எந்த வாகனத்தில் பயணித்தாலும் தஞ்சையை நெருங்கும்போது வானை முட்டும் கோபுரம் வரவேற்கும்.
கோபுரத்தின் உச்சியில் இத்தனை பெரிய விமானமா என்று கண்கள் விரியும். முதல் பார்வையில் பரவசம் தரும் அந்தக் கட்டிட அதிசயம் பிரகதீஸ்வரர் எனும் பெருவுடையார் கோயில்.
தஞ்சையின் சைவச் சமய வாழ்வுக்கும் சோழர்களின் கட்டிடக் கலைக்கும் சான்றாக விளங்கும் இந்தக் கோயிலுக்கு அப்பால், காவிரியை நம்பியிருக்கும் நெல் கழனிகளைத் தவிர தஞ்சையில் வேறு என்ன இருக்கிறது என்று கேட்பவர்களை மராட்டிய அரண்மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
இருக்கும் இடம் தெரியாமல் அரண்மனையின் ஒரு பகுதியில் இயங்கிவரும் ‘சரஸ்வதி மஹால்’ நூலகத்தின் பெருமைகளைப் பேச ஆரம்பித்தால் இங்கே பக்கங்கள் போதாது. இந்த நூலகம், உலகப் புகழ்பெற்று விளங்கக் காரணமாக இருந்தவர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரான இரண்டாம் சரபோஜி (1777-1832).
இவர் தஞ்சையை ஆண்ட மராட்டிய வம்சத்து போன்ஸ்லே பரம்பரையில், ஐந்தாவதாக வந்தவர். இவரது இயற்பெயர் சரபோஜி ராசா போன்ஸ்லே சத்ரபதி. இவர் ‘சரஸ்வதி மஹாலில்’ சமஸ்கிருத நூல்களைப் படிப்பதில் அதிக நேரம் செலவிட்டார். வாசிப்பு வழியே அவர் அறிந்துகொண்ட உலகத்தை நேரில் காண விரும்பினார்.
திருக்குறள் திருப்புமுனை
வட இந்தியாவின் பல இடங்களுக்கும் பயணம் செல்லத் தீர்மானித்தார் சரபோஜி. 1820-ம் ஆண்டு தனது அரண்மனை அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், ஐம்பதுக்கும் அதிகமான ஓவியர்கள் உள்ளிட்ட 300 பேர் கொண்ட குழுவுடன் தஞ்சையிலிருந்து கிளம்பிய சரபோஜி முதலில் முகாமிட்டது காசி மாநகரில்.
கங்கைக் கரையில் தனது மூதாதையர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்தவர், காசியின் புனிதத்தை எடுத்துக்கூறும் ஆலயங்களையும் கங்கையின் பிரம்மாண்டத்தையும் அங்குள்ள 64 படித்துறைகளின் அழகையும் தத்ரூப ஓவியங்களாக வரையச் செய்தார். கையால் தயாரிக்கப்படும் காகிதங்களில் எழுதும் காகிதச் சுவடி முறை புழக்கத்துக்கு வந்துவிட்டிருந்த காலக் கட்டம் அது.
சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு ஏராளமான சமஸ்கிருதக் காகிதச் சுவடி நூல்களைக் காசியில் அவர் வாங்கிக்கொண்டார். பிறகு டெல்லியில் முகாமிட்டவர், ஜும்மா மசூதி, தாஜ்மஹால் உள்ளிட்ட புகழ் பெற்ற கட்டிடங்களைக் கண்டு அவற்றையும் ஓவியங்களாக வரைந்துகொண்டு, காளியைத் தரிசிக்க விரும்பி கல்கத்தாவுக்குப் பயணமானார்.
சரபோஜி கொல்கத்தா வருகிறார் என்ற அரசாங்கத் தாக்கீது கொல்கத்தாவில் ஆங்கில கவர்னர் ஜெனரலான இருந்த மார்க்கஸ் பிரபுக்கு ( Marquess of Hastingsi) சென்னை கவர்னராக இருந்த தாமஸ் மன்றோவிடமிருந்து அனுப்பப்பட்டது. மன்னரை அரச மரியாதையுடன் வரவேற்று அவருக்குத் தங்கும் வசதிகளைச் செய்து கொடுத்த மார்க்கஸ் பிரபு, “திருக்குறளின் தேசத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்.
அந்த நூலைப் பற்றி உங்கள் வழியே முழுமையாக அறிந்துகொள்ள ஆவலாக வந்திருக்கிறேன்” என்று ஒரு மாணவரைப் போலப் பணிவு காட்டினார். ஆனால் திருக்குறள் என்ற வார்த்தையை அப்போதுதான் முதல்முறையாகக் கேள்விப்படுகிறார் சரபோஜி. வெட்கத்தால் தலைகுனிந்த அரசர், அதுபற்றி விரிவாக எடுத்துக்கூற ஏற்ற பண்டிதரைக் கவர்னர் இல்லத்துக்கு விரைவில் அனுப்புதாகக் கூறிச் சமாளிக்க, ஏமாற்றத்துடன் திரும்பினார் கொல்கத்தா கவர்னர்.
தன்னுடன் வந்த 300 பேருக்கும் திருக்குறள் பற்றித் தெரியாததால் நொந்துபோன அரசர், மூன்று ஆண்டுகள் பயணம் முடிந்து தஞ்சை திரும்பியதும் முதல்வேளையாகச் சரஸ்வதி மஹால் நூல் நிலையத்துக்குச் சென்றார். அங்கே திருக்குறள் சுவடியை எடுக்கும்படி காப்பாளரைக் கேட்டபோது “அது இல்லை” என்ற பதில் வந்தது.
கண்டேன் திருக்குறளை
சமஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் வேதம், தத்துவம், ஜோதிடம், நாட்குறிப்பு நிரம்பிய சுவடிகளே அதிகமாக இருக்க, புராணக் கதை கூறும் சில தமிழ்ச் சுவடிகள் மட்டுமே அப்போது நூலகத்தில் இருந்துள்ளன. இதனால் தமிழ்ப் புலவர்களைச் சந்திக்க விரும்பி அவர்களை அழைத்துவரக் கட்டளையிட்டார்.
மக்கள், மன்னன் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது என்ற வாழ்விலக்கணமே திருக்குறள் என்று புலவர்கள் எடுத்துக் கூற 1330 குறட்பாக்களையும் அதற்கான பொருளையும் அறிந்து வியந்தார். இத்தனைச் செழுமையான தமிழ் மொழியில் உருவான முக்கியமானப் படைப்புகள் அனைத்தையும் துருவித் துருவித் தெரிந்துகொண்டார் சரபோஜி.
தனது அதிகாரிகளை அழைத்து தமிழ்ச் சுவடிகள், நூல்களை விலைகொடுத்து வாங்கும்படி உத்தரவிட்டார். தங்களிடம் உள்ள தமிழ் நூல்கள், சுவடிகளை நூலகத்துக்குத் தந்தால் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்.
இப்படிக் குவிந்த தமிழ்ச் சுவடிகளை மறுபடியும் புதிய ஓலைகளில் எழுத தமிழ்ப் பண்டிதர்களை, புலவர்களை வேலைக்கு அமர்த்தினார். நூலகத்தின் ஒரு பகுதியில் அச்சுக்கூடத்தையும் தொடங்கினார். தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சரஸ்வதி மஹால் நூலகத்தின் வளர்ச்சிக்காகவே ஒதுக்கினார்.
அரண்மனை நூலகமாகவே சரஸ்வதி மஹால் சுருங்கிவிடக் கூடாது என்ற ஞானத்தைப் பெற்ற சரபோஜி, உள்நாட்டு அறிஞர்கள், வெளிநாட்டு அறிஞர்கள், நூலகம் வந்து தங்கி ஆய்வுசெய்யும் நூலகமாகப் பொதுப் பயன்பாட்டுக்கு மாற்றினார்.
12-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட நூலகம் என்று சொல்லப்பட்டாலும் இந்த நூலகம் இரண்டாம் சரபோஜியின் பெருமுயற்சியால் 200 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு நூலகமாக எழுந்து நின்றது. சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு அவரது பெயரே தற்போது சூட்டப்பட்டிருக்கிறது. அவரது முழு உருவச் சிலையையும் நூலகத்தின் நுழைவாயிலில் நிறுவி அவரது பங்களிப்புக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
மன்னரின் மறைவுக்குப்பிறகு ஏற்பட்ட மாற்றங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.
- தி இந்து, ‘சித்திரை மலரி’ல் வெளியான கட்டுரையின் சுருக்கமான வடிவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago