கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜஸ்டின் வெர்பில் (Justin Werfel), மற்றும் யானீர் பார்-யாம் (Yaneer Bar-Yam) ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டொனல்ட் இங்பெர் (Donald E. Ingber) ஆகியோர் Programed death is favored by natural selection in spatial systems எனும் தங்களது கட்டுரையில் கணினி உதவியுடன் சிமுலேஷன் முறைப்படி பரிணாமத்தில் உயிரியின் உயிரியல் ஆயுள் தேர்வு எப்படி நடைபெறுகிறது என ஆராய்ந்துள்ளனர்.
எதிர்காலச் சந்ததியினருக்காக இயற்கை வளங்களை விட்டுவைக்கும் படியான பரிணாமத்தின் மரபணு ஏற்பாட்டின் வடிவமே முதுமை என்று அவர்களின் ஆய்வு தடாலடியாகக் கூறுகிறது. பரிணாம வளர்ச்சி ஏற்படுத்தியதே உயிரியல் ஆயுள் வரம்பு என்றும் முதுமை என்பது உடலின் தப்பிக்க முடியாத தேய்மானம் அல்ல என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கட்டாயம் பெரும் விவாதத்தை உருவாக்கக்கூடியது இந்த ஆய்வு. இது உண்மை என்றால் முதுமையும் ஒரு நோய்தான் என கருதப்படும். அதற்கு மருத்துவம் செய்யலாம். முதுமையைத் தூண்டும் மரபணுக்களின் செயல்பாட்டை நிறுத்தலாம். ஆயுளைப் பல மடங்கு நீட்டலாம்.
பிறக்கும் எல்லாம் இறப்பது இல்லை
டர்ரிடோப்சிஸ் டோஹ்ரினி (Turritopsis dohrnii) எனும் ஒரு வகை ஜெல்லி மீன் முட்டை போடும் பருவத்துக்கு வந்ததும் தன்னைத் தானே மறுபடியும் குழந்தை நிலைக்கு மாற்றிக்கொள்கிறது. டர்ரிடோப்சிஸ் நியூட்ரிகுலா (Turritopsis nutricula) என்பது இன்னொரு வகை ஜெல்லி மீன். அது இன்னும் ஒருபடி முன்னே செல்கிறது. ஒரு தடவை அல்ல, பலதடவை அது தன்னை மீண்டும் இளமையாக்கிக்கொள்கிறது. எதிரிகளால் வேட்டையாடப்பட்டோ நோய்வாய்ப்பட்டோ இறந்தால் தவிர இந்த ஜெல்லி மீன்கள் சாகாது.
நுண்ணுயிரி பாக்டீரியாவும் மறுபடி மறுபடி இரண்டிரண்டு புதிய செல்களாகப் பிரிந்து வளர்வதால் அதற்கும் மரணமே இல்லை எனலாம்.
அமெரிக்காவில் நெவேடாவில் உள்ள மெத்துசெலா மரம் சுமார் 5,000 ஆண்டுகள் பழமையானது.
நீண்ட நாள் வாழ்ந்தவர் எனும் உலகச் சாதனையை இன்றுவரை படைத்திருப்பவர் ஜீன் கல்மான் (Jeanne Calment) எனும் பிரெஞ்ச் பெண்மணி. அவர் 122 வயது வரை உயிரோடு வாழ்ந்தார்.
தாத்தா- பாட்டி காலம்
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஸ்வாசிலாந்து எனும் நாட்டில் மனிதரின் சராசரி ஆயுள் வெறும் 31.99 ஆண்டுகள்தான். ஜப்பானில் இது 82 ஆண்டுகள். 2011-ல் இந்தியரின் சராசரி ஆயுள் 66.8 ஆண்டுகள்.
சுமார் இரண்டு லட்சம் ஆண்டு கால மனிதப் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றில் மனிதரின் சராசரி ஆயுள் 30 ஆண்டுகளைத் தாண்டியது சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்கின்றனர் ரேஷேல் காஸ்பரி மற்றும் சங்-ஹீ லீ என்னும் ஆய்வாளர்கள். இந்தக் காலத்தில்தான் முதன்முறையாகப் பாட்டியையும் தாத்தாவையும் கொண்ட குடும்பங்கள் பரவலாக ஆகியிருக்கும் என்கிறார்கள். அதை ‘தாத்தா-பாட்டிகளின் பரிணாமம்’ என்று வகைப்படுத்துகிறார்கள்.
உயிரியல் ஆயுள்
கழுதையின் உயிரியல் ஆயுள் சுமார் 15 ஆண்டுகள். எறும்புக்கு 3. எருதுக்கு 28. யானைக்கு 70. முயலுக்கு 9. மனிதரின் ஆயுள் சுமார் 120 என மதிப்பிட்டுள்ளனர். மனிதரின் உயிரியல் ஆயுளை அதிகரிக்க முடியுமா? எவ்வளவுதான் மருத்துவம் உள்ளிட்டவை வளர்ந்தாலும் மனித ஆயுளுக்கு ஏதாவது அதிகபட்ச வரையறை உண்டா? என்ற கேள்வி எழுந்தது. உண்டு என்றுதான் சமீபகாலம்வரை விஞ்ஞானிகள் கருதினார்கள்.
கேட்டல், பார்வை உள்ளிட்ட உடலின் பல செயல்கள் வயது கூடக்கூட மெல்ல மெல்ல குன்றுகின்றன. இதைத்தான் முதுமை என்கிறோம். இளமைப் பருவத்தில் அழியும் செல்களுக்கு இணையாகக் கூடுதல் செல்கள் தோன்றுகின்றன. ஆனால், முதுமையில் புதிய செல்கள் தோன்றுவது குறைகின்றன. மேலும், திசுக்கள் வலுவிழந்துபோகின்றன.
மனிதர்கள் மட்டுமல்ல, ஆடு, மாடு முதலாக, மரம், செடி வரையிலான உயிரிகளில் முதுமை தெளிவாகத் தென்படுகிறது. முதுமையும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் இயற்கை மரணமும் உடலில் ஏற்படும் தேய்மானத்தால்தான்.
சாதாரண பென்சிலால் ஏறத்தாழ 56 கி.மீ. தொலைவுக்குக் கோடு போடலாம். அதன் பின் தேய்ந்து ‘மடிந்து' விடும். வாகனங்களின் டயர் குறிப்பிட்ட தொலைவு ஓடியதும் தேய்ந்துவிடும். அதேபோல உயிரிகளிலும் தேய்மானம் ஏற்பட்டுக் காலப்போக்கில் ‘நரை கூடிக் கிழப் பருவம் எய்திப் பெரும் கூற்றுக்கு இரையென’ உயிரிகள் மடியும்.
உடலின் புத்தாக்கம்
சக்கரம் தேயலாம், கருவிகள் பழுதாகலாம். ஆனால், உயிரியின் செல்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக்கொள்பவை. தினமும் ஒரு கோடி செல்கள் நமது உடலில் மடிகின்றன. மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடல்சுவர்ப் படலம் (mucosa) புதிதாக ஏற்படுகிறது. தோலில் உள்ள செல்கள் 30 நாட்களுக்கு ஒரு முறை புதிதாக உருவாகின்றன. எலி, திமிங்கிலம் போன்ற விலங்குகளின் பற்கள் தேயத் தேயப் புதுப் பற்கள் முளைக்கின்றன. எனவே, பென்சில் அல்லது டயருடன் நமது உடலை ஒப்பிட முடியாது.
முதுமை ஏன்?
அப்படியானால் முதுமை ஏன் ஏற்படுகிறது? ஒவ்வொரு செல்லும் சுமார் 50 முறை புதிய செல்களை உருவாக்கிவிட்டுப் பிறகு மடிந்து விடுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். அதன்பின் அந்தச் செல்கள் பிரிவது இல்லை. சிதைந்து மடிந்துவிடுகின்றன. குறிப்பிட்ட செல்தான் 50 முறை புத்தாக்கம் பெற்ற செல் என்பதை எப்படி அறிந்துகொள்வது? செல் மரணம் (cell death) எப்படி ஏற்படுகிறது? செல் மரணம் குறித்த மர்மத்தைச் சமீபத்தில் விஞ்ஞானிகள் அவிழ்த்துள்ளனர்.
கண்களில் உள்ள ரெட்டினா செல்கள் பார்வைத் திறன் பெற PDGF போன்ற புரதங்களை உமிழ வேண்டும். செல் முதுமை அடைய அடைய அது பழுதுபடும். முழுவதும் பழுதுபட்டுச் செயலிழக்கும் முன்பாக, அந்தச் செல் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் செயலே செல் பிரிதல் ஆகும்.
செல் பிரிந்து புதிய செல் உருவாகும்போது பழைய பழுதுகள் களையப்பட்டுச் செல்கள் புத்தாக்கம் பெறும். இந்தப் புத்தாக்கம்தான் உயிரிகளின் உடல் தேய்மானத்துக்கும் உயிரற்ற பொருட்களின் தேய்மானத் துக்குமான வேறுபாடாக இருக்கிறது.
செல் சிதைவு
டி. என்.ஏ. தொடரில் உள்ள டெலோமெர்ஸ் (பெட்டிச் செய்தியைக் காண்க) சங்கிலிகள் நாம் வயதாக வயதாக நீளத்தில் குறைந்துகொண்டே போகின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, ஒவ்வொரு முறையும் செல் பிரிதல் ஏற்படும்போது டெலோமெர்ஸ் தொடரின் நீளம் சற்றே குறைகிறது. ஆகவே, இந்த டெலோமெர்ஸ்கள் மிகவும் சுருங்கிய பின்னர், நம் உடலில் செல்கள் பிரியும்போது, டி.என்.ஏ-வின் முக்கியமான பகுதிகளைப் பாதிக்கத் தொடங்குகின்றன. இதனால், சரியாக டி.என்.ஏ. பிரதி எடுக்கப்படுவதில்லை. இது டி.என்.ஏ-வை கெடச் செய்கிறது. செல்களைப் பலவீனப்படுத்துகிறது. குறிப்பிட்ட கட்டத்தில் செல் பிரிந்து புத்தாக்கம் நடைபெறாமல் போகிறது. இதுவே முதுமை.
ஒருமுறை சாவி கொடுக்கப்பட்ட கடிகாரம் இயங்கி நின்றுபோவது போல டெலோமெர்ஸ் நீளம் சுருங்கச் சுருங்கச் செல் செயல்பாடு குன்றி இறுதியில் மடிந்துபோகிறது. இதுவே செல் மரணம். டெலோமெர்ஸ் நீளம் சுருங்குவதுதான் செல்களின் மெய்யான தேய்மானம்.
டெலோமெர்ஸ் மற்றும் அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் டெலோமெரேஸ் எனும் என்ஸைம் குறித்த ஆய்வுகளுக்காக எலிசபெத் ப்ளாக்பர்ன் (Elizabeth H. Blackburn) கார்ல் க்ரெய்டர் (Carol W. Greider) ஜேக் ஸோஸ்டக் (Jack W. Szostak) ஆகிய மூவருக்கும் 2009- ல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
தேர்வு இயற்கையா, செயற்கையா?
உயிரின் லட்சியங்கள் இரண்டு. ஒன்று நீண்ட நாள் வாழப் போராடுவது. இரண்டாவது அடுத்த தலைமுறையைப் பெற்று வளர்த்து ஆளாக்குவது. எனவே, ஒரு உயிரியின் உயிரியல் ஆயுள் அதன் குழந்தைப்பேறு வயதை விடச் சற்றே அதிகமாக இருக்க வேண்டும். அந்த உயிரியின் உடலால் எவ்வளவு காலம் பழுதின்றி இருக்க முடியுமோ அவ்வளவு காலம் அதன் உயிரியல் ஆயுள் இருக்க வேண்டும் அல்லவா?
இதுவரை பரிணாம ஆய்வாளர்கள் பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு உயிரிகளின் இயற்கை வரையறை அனுமதிக்கும் அதிகபட்ச உயிரியல் ஆயுளைத் தேர்வு செய்யும் என்றுதான் கருதியிருந்தனர். இயற்கை மரணம் பொதுவாக, அதிகபட்ச உயிரியல் ஆயுளில்தான் ஏற்படும் எனக் கருதினர்.
ஆனால், உள்ளபடியே உயிரியல் ஆயுள் என்பது ஒரு உயிரியின் இயல்புத் திறனுக்கு ஏற்ப இல்லாமல், அந்த உயிரி வாழும் குறிப்பிட்ட சூழலில் உள்ள வளங்களைப் பொருத்து, பரிணாமத்தால் செயற்கையாக அமைக்கப்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். பார்-யாம் முதலியோரின் ஆய்வு ஒரு உயிரியின் உடலின் அதிகபட்ச வாய்ப்புக்கும் குறைவாகவே யதார்த்தமான பரிணாமம் தேர்வு செய்யும் உயிரியல் ஆயுள் அமைந்துள்ளது என்று கூறுகிறது.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை
பின்லாந்து நாட்டில் மொத்த மக்கள்தொகையில் இளைஞர்களின் பங்கு குறைவு. அங்கே 68 வயதில்தான் பணிமூப்பு. ஜெர்மனியில் 65. இந்தியாவில் மத்திய அரசில் 60 ஆக உள்ளது. பணிமூப்பு வயது உயர உயர, புதிதாகப் படித்துவிட்டு வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறையும். அதுபோலத்தான் அளவான இயற்கை வளம் மட்டுமே உள்ளபோது, குறிப்பிட்ட ஒரு உயிரி நீண்ட நாள் வாழ்ந்தால், அதுவே அதன் அடுத்த தலைமுறையின் வாய்ப்பைப் பறிக்கும். இறுதியில் அந்த உயிரினமே அழியும் ஆபத்து ஏற்படும்.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போன்ற இந்த எதிரும் புதிருமான இக்கட்டான நிலையில் பரிணாம இயற்கைத் தேர்வு ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஏற்ப, உயிரியல் ஆயுளைத் தேர்வு செய்கிறது எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.
சலவை இயந்திரமா, தொடுதிரைக் கைபேசியா?
கணினியை நீண்ட நேரம் இயக் காமல் இருந்தால் அது தானாகவே உறக்க நிலைக்குச் சென்றுவிடும். தானியங்கி சலவை இயந்திரம் தனது பணியைப் பூர்த்தி செய்யத் தேவையான காலம் இயங்கிவிட்டுத் தானே நின்றுவிடும். தொடுதிரைக் கைபேசியின் (touch phone) திரை ஒளிர்வும் தானே அணைந்துவிடுகிறது. அது 30 விநாடியா, ஒரு நிமிடமா என்பதை நாம்தான் அமைக்கிறோம்.
இதுவரை, முதுமை என்பது சலவை இயந்திரம் போலக் குறிப்பிட்ட காலத்தில் தானே ஏற்படும் உள்ளார்ந்த இயல்பான, இயற்கை நிகழ்வு எனக் கருதினார்கள். ஆனால், இந்த ஆய்வு உள்ளபடியே முதுமையைத் தூண்டும் மரபணு முடுக்கிகளை நாமே ‘செட்’ செய்துகொள்ளலாம் எனக் காட்டுகிறது.
அதுபோலத்தான் பரிணாமமும் ஒரு உயிரி அடுத்த தலைமுறையைப் பெற்று ஆளாக்கத் தேவையான கால அவகாசம் தருகிறது. அது ஒருபுறமும், உயிரியின் வாழ்நாள் அதிகரிக்க அதிகரிக்க அது இயற்கைவளம் மீது தாக்கம் செலுத்தி அடுத்த தலைமுறைக்குப் பாதகம் செய்யும் வாய்ப்பை இன்னொரு புறமும் வைத்துக்கொள்கிறது. இந்த இரண்டையும் கணக்கிட்டு, பொருத்தமான அளவில் பரிணாம வளர்ச்சி இயற்கைத் தேர்வில் ஒவ்வொரு உயிரியின் உயிரியல் ஆயுளை அமைத்துள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நலிவுமில்லை, சாவுமில்லை!
அப்படி என்றால் என்ன பொருள்? மரணத்தையும் முதுமையையும் கூட்டலாம், குறைக்கலாம்தானே? கைபேசியில் ‘செட்டிங்ஸ்’ சென்று மாற்றுவது போல மரபணுக்குள்ளே போய் மாற்றம் செய்து ஆயுளைக் கூட்டலாம். முதுமை என்பது உள்ளார்ந்த இயல்பு இல்லை. பரிணாமம் ஏற்படுத்திய வரையறைதான்.
சுமார் 40 வயதில் கண்பார்வை மங்குவதும் பரிணாமம் ஏற்படுத்திய வரையறைதான். மூக்கு கண்ணாடி அணிந்து அல்லது கண் அறுவைச் சிகிச்சை செய்து கண் பார்வையை மீண்டும் பெறுவதுபோல உயிரியல் ஆயுளுக்குப் பரிணாமம் போட்ட எல்லைக் கோட்டை அழித்துப் புதிய இடத்தில் கோடு போடும் வாய்ப்பு உள்ளது என்கிறது இந்த ஆய்வு.
இப்போது இருக்கும் 100 முதல் 120 வயதுதான் வரம்பா? மனித உயிரியல் ஆயுளுக்கு ஏதாவது வரம்பு உண்டா? இருக்கலாம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். சாகா வரம் பெற முடியாது. ஆனாலும் உயிரியல் ஆயுளைப் பல மடங்கு கூட்டலாம் என்கின்றனர் இவர்கள்.
செல் புத்தாக்கம்
செல் பிரிந்து புத்தாக்கம் பெறுவது என்றால் என்ன?
மனித செல் கருவினுள் டி.என்.ஏ. எனும் மூலக்கூறு சற்றே சுருள வைத்த ஏணி போல இருக்கும். இந்த ஒவ்வொரு ஏணியிலும் குரோமோசோம் என அழைக்கப்படும் 23 ஜோடி (மொத்தம் 46 குரோமோசோம்கள்) இருக்கும்.
ஒவ்வொரு குரோமோசோமின் டி.என்.ஏ. மூலக்கூறுகளும் பிரதி எடுக்கப்பட்டுப் புதிய செல் கரு, செல் சுவர் முதலியவை உருவாக்கப்பட்டுப் புதிதாக இரண்டு செல்கள் பிரியும்.
இந்தச் செல் பிரிதல் செயலில் முக்கியமான பங்கு வகிப்பது டெலோமெர்ஸ் (telomeres) எனப்படும் குரோமோசோம்களின் முனைப் பகுதிகள்தான்.
பெண்களின் தலைப்பின்னலின் அடியில் குஞ்சம் அல்லது ரிப்பன் வைக்கவில்லை என்றால் பின்னலின் வடிவம் பிரிந்துவிடலாம் அல்லவா?
அதுபோல, ஒரு செல் தானே இரண்டாகப் பிரிந்து புதிய செல்களை உருவாக்கும்போது டி.என்.ஏ-வின் வடிவில் குலைவு ஏற்படாமல் தடுப்பவை இந்த டெலோமெர்ஸ்தான். மேலும், செல் பிரிதலில் இந்த டி.என்.ஏ மூலக்கூறுகள் தவறான முறையில் பிரதி எடுக்கப்படக் கூடாது.
பிரதி எடுக்கும் வேலையைச் சரிபார்த்துப் பழுது நீக்குவதில் டெலோமெர்ஸ் முக்கியமான பங்கு வகிக்கின்றன. சங்கிலியில் கண்ணிகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து இருப்பது போலக் குறிப்பிட்ட டி. என்.ஏ. தொடரில் மறுபடி மறுபடி அமையும் தொடராகத்தான் டெலோமெர்ஸ் இருக்கும்.
சராசரி ஆயுள்
பண்டைய கிரேக்கத்தில் சராசரி மனித ஆயுள் வெறும் 20-35 ஆண்டுகள்தான். கி.பி. 1500 முதல் 1800-கள் வரை ஐரோப்பாவில் சராசரி ஆயுள் 30-லிருந்து 40-ஆக உயர்ந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை, 1820- ல் சராசரி ஆயுள் 21 ஆண்டுகள். நாடு விடுதலை அடைந்த பிறகு, 1950-ல் 32- ஆக உயர்ந்தது.
பொதுச் சுகாதாரம், தடுப்பூசிகள், பொது மருத்துவம், நோய் எதிர்ப்பு நவீன மருந்துகள், வன்முறையில் நிகழும் இறப்பு குறைதல் முதலியன காரணமாக, சராசரி ஆயுள் காலம் கூடியுள்ளது.
எனவே, சராசரி ஆயுள் என்பது உள்ளார்ந்த உயிரியல் சார்ந்து அமைவதில்லை. உணவு, சமூக அமைப்பு, பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்ட சமூகம் சார்ந்த காரணங்களைச் சார்ந்தே அமைகிறது.
எனவேதான், சராசரி ஆயுள், நீண்ட காலம் உயிர்வாழ்ந்த சாதனை முதலியவை தவிர உயிரியல் ஆயுள் காலம் எனும் ஒன்றையும் விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.
உயிரியல் ஆயுள் காலம் என்பது உணவு இல்லாமை, எதிரிகளால் வேட்டையாடப்படுதல் போன்ற சாவுகள் இல்லையென்றால் அந்த உயிரியால் அதிகபட்சமாக எவ்வளவு நாள் வாழ முடியும் என்பதே.
500 ஆண்டு வாழ்க!
மனிதரின் உயிரியல் ஆயுளை ஐந்திலிருந்து 10 மடங்கு கூட்ட முடியும் என்கிறார் விஞ்ஞானி பார் - யாம். அதாவது, சுமார் 500 ஆண்டுகள் வாழ முடியும். மேலும் “நூற்புழுக்களில் (nematodes) மரபணு மாற்றம் செய்தபோது அவற்றின் வாழ்நாள் 5-லிருந்து 10 மடங்கு உயர்ந்துள்ளது” என்றும் அவர் கூறுகிறார்.
ஆயுளை அதிகரிக்க மரபணு மாற்றம் மட்டுமே ஒரே வழி என்பதையும் மறுக்கிறார் பார் - யாம். வைட்டமின்கள், குறிப்பிட்ட சுரப்பிகள் மீது செயல்புரியும் மருந்துகள் முதலியவையும் ஆயுளை அதிகரிக்க வழி செய்யும் என்கிறார் அவர். உதாரணமாக, குஞ்சு பொரித்ததும் இயல்பாக ஆக்டோபஸ் மடிந்துவிடும். ஆனால், அதன் குறிப்பிட்ட சுரப்பியை நீக்கிவிட்டால் தொடர்ந்து அது உயிர்வாழ்கிறது.
வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும் GDF11 எனும் புரதம் செலுத்தப்பட்ட சோதனை எலிகளுக்கு முதுமை வரவில்லை. நீண்ட காலம் இளமையாக இருந்தன. அதேபோல, சோதனைச் சாலையில் மனித செல்களின் டெலோமெர்ஸ் நீளத்தைச் செயற்கையாகக் கூட்டியபோது அந்தச் செல்கள் கூடுதல் காலம் முதுமை அடையாமல் இருந்தன.
ஏற்கெனவே பஞ்சமும் பசியும் உள்ள நிலையில் மனித ஆயுளை அதிகரிப்பது என்பது ஆபத்தானது என்ற கருத்து எழும். அதற்கும் பதில் தருகிறார் விஞ்ஞானி பார்-யாம். இன்றைக்கு உற்பத்தியாகும் உணவை எல்லோருக்கும் விநியோகிக்காததே பசி, பஞ்சத்துக்குக் காரணம். இன்றைய உற்பத்தி தொழில்நுட்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இப்போதுள்ள மனிதர்களைவிட இன்னும் பல மடங்கு மனிதர்களுக்கு உணவு தர முடியும் என்கிறார் இவர்.
இனிமேல் மனிதர்களின் உயிரை எடுத்துச்செல்ல வரும் எமனையும் நாம் மெதுவாகக் கொல்லத் தொடங்கலாம்.
கட்டுரையாளர் விஞ்ஞான் பிரச்சார் நிறுவன விஞ்ஞானி
தொடர்புக்கு: tvv123@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago