கண்ணுக்கு அழகும் முகத்துக்குப் பொலிவும் தருவது மட்டும் அல்ல, கண்கள் உலர்ந்து விடாமலும், பாக்டீரியா முதலிய தூசுகள் கண்களில் விழுந்து விடாமல் தடுக்கும் அரணாகவும் கண் இமையில் உள்ள முடிகள் செயல்படுகின்றன எனச் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று நிறுவியுள்ளது.
முதன் முறையாக அப்பா ஆன மகிழ்ச்சியில் அந்தப் பெண் குழந்தையை ஆசை ஆசையாய்க் கையில் எடுத்துக் கொஞ்சிய டேவிட் ஹு (David Hu) திகைத்துச் சிலையானர். தற்போது ஜார்ஜியா டெக் தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பேராசிரியராக ஆகப் பணிபுரியும் டேவிட் ஹு மகப்பேறு மருத்துவமனையில் அப்போதுதான் பிறந்த குழந்தையை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்தச் சிறு குழந்தையும் கன்னங்கரேல் என்று இருந்த கண்களை உருட்டி, உருட்டி அவரை விழித்துப் பார்த்தது. சின்னக் குஞ்சுபோன்ற குழந்தையை வெப்பக் கை சூட்டில் ஏந்தி நிற்கும் அனுபவம் அவரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது.
அழகு இமைகள்
தலையில் கொஞ்சம் போல முடி; கரும் கண்களைச் சுற்றிலும் அழகான நீண்ட புருவம். கொள்ளை அழகாய் கண் இமைகள். கன்னங்கரேல் என்று இருக்கும் கண் இமைகளின் அழகில் சொக்கிக் கிடந்த ஹு வின் மனதில் சடார் என ஒரு பொறி; சிந்தனை; கேள்வி.
ஏன் மனிதருக்கும் சில விலங்குகளுக்கும் மட்டும் கண் இமை உள்ளது? கண் இமைக்கு ஏதாவது பயன் உள்ளதா, இல்லையா? முகத்துக்கு அழகு சேர்க்கும் வெற்று உறுப்புதானா?
வெறும் ஊகம் தானா?
தூசுகளை வரவிடாமல் தடுக்க ஜன்னலில் இடும் வலைக்கம்பி போலக் கண்களைத் தூசிலிருந்து பாதுகாக்கக் கண் இமைகள் உதவுகின்றன எனச் சில விஞ்ஞானிகள் ஏற்கனவே கருத்துத் தெரிவித்து இருந்தனர். கண் விழிப்படலம் ஈரப்பசை கொண்டது. சுற்றிலும் உள்ள காற்றில் உள்ள தூசு மற்றும் பாக்டீரியா கண்களில் விழுந்து பாதிப்பு உண்டாக்க முடியும் அல்லவா? அவ்வாறு தூசு தும்புகள் விழாமல் இமையில் உள்ள முடிகள் கண்களைப் பாதுகாக்கின்றன என இந்த அறிஞர்கள் கருத்துத் தெரிவித்து இருந்தனர்.
இதைக் குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து பார்த்த ஹு இந்தக் கருதுகோள்கள் வெறும் ஊகம் தான் எனவும், உள்ளபடியே தூசைத் தடுக்கும் கருவியாகச் செயல்படுகிறதா என்பதற்கு எந்தப் பரிசோதனையும் இதுவரை செய்யப்படவில்லை எனக் கண்டார். எத்துணை பெரிய அறிஞர் கூற்று என்றாலும் பரிசோதனைச் சான்றுகள் இல்லாமல் அறிவியல் ஏற்பதில்லை அல்லவா?
தனது மகளின் கண் இமை அழகில் மயங்கிப்போன ஹு கண் இமைகளின் பயன் குறித்து ஆராய்ச்சி செய்து பார்த்திட முடிவுசெய்தார். தனது ஆய்வு மாணவர் குயிலேர்மோ அமடோர் (Guillermo Amador)ஐ நியூயார்க்கில் உள்ள இயற்கை வரலாறு மியூசியம் சென்று அங்குப் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள விலங்குகளின் கண் இமை அளவுகளை அளந்து வருமாறு பணித்தார்.
மூன்றில் ஒன்று
ஒரு தேங்காயின் அளவே இருக்கும் அமூர் விலங்கு மற்றும் சிறுத்தை, முயல், ஆடு, கங்காரு, யானை முதல் பனைமரம் போல நெட்டையாக இருக்கும் ஒட்டகச்சிவிங்கி வரை பல தரப்பட்ட 22 விலங்குகளின் கண் இமைகள் குறித்த தரவுகளைச் சேகரித்தார் அமடோர். விதிவிலக்காக இருந்த ஒரு யானையைத் தவிர ஏனைய விலங்குகளிலிருந்து சேகரித்த தரவுகளில் ஒரு ஒழுங்கு இருப்பதைக் கண்டார் அவர். எல்லா விலங்குகளிலும் கண் இமையின் நீளம் அவற்றின் கண்களின் மூன்றில் ஒரு பகுதியாக இருந்தது.
ஏன் எல்லா விலங்குகளிலும் கண் இமை மூன்றில் ஒரு பகுதியாக இருக்கிறது என வியந்தார் ஹு. இதனைச் சோதனை செய்து பார்க்கத் துணிந்தார் அவர். குறிப்பிட்ட அளவு இமை நீளம் கண்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு தருகிறதா எனச் சோதனை செய்து ஆராயத் தீர்மானம் செய்தார் அவர்.
செயற்கையான கண் சோதனை
ஈரப்பசை கொண்ட கண் விழிப்படலம் போல வட்ட வடிவில் சற்றே நீர் நிரம்பியுள்ள சிறு வட்டை எடுத்துக்கொண்டார் ஹு. 4 மிமீ ஆழம் மற்றும் 20 மிமீ விட்டம் உடைய வட்டு அது. அந்த வட்டைச் சுற்றிலும் பெண்களுக்கான அழகு நிலையத்தில் விற்கும் பிளாஸ்டிக்கினால் ஆன செயற்கை கண் இமைகளை எடுத்து கண்ணைச் சுற்றி உள்ள கண் இமை போல அந்த வட்டின் விளிம்பில் பொருத்தினார் அவர். சிறு மின்விசிறி கொண்டு செயற்கை கண் அமைப்பு மீது தூசு மற்றும் காற்றை வீசினார்.
நடக்கும்போது நம் கண்களில் வீசும் காற்றுக்கும் ஓடும்போது நம் கண்களில் படும் காற்றுக்கும் வித்தியாசம் உண்டு அல்லவா? எனவே இரண்டு வேகத்தில் மின்விசிறியை இயக்கி வெவ்வேறு வேகத்தில் காற்றை வீசி ஆராய்ந்தார். ஒவ்வொரு முறையும் எவ்வளவு நீர் ஆவியாகிப் போகிறது என அளந்தார். அதே போல ப்ளோசரன்ட் திவலைகளை மின்விசிறி கொண்டு வீசி அதில் எவ்வளவு வட்டில் படிகிறது என அளந்து தூசு பரவுவதை ஆராய்ந்தனர்.
எவ்வளவு தூசி படிகிறது எனவும் கணக்கு செய்தனர். அதே போல கண் இமைகளின் நீளத்தைக் கூட்டியும் குறைத்தும் ஆராய்ந்து பார்த்தனர். இவ்வாறு கவனமாகக் கணக்கு எடுத்துத் தரவுகளைச் சேகரித்தனர். அந்த வட்டைச் சுற்றியுள்ள செயற்கை கண் இமைகளின் நீளத்தைக் கூட்டியும் குறைத்தும் தரவுகளைச் சேகரித்தனர்.
இவ்வாறு நுட்பமாகச் செய்த ஆய்வில் கண் இமையில் உள்ள முடியின் நீளம் கண்களின் மூன்றில் ஒரு பகுதி அளவு கொண்டதாக இருக்கும் போதுதான் மிகக் குறைவான உலர்தலும் மிகக் குறைவாகத் தூசு படிவதும் ஏற்படுகிறது எனக் கண்டனர்.
வேகத்தடை போல
கண் இமையின் முடி உள்ளபடியே ரோட்டில் உள்ள வேகத்தடை போலத் தடை ஏற்படுத்தி வீசும் காற்றைக் கண்களில் விழாமல் திசைதிருப்பிவிடுகிறது எனத் தமது ஆய்வில் கண்டனர். கண் இமையில் முடி இல்லாத நிலையில் கண் உலர்ந்து போகும் என்பது மட்டுமல்ல, காற்றில் மிதந்துவரும் பாக்டீரியா போன்ற தூசுப் பொருள்கள் கண்ணில் படிந்து கண் நோயை ஏற்படுத்தக்கூடும். உள்ளபடியே சில சருமநோய் காரணமாகக் கண் இமையில் உள்ள முடிகளை இழக்கும் நோயாளிகளுக்குக் கூடுதலாகக் கண் நோய் ஏற்படுகிறது.
வேகத்தடை உயரம் மேலும் கூடும் போது கண் இமையின் முடிக்கு தூசு மற்றும் உலர்தலைத் தடுக்கும் திறன் அதிகரிக்கும் என நாம் எதிர்பார்ப்பது இயல்பு. அவ்வாறே மூன்றில் ஒரு பகுதி நீளம் வரை பாதுகாப்புத் திறன் அதிகரிக்கிறது. ஆனால், அதற்கும் மேலாக, முடியின் நீளம் அதிகரிக்கும்போது அந்த இமையின் முடிகளே காற்றைக் கண்ணுக்குள் செலுத்திக் கண்களை மேலும் விரைவாக உலரச் செய்துவிடுகிறது எனக் கண்டனர். சரியான அளவில் கண் இமை இருக்கும் போது உலர்தல் சுமார் 50 சதவீதம் குறைகிறது எனவும் கண்டனர்.
ஒட்டகத்தின் இமை
தாம் ஆய்வு செய்தது சரிதானா என மேலும் சோதனை செய்து பார்க்கும் விதமாகக் கணினியில் சிமுலேஷன் செய்தும் சோதனை செய்தனர். மூன்றில் ஒருபகுதி நீளத்தில் கண் இமையின் முடிகள் இருக்கும்போது பெரும்பாலான காற்று அதில் பட்டுத் தெறித்து வேறு திசையில் சென்று விடுகிறது. மேலும் கண் இமை முடிகள் வீசும் காற்றின் வேகத்தை மட்டுப்படுத்தி விழிப்படலம் மீது மெதுவாக வீசும் காற்று அடுக்கை உருவாக்குகிறது என இந்த சிமுலேஷன் சோதனை உறுதி செய்தது.
மெதுவாக வீசும் காற்று கண்ணில் உள்ள நீர்ப் பசையை எடுத்துச்செல்வது எளிதல்ல. எனவே, கண் விரைவில் உலர்ந்துவிடாமல் இருக்கிறது. ஆனால் கண் இமையின் முடி நீளம் கூடும்போது வீசும் காற்றைக் குழல் வடிவில் வளைத்து விடுகிறது. எனவே காற்று உள்ளபடியே கண்களை நோக்கிச் சீராகச் செலுத்தப்பட்டுக் கண் ஈரப்பசை உலர்தல் விரைவுபடுத்தப்படுகிறது.
அடர்த்தியாக உள்ள இமைகளும் கண்களைப் பாதுகாப்பதில் உதவுகின்றன என இந்த ஆய்வு காட்டுகிறது. எனவே தான் இரண்டு அடுக்கு கண் இமைகள் உள்ள ஒட்டகம் தூசு மற்றும் மணல் புயல் ஏற்படும் பாலைவனங்களில் வாழ முடிகிறது.
கண் இமையின் நீளம் கூடினாலும் குறைந்தாலும் விரைவில் கண்களை உலரச்செய்துவிடுகிறது என அவரது ஆய்வு கூறுகிறது எனவே, அழகை கூட்டுவதற்காகச் செயற்கையான, நீளமானக் கண் இமையைப் பொருத்து வது தீங்கு எனவும் கூறுகிறார் ஹு.
விமர்சனமும் பாராட்டும்
பலரால் பாராட்டப்பட்டாலும் இந்த ஆய்வு வேகமாக ஓடும் விலங்குகளில் காற்று ஏற்படுத்தும் தாக்கம் வித்தியாசமாக இருக்கும் என்பதைக் கணக்கில் கொள்ளவில்லை என விமர்சனம் செய்கின்றனர் சிலர். இன்னும் கூடுதல் ஆய்வுகளை மேற்கொண்டுதான் கண் இமையின் முடிகள் செயல்படுவது குறித்து முழுமையான முடிவுக்கு வரமுடியும் என ஹு கூறுகிறார்.
ஆயினும் எதிர்காலத்தில் தூசு தும்பு உள்ள இடங்களில் பணி செய்யும் ரோபோட் மனித இயந்திரத்தின் கண்களுக்குப் பாதுகாப்பு தருவது முதல் சூரிய மின் உற்பத்தி தகடுகளில் தூசு படிந்து மின் உற்பத்தி பாதிக்கும் இன்றைய சிக்கல் வரை உள்ள பல சவால்களைச் சந்திக்கக் கண் இமை குறித்த இந்த ஆய்வு உதவும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
கட்டுரையாளர், புதுடெல்லியில் உள்ள விக்யான் பிரச்சார் நிறுவனத்தின் விஞ்ஞானி.
தொடர்புக்கு: tvv123@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago