லட்சத் தீவு என்றால் லட்சக்கணக்கில் உள்ள தீவு என்று பொருள். ஆனால் இருப்பது 36-தான். அதிலும் மக்கள் வசிப்பது 10 தீவுகளில்தான். கடலுக்கடியில் நீளும் சாக்கோஸ்- லக்காதீவ் மலைத்தொடரின் வெளியில் தெரியும் மலையின் உச்சிப் பகுதிகளே இந்தத் தீவுகள். ஆதலால் இது கடலும் கடல் சார்ந்த நெய்தலும் மலையும் மலை சார்ந்த குறிஞ்சியும் கலந்த தேசம்.
தீவின் கதை
இந்தத் தீவில் பூர்வகுடிமக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. அரபிக்கடலில் இப்படி ஒரு தீவு இருப்பது வெளியுலகுக்குத் தெரியவந்த கதை சுவாரஸ்யமானது. இஸ்லாம் மதம் மீது ஏற்பட்ட பற்று காரணமாக, சேர வம்சத்தின் கடைசி அரசர் சேரமான் பெருமாள் ரகசியமாக அரேபிய வர்த்தகர்களின் கப்பலில் ஏறி மெக்காவுக்குச் சென்றார்.
இதை அறிந்து அவரைத் தேடிச் சென்ற குழுவினர், புயலில் சிக்கி நடுக்கடலில் தீவு ஒன்றில் (தற்போதைய பாங்காராம் தீவு) தஞ்சம் புகுந்தனர். புயல் ஓய்ந்ததும் மீண்டும் கண்ணனூர் கிளம்பினார்கள். வழியில் மேலும் சில தீவுகளைப் பார்த்தார்கள். நாடு திரும்பியதும் இதுகுறித்து அரசனிடம் தெரிவித்தார்கள். இதையடுத்து, அங்குக் குடியேறி விவசாயம் செய்யும் மக்களுக்கு அந்த நிலம் சொந்தம் என அரசன் அறிவித்தார். அதனால் அமினித் தீவில் முதல் குடியேற்றம் நிகழ்ந்தது என்கிறது உள்ளூர் கதை. ஆனால், எந்த ஆதாரமும் இல்லை.
பரிசோதனைக் களம்
இந்த தீவுகளை பல்லவ ராஜ்ஜியமும் சோழர்களும் அடுத்தடுத்த காலகட்டங்களில் ஆண்டுள்ளனர். போர்த்துகீசியர்கள், கொளத்துநாடு வம்சம், சிராக்கல் மற்றும் அராக்கல் மன்னர்கள் எனப் படிப்படியாகத் தீவுகள் கை மாறின. 1783-ல் மைசூர் அரசன் திப்பு சுல்தான் வசம் அமினி குழுமத்தீவுகள் சென்றன. 1799-ல் ரங்கப்பட்டினம் போரில் திப்புவை வீழ்த்திய ஆங்கிலேயர்கள் மைசூரையும் அமினி தீவுக்கூட்டங்களையும் கைப்பற்றினார்கள்.
இந்த நிலையில் சிராக்கல் ராஜா நிர்வகித்து வந்த அன்டோர்ட் தீவு 1847-ல் வீசிய கடும் புயலால் பாதிக்கப்பட்டது. இதைச் சரிசெய்ய ஆங்கிலேய அதிகாரி வில்லியம் ராபினிடம் சிராக்கல் ராஜா வட்டிக்குக் கடன் பெற்றார். 4 ஆண்டுகளில் வட்டி பெருகிட, கடனுக்கு ஈடாக மீதமுள்ள தீவுகளும் ஆங்கிலேயருக்குத் தாரை வார்க்கப்பட்டன. அது முதல் தீவுக்கூட்டங்கள் அனைத்தும் ஆங்கிலேயர் வசமாகின.
ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை அமலாக்கி வெற்றி கண்ட பரிசோதனைக் களம்தான் லட்சத் தீவு. இதையே இந்தியாவிலும் அமலாக்கி வெற்றியும் கண்டார்கள்.
மிகச் சிறிய யூனியன்
இந்தியா விடுதலை ஆனபிறகு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன்படி இது யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. 1973-ல்தான் இதற்கு லட்சத்தீவு எனப் பெயர் சூட்டப்பட்டது.
இந்திய யூனியன் பிரதேசங்களில் இது மிகச் சிறியது. பவளப்பாறைகள் நிரம்பிய ஒரே தீவுக்கூட்டம். இதன் மொத்தப் பரப்பு 32 சதுர கி.மீதான். 12 பவளத் தீவுகள், 3 திட்டுகள் மற்றும் 5 நீரில் மூழ்கிய பகுதிகள் காணப்படுகின்றன. அகத்தி, அன்டோர்ட், பிட்ரா, செட்லட், காட்மாத், கல்பேனி, கவரத்தி மற்றும் கில்டன் ஆகிய தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள். பல தீவுகளில் மனித நடமாட்டமே இல்லை.
மொத்த தீவுக்கூட்டமும் ஒரே மாவட்டமாகக் கருதப்படுகிறது. இதன் தலைநகரம் கவரத்தி. நிர்வாக அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
இஸ்லாம் பரவிய கதை
எழுத்தறிவு 81.78 சதவீதம். மக்கள் தொகை 64,429 பேர். முதன்மை மதம் இஸ்லாம். அந்த மதத்தை 93 சதவீதம் பேர் பின்பற்றுகிறார்கள். இந்து மதத்தை 4 சதவீதம் பேரும் மற்ற மதங்களை 3 சதவீதம் பேரும் பின்பற்றுகிறார்கள் .
கனவில் தோன்றி இறைவன் இட்ட கட்டளையை ஏற்று, 7-ம் நூற்றாண்டு வாக்கில் மெக்காவிலிருந்து புறப்பட்டவர் உபயதுல்லா என்பவர். கடலில் பயணமாகிப் புயலில் சிக்கி, அமினி தீவு வந்து சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கு இஸ்லாத்தை பரப்பியவருக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இளம் பெண் ஒருவர் உபயதுல்லா மீது காதல் வயப்பட்டுத் தனது பெயரை ஹமீதத் பீவி என்று மாற்றி அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இதில் கடும் கோபமுற்று மக்கள் அவரைக் கொல்ல முயன்றபோது அனைவரின் கண்களையும் மறைத்துத் தப்பினார். இடைவிடாத பிரச்சாரத்தால் அன்டோர்ட் தீவு மக்கள் இஸ்லாமுக்கு மாறினார்கள். படிப்படியாக அனைத்துத் தீவு மக்களும் மதம் மாறினார்கள். அன்டோர்ட்டில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. உபயதுல்லாவின் பெருமை இலங்கை, பர்மா, மலேசியா வரை பரவியிருக்கிறது. இந்தப் பாரம்பரியம்தான் இங்கு இஸ்லாம் மதம் கோலோச்சக் காரணமாக உள்ளது.
மொழிகள்
மினிகாய் தீவு மக்களைத் (மலாய் மொழி) தவிர மற்றவர்கள் பேசும் மொழி மலையாளம். மேலும் ஜெசேரி, அர்வி மொழிகள் போன்று தமிழ், மலையாளம் மற்றும் அரபி கலந்த பேச்சுவழக்கும் உண்டு. ஏறக்குறைய அனைவரும் பழங்குடியினராகவே வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தலித் மக்கள் இல்லை.
தேங்காய் உற்பத்தி
தாது வளம் நிரம்பிய கடற்கரைகளைக் கொண்ட பகுதி. சூறை மீன்கள் அதிகளவில் கிடைக்கின்றன. வேளாண்மையைப் பொறுத்தவரை தேங்காய் உற்பத்தியே பிரதானம். கிட்டத்தட்ட 7 லட்சம் தென்னை மரங்கள் இருக்கின்றன. மீன்பிடித்தல், தென்னை வளர்ப்பு, கயிறு திரித்தல் மற்றும் சுற்றுலா ஆகியவை முக்கியமான தொழில்.
சமூக அமைப்பு
பெண்களுக்குப் பொருளாதார ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ‘மருமக்கா ஆதாயம்’ என்ற சொத்து உரிமை அளிக்கப்பட்டுள்ளது. மனைவியின் பராமரிப்புக்கென ஆண்டுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் பேரிலேயே திருமணம் நடக்கும். கட்டணம் செலுத்தத் தவறினால் விவகாரத்து செய்யவும் அதன்பிறகு வேறு ஒருவரை மணக்கவும் பெண்னுக்கு உரிமை உண்டு. விதவைகள் மறுமணம் செய்யவும் தடையில்லை.
லாவா நடனம், கொல்காளி நடனம் மற்றும் பாரிச்சாக்கிளி நடனம் ஆகியவை நிகழ்த்து கலைகளாக உள்ளன.
காவல்காரன்
இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் லட்சத்தீவு முக்கியமானது. கடலின் அழகோடு இயற்கை கொஞ்சும் நிலப்பரப்பு, பவளத்தீவுகள் எனக் காண்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. கவரத்தியில் உள்ள மீன் அருங்காட்சியகம் கவனத்தை ஈர்க்கிறது. கவரத்தியில் கடற்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்குக் கடலில் இந்தியாவின் கடல் வழித்தடங்களைக் கண்காணிக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உகந்த இடமாக லட்சத்தீவுகள் உள்ளன. இந்தியத் தீபகற்பத்துக்கு வெளியே நாட்டைக் காக்கும் காவல்காரர்களைப்போல பரவி நிற்கிறது லட்சத்தீவு.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago