பக்கத்து வீட்டு அனிதா 10-ம் வகுப்பு தேர்வில் 96 சதவீதம் பெற்றுவிட்டாள் என அவளுடைய வீடே களைகட்டியது. சரி, நம் தெருவில் இன்னொரு மருத்துவரோ, பொறியாளரோ சீக்கிரம் உருவாகப்போகிறார் எனத் தோன்றியது. ஆனால், நேற்று அனிதாவின் வீடு களேபரமானது. அவளுக்கும் அவளுடைய பெற்றோருக்கும் இடையே காரசார வாக்குவாதம். அப்போது அனிதா அவளுடைய பெற்றோரிடம் கேட்ட ஒரு கேள்வி திகைக்க வைத்தது.
“கலைப் பாடம், அதிலும் பொருளாதாரம் படிக்கத்தான் நான் விரும்புகிறேன். அறிவியல் பாடங்களில் மட்டுமல்ல, சமூகவியல் பாடத்திலும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். எதற்காக அதிகமான மதிப்பெண்கள் வாங்கினாலே அறிவியல் பாடங்களைத்தான் படிக்க வேண்டும் எனக் கண்மூடித்தனமாகச் சொல்லுகிறீர்கள்?” எனக் கேட்டாள் அனிதா.
ஆர்வமும், திறனும்
பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளைப் பிள்ளைகள் பூர்த்தி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கும் நிலையிலிருந்து தமிழ்ச் சமூகம் மெல்ல மெல்ல விடுபட்டுவருகிறது. ஆனால், ஒரே மாதிரி சிந்திக்கும் மனப்பான்மையிலிருந்து இன்னும் மாறவில்லை. அதிகமான மதிப்பெண்கள் எடுப்பவர் எல்லாம் மருத்துவம் அல்லது பொறியியல் பட்டதாரி ஆக வேண்டும் என்பதுதான்அது.
கலை சம்பந்தமான படிப்புகளைத் தேர்ந்தெடுக்கவே கூடாது என்பது அதைவிடவும் முக்கியம். எதுவுமே கிடைக்காத நிலையில்தான் கலைப் பாடங்களில் சரணடைய வேண்டும் எனும் எண்ணம் நிலவுகிறது. அப்படியானால், பாடப்பிரிவிலேயே இது உயர்ந்தது, அது தாழ்ந்தது எனப் பிரிக்கப்படும் நிலை உள்ளது என்றுதானே பொருள்? இது சரியா? அறிவியல் படிப்புகள் மட்டுமல்ல, கலைப் படிப்புகளைப் படித்தாலும் பிரகாசமான எதிர்காலம் நிச்சயம் உள்ளது. உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பைக் காட்டிலும் அந்தத் துறை சார்ந்து நீங்கள் வெளிப்படுத்தும் ஆர்வமும், திறனும்தான்.
நான் யார்?
ஒரு மாணவர் எதைப் படிக்கலாம் என்பதை மதிப்பெண்களை வைத்துத் முடிவு செய்யாமல் அவருடைய விருப்பம், தனித்திறன்களை வைத்து முடிவு செய்வதுதான் சரி. அதற்கு முதலில் என்னுடைய இலக்கு என்ன? நான் என்னவாக விரும்புகிறேன்? எனக்கு மிகவும் பிடித்த பாடம் எது? எனக்கு மிகவும் கடினமான பாடம் எது? குடும்பத்தின் நிதி நிலவரம் என்ன? நான் தேர்ந்தெடுக்க நினைக்கும் படிப்புக்கான வேலை வாய்ப்புகள் என்ன? என்பது போன்ற கேள்விகளை நீங்களே உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் மனம் சொல்லும் விடையை, பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களோடு கலந்துரையாடி உங்களின் அடுத்தகட்டப் படிப்பைத் தேர்ந்தெடுங்கள்.
உயிர் அறிவியல் யாருக்கு?
11-ம் வகுப்பின் அடிப்படையான பாடப் பிரிவுகள் கணிதம் அறிவியல், வணிகம் மற்றும் கலைப் பாடங்களாகும். இயற்கை மீது லயிப்பு, உடற்கூறில் ஆர்வம், கூர்ந்து கவனிக்கும் ஆற்றல், சோதனை மேற்கொள்ளும் மனோபாவம், தேற்றம் படித்தல், தர்க்க ஆய்வில் ஈடுபடுதல் போன்றவை பிரதான அம்சங்கள் என்றால் நீங்கள் அறிவியல் பிரிவை அதன் இணைப் பாடங்களுடன் தேர்ந்தெடுக்கலாம்.
இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடத்தைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் எம்.பி.பி.எஸ் மட்டுமல்லாது பல்வேறு படிப்புகளைக் கல்லூரியில் தேர்ந்தெடுக்க முடியும். அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, உயிரி தொழில்நுட்பம், உயிரி வேதியியல், மீன்வள அறிவியல், கடல் உயிரியல், காட்டியல் மற்றும் வனவிலங்கு, உணவு தொழில்நுட்பம், கடலியல், தாவர வளர்ப்பு, சுற்றுச் சூழலியல் என்று அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
இவை தவிரவும் துணை மருத்துவப் பாடங்களைப் படித்து உடற் பயிற்சி சிகிச்சையாளர், பேச்சு சிகிச்சையாளர், தொழில் சிகிச்சையாளர், மருத்துவச் சோதனைக்கூடம் தொழில்நுட்ப வல்லுநர், ஊட்டச்சத்து நிபுணர் ஆகலாம். மருத்துவ மேலாளர், சோனோக்ராபர் தொழில்நுட்ப வல்லுநர், ஈ.ஈ.ஜி தொழில்நுட்ப வல்லுநர், யோகா நிபுணர் என இன்னும் பல புதிய வேலை வாய்ப்புகளும் அறிவியல் துறைகளில் அதிகரித்து வருகின்றன.
பொறியியல்னா கணினி மட்டுமா?
இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் கணினிப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் பொறியியல் படிப்பைக் கல்லூரியில் தேர்ந்தெடுக்கலாம். பொறியியலில் கணினி பாடம் மட்டுமல்லாமல் எத்தனையோ பாடங்கள் உள்ளன. விண்வெளித் தொழில்துறை, விவசாயம், ஆட்டோமொபைல், பயோ இன்ஃப்மேட்டிக்ஸ், உணவு, தீ, தொழிற்சாலை, தோல், நானோ தொழில்நுட்பம், அச்சு, தொலைத்தொடர்பு எனப் பல பிரிவுகள் பொறியியல் படிப்பில் உள்ளன. உங்கள் விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்துப் பொறியியலில் நிபுணத்துவம் பெறலாம்.
இந்தியாவின் வளர்ச்சி
இன்றைய இளைஞர்கள் பலரின் முதல் விருப்பம் வணிகப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதாக உள்ளது. இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுக்க வர்த்தகத்தில் ஆர்வமும், எண்களைச் சாமர்த்தியமாகக் கையாளும் திறனும், கணித அறிவும் அவசியமாகின்றன. வேகமாக வளர்ந்து வரும் நாடு இந்தியா என்பதால் அதிக எண்ணிக்கையில் பொருளாதார நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தக் கோணத்திலும் வணிகப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கலாம். கணக்குப்பதிவியல், பொருளியல், வணிக ஆய்வுகள், கணிதம் மற்றும் தகவலியல் உள்ளிட்டவை வணிகப் பிரிவின் முதன்மை பாடங்களாகும்.
மற்றப் பாடப் பிரிவுகளைக் காட்டிலும் கலைப் பிரிவைத் தேர்ந்தெடுத்தால் கல்லூரி படிப்பின்போது பலவிதமான பாடங்களைப் படிக்கும் வாய்ப்புகள் உள்ளன. வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், உளவியல், சமூகவியல், மொழிகள், மானுடவியல், மனித வளங்கள், இதழியல் உள்ளிட்ட பல பாடங்கள் வெவ்வேறு கலவையில் 11-ம் வகுப்பில் அளிக்கப்படுகின்றன.
உடனடி வேலைக்கு
பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் இரண்டு ஆண்டுகளைப் படிப்புக்காக எப்படிச் செலவிடுவது எனும் குழப்பம் பலருக்கு குடும்பச் சூழல் காரணமாக இருக்கும். உடனடி வேலை வாய்ப்பு உள்ள தொழில்களைச் சார்ந்த ஐ.டி.ஐ படிப்புகள், பாலிடெக்னிக் படிப்புகள், இணை மருத்துவம் மற்றும் பல்வேறு துணைப் படிப்புகளில் சேரலாம். ஓரிரு மாதங்கள் தொடங்கி ஓராண்டு வரை தொழில் பயிற்சிக் கல்வி அளிக்கும் படிப்புகள் உள்ளன. உதவிக் கட்டிடவியல், கட்டிடக் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, மின்னியல் நிபுணர் பயிற்சி, மின்னணு இயக்கவியல், தச்சுவேலை இப்படி ஐ.டி.ஐ படிப்புகள் ஏராளமாக உள்ளன.
உயிரி தொழில்நுட்பம், வணிக மேலாண்மை, வேதியியல் பொறியியல், சிவில் பொறியியல், ஜமுக்காளத் தொழில்நுட்பம், உயிரி மருத்துவப் பொறியியல், தானியங்கி பொறியியல், விமானப் பொறியியல் எனப் பாலிடெக்னிக்கில் டிப்ளோமா பட்டம் அளிக்கும் படிப்புகள் பல உள்ளன. குறுகிய காலத்தில் பட்டயம் அளிக்கும் துணை மருத்துவப் படிப்புகள் எத்தனையோ இருக்கின்றன.
இவற்றைப் படித்தால் மருத்துவமனை மற்றும் மருத்துவ மையங்களில் உயிரி மருத்துவ உபகரணங்கள் தொழில்நுட்ப வல்லுநர், உதவிச் செவிலியர், அறுவை சிகிச்சை அரங்கத் தொழில்நுட்ப வல்லுநர், எக்ஸ் ரே தொழில்நுட்ப வல்லுநர், மருத்துவப் பதிவு தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட வேலைகள் உடனடியாகக் கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
இயல்பாக உங்கள் மனம் எத்தகைய படிப்பை விரும்புகிறது என்பதை முதலில் அறிந்து, அதற்கேற்ற படிப்பைக் கண்டறிந்து, எதிர்காலத்தை நோக்கி வெற்றி நடை போடுங்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago