று தங்களின் சுயத்தின் விரிவாக்கமாகவே பள்ளி எனும் அமைப்பு பெற்றோர்களுக்குத் தேவைப்படுகிறது என்பது சில உளவியலாளர்களின் கருத்து. எந்தப் பள்ளி என்பதே ஒருவகை சமூக அந்தஸ்து ஆக இருப்பதைப் பாருங்கள்.

பள்ளியில் உளவியல்

இன்றைய குழந்தை பார்க்கும் சினிமா, துருவும் (Browsing) இணையம், விளையாடும் வீடியோ, ரசிக்கும் தொலைக்காட்சி யாவும் ஏதோ வகையில் ஒழுக்கத்தை மறுத்துச் சுகம் காண்பவை இல்லையா? குழந்தைகள் முன் வைக்கப்படும் நாளிதழ்களில் காதல் கொலை, ஒருதலை காதலால் அமில வீச்சு, பலாத்காரம் ஆகியவை உள்ளன. குழந்தைகள் தங்களைச் சுற்றிக் காணும் டாஸ்மாக் மனிதர்களும் சினிமா கதாநாயகர்களும், சாதி வெறியாட்டங்களும், ஆள் வைத்து ‘கணக்கு தீர்ப்பதும்' குழந்தைகள் வாழ்விலும் எதிரொலிக்கத்தானே செய்யும்.

பள்ளிக்கூடம் மட்டுமே ஒழுக்கத்தைப் போதித்தால் எல்லாம் சரியாகிவிடுமா?

இன்று பல பள்ளிகளில் குழந்தைகளின் உளவியல் பிரச்சினை களுக்காகத் தனியான ஒரு ஆலோசகர் நியமிக்குமளவுக்கு பிரச்சினை பூதாகரமாகிவிட்டது. ஆனால், குழந்தை உளவியல் ஆலோசகராக ஒரு ஆசிரியர் இருப்பதே சிறந்த கல்விமுறை. அது எவ்வளவு தற்போதைய சூழலுக்கு முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தியவர்தான் கல்யாணி.

பள்ளியில் மது

மூன்று வருடங்களுக்கு முன்பு, ஒருநாள் மதியம் 11- ம் வகுப்பு ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக தலைமை ஆசிரியரான என் அறைக்கு வெளியே நின்றிருந்தனர். அவர்கள் முகங்களில் அளவற்ற பதற்றம். அந்த முகங்களில் தெரிந்த அருவருப்பு என்னைத் திகைக்க வைத்தது. அவர்களில் பெரும்பாலோர் மணமான பெண்கள். ஆண் ஆசிரியர் ஒருவர் மட்டும் என் அருகே வந்து ‘சார்... கொஞ்சம் தனியா வாங்க' என்றழைத்து விஷயத்தைச் சொன்னார். எனக்கும் தலைசுற்றியது.

ஒரு 11- ம் வகுப்பு மாணவி பள்ளிக்கூடத்துக்கு மதுபாட்டில் எடுத்துவந்து மதிய உணவின்போது அதை அருந்தியிருக்கிறார். அதுவே பிரச்சினைக்குக் காரணம். “குழந்தைகளைத் திட்டவே கூடாது. எதுவுமே சொல்லக் கூடாது என்றால்... இதுதான் நடக்கும்” என்றார்கள். இது எனக்கும் சேர்த்து அவர்கள் சொடுக்கிய சாட்டை.

பள்ளி என்பது மிகவும் கட்டுப் பாடான ஒழுக்க சாலை. இது நம் முன்னோர்களால் கட்டமைக்கப்பட்டது. பள்ளித் தலம் அனைத்தும் கோவில் செய்தவர்கள் நாம். இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனே நடவடிக்கை தேவை என்றார்கள் ஆசிரியர்கள். “இந்த மாதிரி கேஸை எல்லாம் பெற்றோரை அழைத்துப் பேசி வெளியே துரத்துங்கள்” என்றும் சொன்னார்கள்.

நான்கு நிலைகள்

எனக்கும் அது சரியென்றே பட்டது. அவர்களைச் சமாதானப்படுத்தி வகுப்புகளுக்கு அனுப்பிவிட்டு நின்றபோதுதான் கவனித்தேன். என் கண்முன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி குனிந்த தலை நிமிராமல் நின்றார் கல்யாணி. வகுப்பறைக்கு மதுபாட்டில் எடுத்து வந்த மாணவி.

என் அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்து கண்களை மூடினேன். ‘பள்ளிக்கே அவமானம்' என்று எனக்குப் பட்டது. உடம்பு நடுங்கியது.

ஒரு வழிகாட்டி ஆலோசகர் (Counseller) வேலை நான்கு படிநிலைகள் கொண்டது என்கிறார் உளவியலாளர் ஆப்ரஹாம் மாஸ்லோ. உணர்வுப்பூர்வ கலக்கம் கொண்ட குழந்தைகளே ஒழுங்கு பிறழ்வை நோக்கி இழுக்கப்படுவார்கள். அதை விளங்கிக்கொள்ள நான்கு படி நிலை களை ஆசிரியர் கையாள வேண்டும்.

(1) பிரச்சினையை முழுமையாக அறிதல் (Presenting Problem)

(2) பிரச்சினையின் வளர்ச்சியைப் பார்த்தல் (Development history)

(3) உளவியல் வரலாறு (குடும்பம், வகுப்பறை, சமூக - உறவு)

(4) பரிசோதனை மற்றும் கலந்துரையாடல்.

கல்யாணி 10-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர். எத்தகைய ஒழுங்கீன வரலாறும் இல்லாத மாணவி. நான் மனதை நடுநிலைப்படுத்தி அவரை உள்ளே அழைத்தேன்.

அவரது அப்பா ஒரு அரசு ஊழியர். தாய் இல்லத்தரசி. அவரது தம்பி இதே பள்ளியில் படிக்கிறார் என்பது உட்படப் பலவற்றை மனதில் நிழலாட வைத்தேன். சிலசமயம் இந்த வயதில் மாலை டியூஷன் (+1, +2-வின் சாபக்கேடு) வகுப்புகளில் கிடைக்கும் தவறான நட்பும் காரணமாக இருக்கலாம்.

யாருக்கு தண்டனை?

அவரிடம் எப்படிப் பேசுவது? அங்கு இன்னமும் நின்றுகொண்டிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள், சிப்பந்திகள் எல்லோரையும் வெளி யேற்றினேன். கல்யாணியை நேருக்கு நேர் சில கேள்விகள் கேட்க வேண்டும். எங்கே இருந்து தொடங்குவது? ஆனால், அவர் என்னைப் பேசவே விடவில்லை.

“எனக்கு டி.சி. கொடுங்க சார். எங்க அப்பாவை உடனே கூப்பிடுங்க. அவரோட பொண்ணு ஸ்கூலுக்குப் பாட்டில் எடுத்துட்டு வந்து குடித்தாள். அதனால டி.சி. கொடுத்துட்டாங்கன்னு அவருக்குத் தெரியட்டும். அப்பவாவது அவர் குடியை நிறுத்தணும்... தெனமும் குடிச்சிட்டு வந்து குடும்ப மானமே போவுது சார்” என்றார்.

நான் எழுந்து நின்றேன்.

தண்டனை பெற வேண்டியது யார்? கல்யாணியா, அவரது அப்பாவா?

உதாரணங்கள்

இவனோவிச் இவனோவ் ரஷ்ய நாட்டின் பள்ளிக் கல்விமுறையின் தந்தை. சமூகத்தை முழுமையாய் உள்ளடக்கிய கல்வியை அவர் அறிமுகம் செய்தார். குழந்தைகள் முன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனப் பெரியவர்களுக்குப் பயிற்சியளித்து, குழந்தை திரும்பிய பக்கமெல்லாம் ஒழுக்கத்தின் வேர்களையும் தேசப்பற்று, சுய கட்டுப்பாடு எனும் விதைகளையும் விதைத்துக் கல்விக்குப் புதிய பாதை அமைத்தார் இவனோவ்.

இன்றைய தமிழகச் சூழலில் குழந்தைகளுக்குத் தேவை அறிவுரைகள் அல்ல... வாழும் உதாரணங்கள். அதற்கு ஆசிரியர் மட்டுமே போதாது.

ஆனால், குழந்தைகளின் ஒழுங்கீனச் செயல் ஒவ்வொன்றுக்கும் பின்னே ஒரு நோக்கம் ஒளிந்து கிடக்கிறது என்பதை எனக்குப் புரியவைத்த மாணவி கல்யாணி. தற்போது தான் விரும்பிய ஒரு நர்ஸிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார் என்பதைக் குறிப்பிடா விட்டால் கோபித்துக் கொள்வார்.

- கட்டுரையாளர் சிறார் இலக்கியத்துக்காக சாகித்ய அகாடமியால் வழங்கப்படும் பால சாகித்ய புரஸ்கர் விருதை, ‘விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ எனும் தொகுப்புக்காக 2014-ம் ஆண்டில் பெற்றவர்.தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்